அப்துல்லா, உனது விருப்பம் என்ன?

அப்துல்லா, உனது விருப்பம் என்ன?
Updated on
1 min read

அக்காலத்தில் வாழ்ந்த ஒரு சூபி ஞானி, தனது வாழ்க்கை முழுவதும் ஆனந்தமாக இருந்தார். அவரை யாருமே கவலையோடு பார்த்ததே இல்லை. அவர் எப்போதும் சிரித்துக்கொண்டே இருந்தார். அவரது மொத்த இருப்பே ஒரு விழாவின் நறுமணத்துடன் இருந்தது.

அவர் முதுமையை அடைந்தார். அவரது மரண தருணத்திலும் அவர் தன்னைத் தழுவும் மரணத்தை ரசித்துக்கொண்டே சிரித்தபடி இருந்தார்.

அவரது சீடன் ஒருவன், “உங்களைப் பார்த்தால் ஆச்சரியமாக இருக்கிறது. இப்போது நீங்கள் இறந்துகொண்டிருக்கிறீர்கள்? அப்படியும் சிரிக்கிறீர்கள். நீங்கள் ஏன் இப்படி இருக்கிறீர்கள்? சாவதில் என்ன வேடிக்கை இருக்கிறது? நாங்கள் சோகமாக இருக்கிறோம்.

ஏன் எப்போதும் சிரித்துக்கொண்டே இருக்கிறீர்கள் என்ற கேள்வியை உங்களிடம் கேட்க நாங்கள் பலமுறை விரும்பியுள்ளோம். ஆனால் சாவைச் சந்திக்கும் இந்த நேரத்திலும் சிரிக்கிறீர்கள். எப்படி?” என்று கேட்டான்.

அந்த சூபி சொன்னார். “அது மிக எளிமையானது. பதினேழு வயதில் என் குருவைக் காணச் சென்றேன். அந்த வயதிலேயே நான் மனம் முழுவதும் கவலையுடன் பரிதாபமாக இருந்தேன். எனது குருவுக்கோ 70 வயது.

அவர் ஒரு மரத்தின் கீழே அமர்ந்திருந்து காரணமே இல்லாமல் சிரித்துக் கொண்டிருந்தார். வயிற்றைப் பிடித்துக்கொண்டு சிரித்தார். நான் அவரைப் பார்த்து என்ன விஷயம் என்று கேட்டேன். உங்களுக்குப் பைத்தியமா என்றும் கேட்டேன்.”

அவர் சொன்னார். “ஒரு காலத்தில் நானும் உன்னைப் போல வருத்தமாக இருந்தேன். ஒரு நாள் அது மாறியது. அதுமுதல் ஒவ்வொரு நாள் எழும்போதும், காலையில் கண் விழிப்பதற்கு முன்னர், நான் என்னிடமே எனது பெயரைச் சொல்லிக் கேட்பேன்.

அப்துல்லா, உனக்கு என்ன விருப்பம்? துக்கமா? ஆனந்தமா? இன்று எதைத் தேர்வு செய்யப்போகிறாய் என்று கேட்டுக்கொள்வேன். நான் ஆனந்தத்தையே தேர்வு செய்ய நேர்ந்தது.

அது ஒரு தேர்வுதான். அதை முயற்சி செய்து பார். காலையில் எழுந்தவுடன் உங்களையே கேட்டுக் கொள்ளுங்கள். ‘அப்துல்லா, என்ன திட்டம் உனக்கு? நீ தேர்வு செய்யப்போவது துக்கத்தையா? சந்தோஷத்தையா?”

யார்தான் துக்கத்தைத் தேர்வு செய்வார்கள்? எதற்கு நாம் துக்கத்தை தேர்வு செய்ய வேண்டும்? அது இயல்பற்றது. ஒருவர் துக்கத்தில் ஆனந்தமாக உணர்ந்தால் மட்டுமே அதை தேர்வு செய்ய வேண்டும். ஆனந்தத்தையே தேர்வு செய்யுங்கள்.

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in