Published : 07 Jun 2018 11:03 AM
Last Updated : 07 Jun 2018 11:03 AM

உயிர் வளர்க்கும் திருமந்திரம் 34: கடவுள் கோப்பையாகவே இருக்கிறார்

மால்அறியா நான்முகனும்

காணா மலையினைநாம்

போல்அறிவாம் என்றுஉள்ள

பொக்கங்களே பேசும்

பால்ஊறு தேன்வாய்ப்

படிறீ கடை திறவாய்...

(திருவாசகம், திருவெம்பாவை, 5)

என்று ஒரு மணிவாசகப் பாட்டு. தெரிந்த கதைதான். திருமாலுக்கும் நான்முகனுக்கும் யார் பெரியவர் என்று சண்டை வந்தது. ‘நான்’, ‘நான்’ என்றார்கள் இருவரும். யார் என்று இறுதி செய்துகொள்வதற்காகச் சிவனாரிடம் போனார்கள். அண்ணாமலையாய் எழுந்து நின்ற சிவனார், ‘ஒருவர் அடியைத் தேடுக; மற்றவர் முடியைத் தேடுக; முதலில் கண்டு வந்தவர் முதல்வர்’ என்றார். முதல்வராகும் தகுதியை இருவருமே பெறவில்லை என்று கதை.

நிலவரம் அப்படியிருக்க, ‘திருமாலும் நான்முகனும் கண்டறிய முடியாத அண்ணாமலையினை நான் அறிவேன்’ என்று சொன்னாளாம் ஒருத்தி. ‘அடி வஞ்சகீ! எவ்வளவு பெரிய பொய்? உப்புச்சப்பில்லாத பச்சரிசி மாவுக் கொழுக்கட்டையை, வெல்லப்பாகும் தேங்காய்ப்பாலும் ஊற்றிப் பால் கொழுக்கட்டை ஆக்கிச் சுவையுணவாக ஆக்குவதைப்போல, உன்னுடைய பச்சைப் பொய்யைப் பாலும் தேனும் கலந்த இனித்த சொற்களில் ஊறப் போட்டுப் மெய்போலத் தோற்றுவிக்கிறாயேடீ, புளுகுணி மட்டை! வெள்ளென எழுந்திருந்து மார்கழி நீராடிச் ‘சிவனே சிவனே’ என்று நினைந்து வழிபடத் துப்பில்லாதவள், எட்டு ஊருக்குப் பேசும் பேச்சைப் பார்த்தாயா, வெண்கலக் கட்டை, கதவைத் திறடீ!’ என்று சினந்தார்களாம் தோழிமார்கள்.

‘பொக்கம்’—அழகாக இருக்கிறது இல்லையா இந்தச் சொல்? பொக்கம் என்றால் பொந்து. மரத்திலும் கல்லிலும் உள்ள பொந்து. உள்ளீடாக ஒன்றுமே இல்லாமல் வெற்றுக் குடைவாக இருப்பது. பல் என்கிற உள்ளீடு இல்லாமல் வெறும் பொந்தாக இருக்கும் வாய் பொக்கை வாய்; உள்ளீடு இல்லாத வெற்றுக் கடலைக்குப் பெயர் பொக்குக் கடலை; உள்ளீடு இல்லாத சிறிய கொப்புளத்துக்குப் பெயர் பொக்குளம்; கருதத்தக்க உள்ளீடாக ஒன்றுமில்லாமல் எதையோ நிரப்பி வைத்திருக்கும் பிச்சைக்காரனின் பைக்குப் பெயர் பொக்கணம்; உள்ளீடற்றுச் செய்யப்படும் சம்புடத்துக்குப் பெயரும் பொக்கணம்; உள்ளீடற்ற பொக்கணங்களில் அரும்பெரும் பொருள்களைப் பதுக்கி வைத்தால் அது பொக்கிஷம்.

சாம்பல்தானே பொக்கம்தானே?

சம்புடம்போலவே உள்ளீடு இல்லாமல் உட்குழிந்திருக்கும் மண்டையோடும் பொக்கணந்தான். இந்தப் பொக்கணத்தைச் சம்புடமாகப் பாவித்துத் திருநீறு வைத்துக்கொள்வார்கள் சில சைவர்கள். திருநீறும் உள்ளீடற்று, வெறும் அடையாளமாக, வெண்ணிலையாக இருக்கிற, சாம்பல்தானே? பொக்கம்தானே?

நக்கன்காண்; நக்கரவம்

அரையில் ஆர்த்த

நாதன்காண்; பூதகணம் ஆடஆடும்

சொக்கன்காண்; கொக்குஇறகு

சூடி னான்காண்;

துடிஇடையாள் துணைமுலைக்குச்

சேர்வதுஆகும்

பொக்கன்காண்; பொக்கணத்த

வெண்நீற் றான்காண்...

(தேவாரம், 6:87:2)

உடுத்த உடை இல்லாத நக்கன்; அரைஞாணாகக் கட்டிக்கொள்ள வெள்ளிக் கொடியோ பட்டுக் கயிறோ இல்லாது நச்சுப் பாம்பெடுத்து இடையில் சுற்றிக்கொண்ட நாதன்; குற்றேவல் பூதங்களை ஆட்டத் தானே நின்றாடும் சொக்கன்; சூடிக்கொள்ள மயிலிறகும் கிடைக்காமல் கொக்கின் இறகைச் சூடிய திக்கன். ஆகமொத்தம் ஆண்டி. போகட்டும். இவ்வளவு சொன்ன திருநாவுக்கரசர் மேலும் சொல்கிறார்: அவன் உள்ளீடே இல்லாத பொக்கன். ‘இதென்ன கதை? இறைவனாக இருக்கிறவன் உள்ளீடே இல்லாத பொக்கனாக எப்படி இருக்க முடியும்?’ என்றால், அவன் மங்கை பாகன் இல்லையா? துடி இடையாளின் துணை முலைக்குத் தன்னில் ஒரு பாதி இடம் கொடுத்த பங்கன் இல்லையா? இடம் கொடுப்பது எப்போது நிகழமுடியும்? ஓர் இடத்தில் வேறு ஏதும் இல்லாமல், அந்த இடம் பொக்கமாக இருந்தால்தானே ஒரு பொருளுக்கு இடம் கொடுக்க முடியும், அந்தப் பொருள் அந்த இடத்தை நிரப்ப முடியும்? இறைவி இறைவனை நிரப்புகிறாள் என்றால் அவன் உள்ளீடற்ற பொக்கன்தானே? பொக்கனாகிய அவன் பொக்கணமாகிய மண்டையோட்டுச் சம்புடத்தில் பணமதிப்பற்ற பொக்கமாகிய திருநீற்றை வைத்திருக்கிறான் என்று பேசுகிறார் திருநாவுக்கரசர்.

பொக்கம் என்றால் பொய் அல்லவா? வஞ்சகம் அல்லவா? இறைவன் பொக்கன் என்றால் அவன் பொய்யனா? வஞ்சகனா என்றொரு கேள்வி எழக்கூடும். உள்ளீடற்ற ஒன்று உள்ளீடு உள்ளதாகத் தன்னைக் காட்டிக்கொண்டால் அது பொய்; வஞ்சகம். எம்பாவைப் பெண் அதனால்தான் ‘பொக்கம் பேசும் வஞ்சகீ’ என்று தோழிகளால் செல்லம் கொஞ்சப்படுகிறாள். ஆனால் உள்ளீடற்ற ஒன்று உள்ளீடற்றதாகவே தன்னை முன்வைத்தால் அது எப்படிப் பொய்? எப்படி வஞ்சகம்? அதுதானே மெய்? தான் உள்ளீடற்ற பொக்கன் என்பதைக்கூட வெளிப்படக் காட்டும் இந்த இறைவன் பொய்சொல்லா மெய்யன் இல்லையா?

தனக்குள் இருத்திக்கொள்கிற இறைவன்

உள்ளீடற்ற கடவுள் என்கிற கருதுகோள் எவ்வளவு பெரிய வரம்! கோப்பை உள்ளீடற்றதாக இருந்தால் அதில் நம் விருப்பம்போல எதை வேண்டுமானாலும் ஊற்றி நிரப்பிக்கொள்ளலாம் அல்லவா? தேநீர் ஊற்றி நிரப்ப விரும்புகிறவர் தேநீரை ஊற்றிவிட்டு, இது தேநீர்க் கோப்பை எனலாம்; மது ஊற்றி நிரப்ப விரும்புகிறவர் மதுவை ஊற்றிவிட்டு, இது மதுக்கோப்பை எனலாம்; தண்ணீர் ஊற்றி நிரப்ப விரும்புகிறவர் தண்ணீரை ஊற்றிவிட்டு, இது தண்ணீர்க் கோப்பை எனலாம். ஆனால் கோப்பையோ இவற்றில் எந்தக் கோப்பையும் அன்று; அது உள்ளீடற்ற காலிக் கோப்பை; எதை வேண்டுமானாலும் நிரப்பிக்கொள்ளுமாறு எல்லாவற்றுக்கும் இடம்தந்து நிற்கிற பொக்கணம்.

ஆதாரம், ஆதேயம் என்று திருமந்திரத்தில் பேசப்படும். ஆதாரம் என்பது எல்லாவற்றையும் தாங்குவது. ஆதேயம் என்பது அதில் தங்குவது. இறைவன் ஆதாரம். ஏனைய எல்லாம் ஆதேயங்கள். இறைவன் ஆதாரமாக இருந்து, அதாவது உள்ளீடற்றவனாக இருந்து எல்லாவற்றையும் தாங்குகின்றான்; தனக்குள் இருத்திக்கொள்கின்றான்.

இறைவன் ஒன்றுமற்றவன். பொக்கன். எல்லாவற்றுக்கும் இடம் தருகிறவன் எனில் அப்படித்தானே இறைவனைப் பார்க்க வேண்டும்? நம் விருப்பத்தின்பேரில் அவனுக்குள் எது எதையோ ஊற்றி நிரப்பிவிட்டு, ‘இவன்தான் இறைவன்; இனிதே காண்க’ என்றால் அது சரியா? வண்ணங்களற்ற இறைவனுக்குச் சமயங்கள் தத்தமக்குத் தோன்றிய வகையில் ‘மஞ்சள் போடு, சிவப்புப் போடு, நீலம் போடு’ என்று வண்ணம் பூசி விடுகின்றன. ஆறு சமயங்கள்; ஆறு வண்ணங்கள்; ஆறு இறைவர்கள் என்றால் அது முறையா? ஆறாகவும் பத்தாகவும் பிரிந்து நிற்க, இறைவன் என்ன ஐபிஎல் கிரிக்கெட்டின் வண்ணத் தூதுவனா அல்லது அணி முதலாளியா?

இமையங்க ளாய்நின்ற தேவர்கள் ஆறு

சமையங்கள் பெற்றனர்; சாத்திரம் ஓதி,

அமைஅறிந் தோம்என்பர் ஆதிப் பிரானும்

கமைஅறிந் தார்உள் கலந்துநின் றானே.

(திருமந்திரம் 1550)

மலைகளைப்போல வணங்காமல் நிற்கிற தேவர்கள் அவரவர் சார்புகளுக்கு ஏற்ப ஆறு சமயங்களின் வழியாகக் கடவுளைத் தேடினர். அந்தந்தச் சமயங்களின் சாத்திரங்களைக் கற்றனர்; ஓதினர். ஓதிவிட்டதாலேயே கடவுளை அறிந்துவிட்டோம் என்று கூவினர். ஆனால் கடவுளோ அவர்களுக்குத் தோன்றாமல், யார் என்ன சொல்லிக் கூவினாலும் பொறுத்துக்கொண்டு வண்ணத்தை அல்லாமல் சாரத்தை நாடுகிறவர்களின் உள்ளத்தில் தோன்றி நின்றான். அப்படியென்றால் அந்த ஆறு சமயங்கள்?

நூறு சமயம் உளவா நுவலுங்கால்;

ஆறு சமயம்அவ் வாறுஉள் படுவன;

கூறு சமயங்கள் கொண்ட நெறிநில்லா

ஈறு பரநெறி இல்லா நெறிஅன்றே.

(திருமந்திரம் 1537)

ஆறென்ன ஆறு? பார்க்கப் போனால் நூறு சமயங்கள் இருக்கின்றன; அதற்கு மேலும்கூட இருக்கலாம். எல்லாமே ஆளுக்கொரு கோப்பையைக் கையில் வைத்துக்கொண்டு, அதில் எதையோ ஊற்றி நிரப்பிக்கொண்டு, கடவுள் எங்கள் கோப்பைக்குள் இருக்கிறார் என்கின்றன. ஆனால் கடவுள் கோப்பைக்குள் இல்லை; கோப்பையாகவே இருக்கிறார் என்று அவற்றுக்குப் புரியவே இல்லை. இவற்றின் நெறிகள் எதுவும் இறைவனுக்கு இட்டுச் செல்லும் நெறிகள் இல்லை.

நெக்கு நெக்கு நினைப்பவர் நெஞ்சுளே

புக்கு நிற்கும் பொன்னார்சடைப் புண்ணியன்,

பொக்கம் மிக்கவர் பூவும்நீ ரும்கண்டு

நக்கு நிற்பர் அவர்தம்மை நாணியே

(தேவாரம், 5:90:9)

-என்கிறார் திருநாவுக்கரசர். எந்தப் பாவனையும் இல்லாமல் நெகிழ்ந்து நிற்பவர்களின் நெஞ்சுக்குள் தானாகவே நுழைந்துவிடுகின்ற இறைவன், நெஞ்சில் பொய்யோடும் கையில் பூவோடும் நிற்பவர்களைக் கண்டு கேலியாகச் சிரிப்பானாம்.

பொக்கம் விட்டால் பக்கம் வருவான் பொக்கன்.

(வஞ்சம் விடுவோம்)

கட்டுரையாஇசிரியர், தொடர்புக்கு : arumugatamilan@gmail.com

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x