

தூ
த்துக்குடி மாவட்டத்திலுள்ள நவ திருப்பதித் தலங்களில் திருக்குருகூர் எனப் போற்றப்படும் ஆழ்வார்திருநகரி குருஸ்தலமாகவும் போற்றப்படுகிறது. காரியார், உடைய நங்கை ஆகியோருக்கு மகனாக, கலியுகம் பிறந்த 43-வது நாளன்று மாதவ மாதமான வைகாசி 12-ம் தேதி விசாக திருநட்சத்திரம், பவுர்ணமி திதியில் வெள்ளிக்கிழமையன்று அவதரித்தார் நம்மாழ்வார். ஆழ்வார்கள் வரிசையில் ஐந்தாவதாக இருந்தாலும் மற்ற ஆழ்வார்கள் அனைவருக்கும் குருபோல் நம்மாழ்வார் விளங்கியதுடன் அவர்களை தனது உடலின் அங்கங்களாகவும் கொண்டுள்ளார்.
பூதத்தாழ்வாரை தனது தலையாகவும், பொய்கையாழ்வார், பேயாழ்வாரைக் கண்களாகவும், பெரியாழ்வாரை முகமாகவும், திருமழிசையாழ்வாரைக் கழுத்தாகவும், குலசேகர ஆழ்வார், திருப்பாணாழ்வாரை கைகளாகவும், தொண்டரடிப் பொடியாழ்வாரைத் மார்பாகவும், திருமங்கையாழ்வாரை வயிறாகவும், மதுரகவி ஆழ்வாரை பாதமாகவும் கொண்டு விளங்குகிறார்.
நம்மாழ்வார் அவதாரத் திருவிழா ஆழ்வார்திருநகரி ஆதிநாதர் கோயிலில் ஆண்டுதோறும் வைகாசி மாதம் 12 நாட்கள் விமரிசையாக நடைபெறும். இவ்விழாவைப் பற்றி பெரிய ஜீயர் என போற்றப்படும் ஸ்ரீமணவாளமா முனிகள், `உண்டோ வைகாசி விசாகத்துக் கொப்பொருநாள், உண்டோ சடகோபர்க் கொப்பொருவர் ? தென்குருகைக்குண்டோ ஒருபார் தனிலொக்குமூர்? உண்டோ திருவாய்மொழிக்கொப்பு ?’ என்று கூறியுள்ளார்.
அதாவது, நம்மாழ்வார் அவதரித்த திருநட்சத்திரமான வைகாசி விசாகத்துக்கு இணையான நாள் இல்லை. நம்மாழ்வாருக்கு ஒப்பானவரும் யாருமிலர். அவர் அவதரித்த திருக்குருகூருக்கும், அவர் அருளிய திருவாய்மொழிக்கும் இணையேதுமில்லை என, சிறப்பித்துச் சொல்கிறார்.
ஆழ்வார்திருநகரியில் நம்மாழ்வார் அவதாரத் திருவிழா நடப்பாண்டு மே 19-ம் தேதி தொடங்கியது. 5-ம் நாளான 23-ம் தேதி காலையில் நவதிருப்பதி தலங்களின் உற்சவமூர்த்திகளான ஸ்ரீவைகுண்டம் கள்ளபிரான், நத்தம் எம் இடர்கடிவான், திருப்புளியங்குடி காய்சினி வேந்தப் பெருமாள், பெருங்குளம் மாயக்கூத்தன், தென்திருப்பேரை நிகரில் முகில்வண்ணன், தொலைவில்லி மங்கலம் அரவிந்தலோசனர், இரட்டைத் திருப்பதி தேவர் பிரான், திருக்கோளூர் ஸ்ரீவைத்த மாநிதிபெருமாள் ஆகியோர் ஆழ்வார்திருநகரி கோயிலுக்கு எழுந்தருள, அவர்களை நம்மாழ்வார் வரவேற்று மங்களாசாசனம் செய்தார். மற்ற ஆழ்வார்கள் ஒவ்வொரு திவ்ய தேசங்களுக்கும் சென்று, அங்குள்ள பெருமாளைப் பற்றி பாசுரங்கள் பாடியுள்ள நிலையில், நவதிருப்பதி பெருமாள்கள், நம்மாழ்வாரிடம் வந்து மங்களாசாசனம் பெற்றுக்கொள்வதே இவ்விழாவின் சிறப்பம்சமாகும்.
இரவில் ராஜகோபுர வாயிலில் அன்ன வாகனத்தில் எழுந்தருளிய நம்மாழ்வார் மற்றும் மதுரகவி ஆழ்வாருக்கு ஆழ்வார்திருநகரி பொலிந்துநின்ற பிரான் உட்பட நவதிருப்பதி கோயில்களின் 9 உற்சவமூர்த்திகளும் 9 கருட வாகனங்களில் பூரண அலங்காரத்துடன் திருக்காட்சியருளினர். இவ்வாறு 9 கருட சேவை உற்சவம் கண்கொள்ளாக் காட்சியாக அமைந்தது.
வடக்கு மாட வீதியில் 9 பெருமாள்களுக்கும், ஆழ்வார்திருநகரி ஜீயர் பட்டு வஸ்திரம், மாலை அணிவித்து ஆராதனை செய்தார். தொடர்ந்து ரதவீதிகளில் விடிய, விடிய பஜனை, கிளாரினெட் வாத்தியக் கச்சேரியுடன் வலம் வந்த நவதிருப்பதி பெருமாள்களை ஆயிரக்கணக்கான பக்தர்கள் சிந்தை குளிர பரவசத்துடன் தரிசித்தனர்.
படங்கள்: வே. இசக்கிமுத்து