Published : 20 Jun 2018 07:17 PM
Last Updated : 20 Jun 2018 07:17 PM

உயிர் வளர்க்கும் திருமந்திரம் 36: உள்ளமும் உயிரும் ஒன்றானால்

 

‘ஓ

கம்’ என்றொரு தமிழ்ச் சொல். யோகம் என்றும் அறியப்படும். ஓகம் என்றால், ஒன்று மற்றொன்றுடன் இணைதல்; கலத்தல்; ஒன்றுதல். இணைதல், கலத்தல், ஒன்றுதல் என்ற பொருள் மாறாமல். இடக்கான சொல்லாகப் பதிவில் ஏறிவிட்டதாலோ என்னவோ அந்தச் சொல்லின்மேல் கவனம் செலுத்தாமல் விலக்கிக்கொண்டுவிட்டோம்.

இரண்டாகப் பிரிந்து கிடப்பவை ஒன்றாக இணைவது ‘ஓகம்’ என்று பொதுவில் வரையறுக்கப்படும். நம்முடைய உள்ளமும் உடலும் இரண்டாக இருக்கின்றன. அவை ஒருங்கிணைந்து இயங்காமல், தத்தம் போக்கில் தனித்தனியாக இயங்கினால், எண்ணிய செயலை எண்ணியவாறு செய்ய முடியாமல் போகும். “மாடு ரெண்டு; பாதை ரெண்டு; வண்டி எங்கே சேரும்?” என்று ஒரு திரைப்பாட்டு வரி உண்டல்லவா? இரட்டை மாட்டு வண்டியில் மாடுகளுக்கிடையே ஒருங்கிணைவு இல்லாவிட்டால் வண்டி குடை சாய்ந்துவிடாதா?

விசைஉறு பந்தினைப்போல்-உள்ளம்

வேண்டிய படிசெலும் உடல்கேட்டேன்

-என்று உள-உடல் ஒருங்கிணைவைச்

சிவசத்தியிடம் வேண்டுகிறான் பாரதி.

வாய்ஒன்று சொல்லி, மனம்ஒன்று சிந்தித்து,

நீஒன்று செய்யல்! உறுதி, நெடுந்தகாய்!

தீஎன்றுஇங்கு உன்னைத் தெளிவன்!

தெளிந்தபின் பேய்என்றுஇங்கு என்னைப்

பிறர்தெளி யாரே.

(திருமந்திரம் 1683)

உன்னுடைய சொல்லுக்கும் மனத்துக்கும் செயலுக்கும் ஒருங்கிணைவு இல்லை என்றால், உன்னை மிகமோசமான ஆளுமை என்றே கருத்தில் வைப்பேன்; அவ்வாறு வைப்பதற்காக என்னை யாரும் இகழப்போவதில்லை என்று ஒருங்கிணைவை முதன்மைப்படுத்துகிறார் திருமூலர்.

ஓகம் செய்தவர் ஓகி

உள்ளமும் உடலும் ஒருங்கிணைவது மட்டுந்தான் ஓகம் என்று கருத வேண்டாம்; உயிரும் உயிரும் ஒருங்கிணைவதும் ஓகந்தான் (உயிர்-இறை). உடலும் உடலும் ஒருங்கிணைவதுங்கூட ஓகந்தான் (ஆண்-பெண்). உடலைக் கருவியாக்கி அதன்வழியாக உள்ளத்தை / உயிரைக் கட்டியாள்கிற எல்லா முயற்சிகளுமே ஓகந்தான். அவ்வாறு கட்டியாண்டு ஓகம் செய்தவர்கள் ஓகிகள். அவ்வண்ணம் ஓகுதலைப் பேசும் நூல் ஓக நூல்.

தமிழ்நாட்டுக்கு ஓகமும் புதிதன்று; ஓகிகளும் புதியவர்கள் அல்லர். ஓகம் பழகிய ஓகிகள் சங்க காலந்தொட்டே இருந்து வந்திருக்கிறார்கள் என்பதைச் சொல்லாய்வு அறிஞர் ப.அருளியார் எடுத்துக்காட்டுகிறார்: ஓரம்போகியார் என்று ஒரு சங்கப் புலவர். இவரது பெயரை விளக்குகையில் ‘ஓரம் போகியார்’ என்று பிரித்துதெழுதிப் ‘பாதையில் போகும்போது ஓரமாகப் போகிறவர்’ என்று பொருள் சொல்லிவிட்டார்கள். அது அவ்வாறல்ல. அவரது பெயரைச் சரியாகப் பிரித்தெழுத வேண்டுமானால் ‘ஓர்+அம்பு+ஓகியார்’ என்று எழுத வேண்டும்.

பட்டினத்தார் தம் கையில் ஒற்றைக் கரும்பை வைத்துக்கொண்டு சுற்றியதைப் போல, இவர் தம் கையில் ஒற்றை அம்பை வைத்துக்கொண்டு சுற்றியிருப்பார்போலத் தெரிகிறது. ஆகவே ‘ஓர் அம்பு ஓகியார்’ என்று வழங்கப்பெற்றிருக்கலாம்.

‘ஓர் அம்பு’ என்பது ஏதேனும் கொள்கையைக் குறிக்கும் அடையாளச் சின்னமாக இருந்திருக்கலாம்—அத்துவைதக் கொள்கையைக் கடைப்பிடிக்கிற துறவிகள் ‘நாங்கள் ஒற்றை உண்மையை நம்புகிறவர்கள்’ என்று காட்டுவதற்காக ஒற்றைக் குச்சியையும் விசிட்டாத்துவைதக் கொள்கையைக் கடைப்பிடிக்கிற துறவிகள் ‘நாங்கள் மூன்று உண்மைகளை நம்புகிறவர்கள்’ என்று காட்டுவதற்காக முக்குச்சிகளை ஒருங்கிணைத்தும் கையில் வைத்திருப்பதைப் போல.

அல்லது அம்பைப் போலத் தன் உடம்பை இருத்திக்கொண்டவராக இருக்கலாம். அதனால் ஓர் அம்பு ஓகியார் என்று அழைக்கப்பெற்றிருக்கலாம்.

ஓரம்பு ஓகியாரைப் போலவே கொக்கோகர் என்று ஒரு ஓகியார் இருந்திருக்கிறார். கொக்கோகர் என்றால் கொக்கு+ஓகர், அதாவது, கொக்கைப் போல ஓகம் செய்தவர். அதென்ன கொக்கு ஓகம் என்றால், கொக்கைப் போலத் தன் உடம்பை இருத்திக்கொள்வது கொக்கு ஓகம்.

ஓகத்தின் உட்கிடை

உடம்பு என்ற ஒன்று இருப்பதே தெரியாமல் இருப்பது ஓகம். அவ்வாறு இருக்க முடிந்தால், ‘உள்ளம் வேண்டியபடி செல்லும் உடல்’ நமக்குக் கிடைத்துவிட்டதாக மகிழ்ந்து கொள்ளலாம்.

நம்மை எவ்வாறு இருத்திக்கொண்டால் உடம்பு என்ற ஒன்று இருப்பது தெரியாமல் இருக்கலாம் என்று தேடுகிற முயற்சியில், மனிதர்கள் தங்களைப் பல்வேறு வகைகளில் இருத்திப் பார்த்துக்கொண்டார்கள்—கொக்கைப் போல, மீனைப் போல, முதலையைப் போல, விட்டிலைப் போல, பாம்பைப் போல, தேளைப் போல, பருந்தைப் போல, மயிலைப் போல. உயிர்களைப் போல மட்டுமல்லாது, கலப்பையைப் போல, வில்லைப் போல, அம்பைப் போல, சக்கரத்தைப் போல, படகைப் போல, தாமரையைப் போல, மரத்தைப் போல, பிணத்தைப் போல என்று பலவற்றைப் போலவும் இருத்திப் பார்த்திருக்கிறார்கள்.

இவற்றில் எந்த இருக்கை முறை உடம்பு என்ற ஒன்று இருப்பதே தெரியாமல், உடம்பைச் சுகமாக இருக்க வைத்ததோ அதைத் தனக்கான இருக்கை முறையாகத் தேர்ந்துகொண்டிருக்கிறார்கள். ஓர் அம்பு ஓகியும் கொக்கு ஓகியும் அப்படித் தேர்ந்துகொண்டவர்களாகவே இருக்க வேண்டும். உடம்பை ஒரு நிலையில் இருத்திவிட்டால் உள்ளத்தை இருத்துவது எளிதாகிவிடுகிறது. உடம்பும் உள்ளமும் வசப்பட்டுவிட்டால், எண்ணியதை எண்ணியாங்கு எய்தலாம் என்பதுதான் ஓகத்தின் உட்கிடை.

உள்ளியது எய்தல் எளிதுமன் மற்றும்தான்

உள்ளியது உள்ளப் பெறின்

(குறள் 540)

நெஞ்சுறுதியோடும் ஊக்கத்தோடும் ஒருவன் தான் எண்ணியதையே எண்ணிக்கொண்டிருந்தால், எண்ணியதை அடைவது எளிதல்லவா என்று முன்வைக்கிற திருக்குறளும் சிற்சில இடங்களில் ஓகம் பேசுகிற நூல்தான் என்றாலும், ஓகத்தைச் செறிவாகப் பேசிய நூல் திருமந்திரம்தான்.

நெறிவழியே சென்று நேர்மையுள் ஒன்றித்

தறிஇருந் தாற்போலத் தம்மை இருத்திச்

சொறியினும் தாக்கினும் துண்என்று உணராக் குறிஅறி வாளர்க்குக் கூடலும் ஆமே

(திருமந்திரம் 1457)

உடலும் உள்ளமும் யானையைப் போல அசைந்துகொண்டே இருக்கின்றன. நிலைகுத்தி நிற்பது என்பது அவற்றுக்கு ஏறத்தாழ இயலாததாக இருக்கிறது. உடலும் உள்ளமும் ஒருங்கிணைய வேண்டும்; நிலைகுத்த வேண்டும். எதைப் போல என்றால் யானையைக் கட்டி வைக்கிறார்களே தூண், அதைப் போல. யானை உரசினாலும் முட்டினாலும் இழுத்தாலும் அதிராமல், அசையாமல் நிற்கும் அந்தத் தூண். யானையையும் கட்டுப்படுத்தும். அவ்வாறு நிலைகுத்தி நிற்கத் தெரிந்தவர்கள் எதைக் குறித்து எண்ணினார்களோ, அதை எண்ணியவாறே எய்துவார்கள்.

அடிமையாக ஏன் இருக்க வேண்டும்

எனவே, உள்ளத்தில் உடம்பைக் கட்டுவீர்களோ அல்லது உடம்பில் உள்ளத்தைக் கட்டுவீர்களோ, அது உங்கள் பாடு. கட்டுத்தறி உறுதியாக நின்றால் அதில் கட்டப்பட்டது அலைபாயாமல் நிற்கும். அலைபாய்ச்சல் அடங்கினால் கவனம் மிகும். கவனம் மிகுந்தால் எண்ணியது ஈடேறும். எண்ணியது ஈடேறுதல் ஓகம்; குறி அறிவதும் அதைக் கூடுவதும் ஓகம்.

எழுத்தொடு பாடலும் எண்எண் கலையும்

பழித்தலைப் பாசப் பிறவியை நீக்கா;

அழித்தலைச் சோமனோடு அங்கி அருக்கன்

வழித்தலைச் செய்யும் வகை

உணர்ந் தேனனே

(திருமந்திரம் 1461)

நூற்கல்வி, மந்திரங்களை ஓதுதல், அறுபத்து நான்கு கலைகளை அறிதல், இவையெல்லாம் உங்களுக்கு விடுதலை வழங்காது. மாறாக, அவை உங்களைக் கட்டுப்படுத்துகின்றன. இதுதான் என் நூல்; இதுதான் என் மந்திரம், இதுதான் என் கலை, இதுதான் என் கொள்கை என்று ஏதேனும் ஒரு சட்டகத்துக்குள் உங்களை அடைபடச் செய்கின்றன. அடைபட வைக்கிற அமைப்புகள் எப்படி விடுதலைப்படுத்தும்? ஓகம்தான் உங்களை விடுதலைப்படுத்தும். ஓகம் பயில்வதற்கு யாரும் எதற்குள்ளும் அடைபட வேண்டிய கட்டாயமில்லை. இடகலை, பிங்கலை, சுழிமுனை என்று ஏறியும் இறங்கியும் சுழித்தும் ஓடுகிற மூச்சை ஆளத் தெரிந்தால் போதும். உங்கள் தளைகளை அழித்து விடுதலை பெறலாம். ஆள்கிறவராக இருக்க வாய்ப்பிருக்கும்போது, அடிமையாக ஏன் இருக்க வேண்டும்?

(ஓகம் பயில்வோம்)
கட்டுரையாசிரியர், தொடர்புக்கு : arumugatamilan@gmail.com

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x