Last Updated : 07 Jun, 2018 11:02 AM

 

Published : 07 Jun 2018 11:02 AM
Last Updated : 07 Jun 2018 11:02 AM

ஒன்றில் இரண்டு 01: காலடி பணிவோம்

திர்பாராத கோணத்தில் இரண்டு ஒன்றாகும்போது, அதன் தனித்துவமே அலாதிதான். அந்த சங்கம நிலை பல படிப்பினைகளை நமக்கு அளிக்கக்கூடியது. அப்படி மனிதனின் கோணத்தில் வியப்பை உண்டாக்கும் ‘ஒன்றில் இரண்டு’ தன்மை கொண்ட பெரும்பேறு பெற்ற தலங்களைப் பற்றிய தொடர் இது.

இந்து மதத்தைப் பொருத்தவரை ஒன்றில் இரண்டு என்பதற்கான உச்சம் ஆதிசங்கரர் பிரபலப்படுத்திய ‘அத்வைத சித்தாந்தம்’ எனலாம்.

அத்வைதம் என்பது என்ன? த்வைதம் என்றால் இரண்டு. அத்வைதம் என்பது இரண்டற்ற நிலை. ஜீவன் என்பதும் இறைவன் என்பதும் ஒன்றுதான். இறைவன் எல்லா உயிரினங்களுக்குள்ளும் ஆத்மாவாக விளங்குகிறான் என்கிறது அத்வைதம். ‘நமக்குள் இறைவன் இருக்கிறார். இறைவன் வேறு நாம் வேறு அல்ல’ என்பதைப் பலரும் உணர முடியாமல் இருப்பதற்குக் காரணம் மாயைதான்.

அத்வைத தத்துவத்தை ஆதிசங்கரர் தொகுத்தார், எழுதினார். அதே சயம் இதை யாருக்கும் இவர் நேடியாக உபதேசிக்கவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.

எட்டாம் நூற்றாண்டில் வாழ்ந்தவர் ஆதிசங்கரர். பவுத்தமும் சமணமும் கொடிகட்டிப் பறந்த காலத்தில் இந்து மதத்துக்குப் புத்துயிர் அளித்தார். இரண்டு சமயத்தினருக்கும் பகை நிலவிய ஒரு காலகட்டத்தில் ஆக்கபூர்வமான காரியங்களில் ஈடுபட்டு, விவாதங்களில் பங்குபெற்று நாடு முழுவதும் பிரிந்திருந்த சமயங்களை இணைத்தவர்.

மோட்சத்துக்கு எது வழிவகுக்கும்?

அப்போது மீமாம்சம் என்ற பிரிவு ஒன்று இருந்தது. ‘வேதங்கள் யாகங்களை நடத்தச் சொல்கின்றன. உயிர்பலிகளை அளிக்கச் சொல்கின்றன. இவற்றை ஒழுங்காகச் செய்துவிட்டாலே போதும். அப்படிச் செய்தவருக்கு மோட்சம் கிடைத்துவிடும்’ என்பதுதான் அந்தப் பிரிவின் முடிவு. ஆனால் ஆதிசங்கரரின் கொள்கை நேரெதிரானது. ‘கர்மங்கள் என்பவை ஆரம்ப நிலைதான். ஞானம் பெறுவது ஒன்றே மோட்சத்துக்கு வழிவகுக்கும்’. அதாவது மாயையிலிருந்து விடுபடும்போது ஞானம் கிடைக்கும். அத்வைதம் தெரியவரும்.

ஆதிசங்கரருக்கு முன்பே அத்வைதம் இருந்தது என்பதை அவரே தன் உரைகளில் குறிப்பிட்டிருக்கிறார். யாக்ஞவல்க்யர், உத்தாலகர் ஆகியோர் இது குறித்துப் பேசியிருக்கிறார்கள். ஆதிசங்கரரின் குருவான கோவிந்தபாதர் மற்றும் அவருக்கும் குருவான கெளடபாதர் ஆகியோர் குறித்து ஆதிசங்கரர் குறிப்பிட்டிருக்கிறார். அவர்களும் அத்வைதத்தை நம்பியவர்கள்தான்.

32 வருடங்கள்தான் வாழ்ந்திருக்கிறார் ஆதிசங்கரர். அத்வைதத்தைப் பரப்பிய ஆதிசங்கரரின் பிறந்த ஊர் கேரளத்தின் எர்ணாகுளம் மாவட்டத்தில் உள்ளது. அந்த ஊரின் பெயர் காலடி. பெரியாறு நதிக்குக் கிழக்கே உள்ள ஊர் அது.

காலடியில் ஆதிசங்கரருக்கான ஆலயம் ஒன்று பெரியாறு நதிக்கரையில் உள்ளது. சிருங்கேரி மடத்தால் நடத்தப்படுகிறது. இங்கு இரண்டு முக்கிய சன்னிதிகள் உள்ளன. ஒன்று ஆதிசங்கரருக்கானது மற்றொன்று சரஸ்வதியின் வடிவமான சாரதாம்பாளுக்கானது. கேரளாவில் இருந்தாலும் இந்த ஆலயத்தில் பூஜை செய்பவர்கள் தமிழகம் மற்றும் கர்நாடகத்தைச் சேர்ந்த அர்ச்சகர்கள்தான்.

அன்னையின் ஆணை

ஆதிசங்கரரின் அன்னை ஆர்யாம்பாளின் சமாதியும் இங்கு உள்ளது. ‘’நான் இறக்கும் தறுவாயில் நீ என்னிடத்துக்கு வரவேண்டும். வந்து எனக்கு இறுதிச் சடங்குகளைச் செய்ய வேண்டும்’’ என்றார் அன்னை. அவருக்கு அளித்த வாக்குறுதியைத் துறவியான போதிலும் நிறைவேற்றினார் ஆதிசங்கரர்.

அன்னை இறந்தபோது ஊர் மக்கள் அவருக்கு இறுதி மரியாதை செய்ய முட்டுக்கட்டை போட்டனர். ‘’துறவியாக இருக்கும் ஒருவர் தன் அம்மாவுக்கு இறுதிக் காரியம் செய்யத் தகுதியற்றவர்’’ என்றனர். அமைதியுடன் இதைக் கவனித்த ஆதிசங்கரர் அந்த வீட்டின் பின்புறம் தன் அன்னைக்கு சிதையை அடுக்கினார். அக்னி தேவதையை அழைத்தார். சிதை தீப்பற்றியது.

மகனின் உதவியால் முக்தி நிலையை எய்துவது எவ்வளவு பெரிய பாக்கியம்! அது ஆர்யாம்பாளுக்குக் குறைவறக் கிடைத்தது.

ராமகிருஷ்ணர் மடம், இங்கு ராமகிருஷ்ண அத்வைத ஆசிரமம் ஒன்றை எழுப்பியுள்ளது. ஆதிசங்கரர் பிறந்த இடம் என்று பலராலும் ஏற்றுக்கொள்ளப்பட்ட இடத்தின் அருகே உள்ளது. காலடி என்று இப்போது அழைக்கப்படுகிற அந்தக் கிராமத்தின் முந்தைய பெயர் சாசலம். அப்போது நம்பூதிரி பிராமணர்கள் நிறைந்த கிராமமாக அது இருந்தது.

சிருங்கேரி பீடத்தின் 33-வது சங்கராச்சாரியர் ஸ்ரீநரசிம்ம பாரதி. ஆதிசங்கரரின் அவதாரத் தலமான காலடி தனித்துவமும் மகத்துவமும் பெற வேண்டும் என ஆர்வம் கொண்டார். அவரது ஆர்வத்தை மதித்த திருவாங்கூர் மகாராஜா ஸ்ரீரவிவர்மா, காலடியின் ஒரு பகுதியை சிருங்கேரி மடத்துக்கு ஒப்படைத்தார். அங்கு சாரதாம்பாள், ஆதிசங்கரர் இருவருக்குமான ஆலயங்கள் எழுப்பப்பட்டன. பின்னர் வேதாந்த வகுப்புகளும் வேத பாடசாலையும் அங்கு அமைந்தன.

பூர்ணா நதியில் முதலை

ஆதிசங்கரர் வாழ்வில் பூர்ணா நதிக்கு (அதன் தற்போதைய பெயர்தான் பெரியாறு) தனி இடம் உண்டு. அந்த இரு சம்பவங்களிலுமே அவரது அன்னைக்கும் தொடர்பு உண்டு.

ஆர்யாம்பாளுக்கு வயது முதிர்ந்து விட்டது. பூர்ணா நதியோ வீட்டிலிருந்து சற்றே தொலைவில் அமைந்திருந்தது. அன்னையின் வசதிக்காக வீட்டுக்கு அருகிலேயே நதி வரவேண்டும் என்று பாலகன் சங்கரன் ‘மனமுருகிக் கட்டளையிட’ (!) அந்த நதி ஒரு சிறு கிளையாகப் பிரிந்து அவர்கள் வீட்டுப் பக்கமாக வரத் தொடங்கியது.

பூர்ணா நதியில் நாம் ஸ்நானம் செய்யும்போது ஏதோ ஒரு முதலை அருகில் இருப்பதுபோலவே ஒரு பிரமை. முதலையின் பிடியைப் போலவே தேகத்தினுடையதும் சொந்தங்களுடைய பிடியும் வலுவானதே.

பூர்ணா நதியில் குளித்துக் கொண்டிருக்கையில் முதலை ஒன்று சங்கரனின் காலைப் பற்றிக் கொண்டது. அங்கிருந்தவர்கள் ‘’உன் மகன் சன்யாசம் மேற்கொள்ள நீ சம்மதித்தால்தான் முதலையின் பிடியிலிருந்து உன் மகனை தப்ப வைக்கலாம்’’ என்றனர். அதாவது இந்தப் பிறவியில் சங்கரனை தன் பிடிக்குள் கொண்டு வர வேண்டும் என்பதுதான் அந்த முதலையின் தலைவிதி. சன்னியாசம் என்பது மறுபிறவி. எனவே அந்த மறுபிறவியில், அந்த முதலைக்குப் பங்களிப்பு ஏதும் இல்லை. வேறு வழியின்றி சங்கரனின் தாய் இதற்கு உடன்பட, முதலை சங்கரனை விடுவித்தது. முதலக்கடவு என்ற பெயரில் அந்தப் பகுதி இப்போதும் அழைக்கப்படுகிறது.

ஸ்ரீசாரதாம்பாள் ஆலயத்தை அணுகுகிறோம். முன்வாசல் வடக்குப்புறம். உள்ளே சாரதாம்பாளின் திருச்சன்னதி தெற்கு நோக்கி அமைந்திருக்கிறது. தக்ஷிணாமூர்த்தி ரூபிணியாகவும் அங்கு சாரதாதேவி குடியிருக்கிறாள். விமான மண்டபத்தின் வெளிச் சுவரில் பல தேவி அம்சங்கள் மகேஸ்வரி, வைஷ்ணவி, வராகி, கெளமாரி எனக் காட்சியளிக்கின்றன.

அடுத்து உள்ளது ஆதிசங்கரரின் திருச்சன்னதி மண்டபம். தென்திசை நோக்கி ஞானமுத்திரையுடன் காட்சி தருகிறார் ஆதிசங்கரர். பெரிய விக்ரகம். அருகில் சிறிய உற்சவமூர்த்தி. மேற்கு நோக்கி குறைந்த தூரம் நடந்தாலே அங்கு இருக்கிறது ஸ்ரீகிருஷ்ணன் கோயில். ஆதிசங்கரரின் முன்னோரின் குலதெய்வம் கிருஷ்ணர். அங்கு குருவாயூரப்பன் காட்சிதருகிறார். விதவிதமாக அவருக்கு அலங்காரம் செய்கிறார்கள். அங்கிருந்து சுமார் ஒரு கிலோ மீட்டர் தொலைவில் காட்சிதருகிறது ஆதிசங்கரர் கீர்த்தி மண்டபம். இது ஒரு சிற்பக்கூடம்.

எட்டு அடுக்கு கொண்டது இந்த ஆதிசங்கரர் கீர்த்தி ஸ்தம்பக மண்டபம். சுமார் 150 அடி உயரத்தில் காட்சியளிக்கும் மண்டபம். மகாபெரியவர் என அறியப்படும் சந்திரசேகர சரஸ்வதி சுவாமிகளின் விருப்பதின் பேரில் உருவான நினைவுத் தூண் இது.

இதன் நுழைவுப் பகுதியில் இரண்டு யானை உருவங்கள் உள்ளன. ஆதிசங்கரர் பாதுகைகளின் பிரதிபலிப்பாக இரு வெள்ளிக் குமிழ்கள் இங்கு உள்ளன. படிகளில் ஏறிச்செல்லும்போது ஆதிசங்கரரின் வாழ்க்கை வரலாறு ஓவியங்களாக விரிகிறது. விநாயகர், ஆதிசங்கரர் ஆகியோரின் உருவச் சிலைகளையும் காண முடிகிறது. ஆதிசங்கரரின் தந்தை சிவகுரு அர்ச்சகராகப் பணிபுரிந்த பகவதி ஆலயம் ஒரு கிலோ மீட்டர் தூரத்தில் அமைந்துள்ளது. இது மாணிக்கமங்களாம்பா ஆலயம் என்றும் அழைக்கப்படுகிறது.

அத்வைத அமைப்பில் அன்னப் பறவைக்குத் தனி இடம் உண்டு. சிருங்கேரி மடத்தின் அதிகாரபூர்வமான முத்திரையில்கூட அன்னத்தைக் காணலாம். பல தொன்மையான ஆலயங்களின் எண்ணெய் விளக்குகள் அன்னப் பறவையின் வடிவில் இருப்பதைக் கவனிக்க முடியும். அன்னத்துக்கு சமஸ்கிருதத்தில் 'ஹம்சம்' என்று பெயர். அத்வைத சித்தாந்த வழியில் வரும் பெரும் ஞானிகளை 'பரமஹம்சர்கள்' என்று கூறுவார்கள். அதாவது மேன்மை பொருந்திய அன்னப் பறவைகள்! அன்னம் தண்ணீரில் இருந்தாலும் அதன் இறக்கையில் உள்ள இறகுகள் உலர்ந்தே காணப்படும்.

பாலிலிருந்து நீரைப் பிரிக்கும் புராண அன்னப் பறவைபோல் மாயையை பிரம்மத்திலிருந்து நீக்கும்போது அத்வைதம் புலப்படும் எனலாம்.

(மாயை களைவோம்) கட்டுரையாசிரியர், தொடர்புக்கு : aruncharanya@gmail.com

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x