வாள்வச்சகோஷ்டம் மகிஷாசுரமர்த்தினி

வாள்வச்சகோஷ்டம் மகிஷாசுரமர்த்தினி
Updated on
2 min read

குமரி மாவட்டத் திருக்கோயில்களில் நின்ற கோலத்தில் அருள்பாலிக்கும் ஒரே கோயில் வாள்வச்சகோஷ்டம் மகிஷாசுரமா்தினி. அந்தக்காலத்தில் திருவிதாங்கூர் மன்னர்கள் தங்கள் ஆயுதங்களை வைத்து வழிபட்ட இடமாகும்.

போரில் வெற்றி பெற்று திரும்பும் பாதையில், ரத்தக்கறை படிந்தவாளை இந்தக்கோயிலின் பக்கத்திலுள்ள குளத்தில் கழுவியபின்னர் மகிஷாசுரமர்த்தினியை வழிபட்டுச் செல்வார்கள். ஆதலால் வாள்வச்சகோஷ்டம் ஆனது. இந்தப் பெயரை இங்குள்ள 16-ம் நுற்றாண்டு கல்வெட்டு ஒன்றும் கூறுகிறது.

வாள்வச்சகோஷ்டம் என்னும் பெயர் பற்றிய வாய்மொழி்க் கதையும் இந்தப்பகுதியில் நிலவுகிறது. சங்கரவாரியார் என்ற எடத்துவா போற்றி அந்தப் பகுதியில் வரி பிரிக்கும் பணியை மேற்கொண்டு வந்தார். ஒரு நாள் இரவு அவர் வீடு திரும்பிக் கொண்டிருந்தபோது இரண்டு அழகிகளைக் கண்டார். அதில் ஒரு பெண் இவரை அருகே அழைக்க, அவர்கள் யட்சிகள் என்பதைப் புரிந்துகொண்ட சங்கரவாரியார் அவர்கள் இருவரையும் அங்குள்ள ஒரு மருதமரத்தின் கீழ் ஸ்தாபித்தார். இந்த மரத்துக்கருகே சங்கர வாரியாரியாரின் வேண்டுகோளுக்கிணங்க அன்றைய வேணாட்டு அரசர் இந்தக் கோயிலைக் கட்டியதாக கூறுகிறது.

தரைமட்டத்திலிருந்து சுமார் மூன்று மீட்டர் உயரத்தில் அமைந்துள்ள இந்தக் கோயிலுக்கு ஏழு படிக்கட்டுகள் ஏறிச்செல்ல வேண்டும். படியேறிச் சென்றவுடன் இருபுறமும் திண்ணையுடன் கூடிய அனுப்பு மண்டபம் உள்ளது. அதைத் தாண்டிச் சென்றால் அடுத்து வருவது முகமண்டபம். இதில் ஆறு தூண்கள் பக்கத்திற்கு மூன்று வீதம் முறையே நடராசர், காளி, அர்ஜூனன், கர்ணன், இந்திரஜித் மற்றும் லக்ஷ்மணன் ஆகியோரது சிற்பங்கள் செதுக்கப்பட்டுள்ளன. முகமண்டபத்தின் வாசலில் இருபுறமும் துவாரபாலகிகள் சிற்பங்கள் உள்ளன.

அடுத்து 45 அடி உயரமுள்ள கொடிமரம் காணப்படுகிறது. கொடிமரத்தையடுத்து பலிபீடமும் தொடர்ந்து கதிர்மண்டபம், மருதமண்டபம் மற்றும் நமஸ்காரமண்டபமும் உள்ளது. இந்த மண்டபங்கள் அழகிய புடைப்பு சிற்பங்களைக் கொண்ட துாண்களையுடையது. குறிப்பாக ரதியும் மன்மதனும் வில் மற்றும் அம்புடன் நின்ற கோலத்தில் காண்போரைக் கவரும் வண்ணம் காட்சியளிக்கிறது. அது போன்று முன் மண்டபத்திலுள்ள 12 தூண்களில் ஒன்றில் சங்கு, சக்கரம் ஏந்திய விஷ்ணு இரண்டு கைகளில் பெண் ஒருத்தியை ஏந்தி நிற்கிறார்.

இவள் பெயர் ஆபகந்தி. பாற்கடலைக் கடையும்போது கடலில் இருந்து லட்சுமியை விஷ்ணு ஏந்தி எடுத்த நிகழ்ச்சி இது. அப்போது லட்சுமி ஆபகந்தி எனப்பட்டாள். இது ஓர் அபூர்வச் சிற்பம். இது போன்று கோயிலின் உட்பிரகாரத்திலிருந்து வலதுபுறமாக ஒரு சுரங்கப்பாதை செல்கிறது. இது இங்கிருந்து பத்மனாபபுரம் அரண்மனைக்கு அல்லது அன்றிருந்த சாரோடு அரண்மனைக்குச் சென்றிருக்கலாம் என்று கருதப்படுகிறது. தற்போது இந்தச் சுரங்கப்பாதை மூடிய நிலையில் உள்ளது.

ஸ்ரீகோயில் என்னும் கருவறை கிழக்கு நோக்கி கட்டப்பட்டுள்ளது. கருவறையைச் சுற்றி உட்பிரகாரமும் காற்றாலை மண்டபமும் அமைந்துள்ளது. கருங்கல்லில் கட்டப்பட்டுள்ள கருவறை மேல்பகுதி மரத்தால் அமையப்பெற்றுள்ளது. கூரையின் மேல்பகுதி செப்புத்தகடுகளால் வேயப்பட்டுள்ளது. கருவறையின் மேல் பகுதியில் 32 அடி உயரமுள்ள ஏகதள கோபுரமும் உள்ளது. நீள்சதுர கருவறையில் மகிஷாசுரமர்த்தினி நின்ற கோலத்தில் ரௌத்திர பாவத்தில் அழகாகக் காட்சியளிக்கிறாள்.

கல்லில் செய்யப்பட்டுள்ள படிமம் திரிபங்கா நிலையில் வலது கால் எருமை வடிவிலான மகிஷன் தலையில் ஊன்றிய நிலையிலும் இடது கால் தரையில் தொட்ட நிலையிலும் உள்ளது. நான்கு கைகளையுடைய அம்மனின் பின்வலது கையில் சக்கரமும் பின்இடதுகையில் சங்கும் முன் வலதுகை வரதமும் முன் இடதுகை கடிஹஸ்தமாயும் இருக்கும். கரண்டமகுடம் காலில் சிலம்பு கழுத்தில் அணிகலன்களுடன் அம்மன் நின்று அருள்புரிகிறாள்.

குமரி மாவட்ட திருக்கோயில்களிலேயே பெரிய அளவிலான மகிஷாசுரமர்த்தினி இவளே. இது ஆரம்ப கால விஜயநகரபாணி சிற்பம். இங்கு அம்மன், பரிவார தெய்வங்கள் ஒன்றும் இல்லாமல் தனியே அருள்பாலிக்கிறார். இது வேறெங்கும் காணமுடியாதது. எல்லா சக்தியும் ஒருங்கே பெற்று தன்னந்தனியே நின்று காக்கும் சக்தியுடையவள் மகிஷி.

வைகாசி மாதம் பத்து நாள் திருவிழா நடைபெறும். ஒன்பதாவது நாள் விசாகம் நட்சத்திரம் வரும் விதத்தில் திருவிழா கொடியேற்றுடன்ஆரம்பமாகும். ஒன்பதாவது நாளான விசாகம் அன்று மாலையில் அம்மன் அணிகலன்களால் அலங்கரிக்கப்பட்டு ஏழு முறை கோயிலைச்சுற்றி வலம் வரும். அதற்கு பள்ளி வேட்டை என்று பெயர். பத்தாவது நாள் காலையில் அம்மனுக்கு ஆறாட்டு நடத்தப்படும்.அத்துடன் திருவிழா முடிவடையும். கார்த்திகை மாதமும் இங்கு அம்மனுக்கு விசேஷ வழிபாடுகளும் களபசார்த்தும் நடத்தப்படும்.

திருவிதாங்கூர் மன்னர்களின் குடும்பதேவதையே மகிஷாசுரமர்த்தினி. இப்போதும் மன்னர் பரம்பரையினர் மாதந்தோறும் இங்கு வந்து வழிபடுவது வழக்கம். மேலும் கோயில் திருவிழாவின் போதும் கார்த்திகை மாதமும் செலவின் ஒரு பகுதியை இந்தக் குடும்பத்தினரே தற்போதும் செலவிடுகின்றனர். தேங்காய் மூடியில் நல்லெண்ணெய் விட்டு விளக்கேற்றி வழிபடுவது கன்னிப் பெண்கள் சுமங்கலிகளுக்கு நல்லது என்ற நம்பிக்கை இங்கு உண்டு.

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in