வரங்கள் வழங்கும் புறம்பயம் விநாயகர்

வரங்கள் வழங்கும் புறம்பயம் விநாயகர்
Updated on
1 min read

அரசகுப்தன் எனும் வணிகன் கோவிலில் உள்ள வன்னி மரத்தடியில் தங்கியிருந்தபோது பாம்பு தீண்டி இறந்தான். அவனுடன் வந்த அவன் மாமன் மகளான ரத்னாவளி என்பாள் ஈசனிடம் புலம்பி அழுது வேண்டினாள். அவள் மீது கருணை கொண்ட ஈசன், வணிகரை உயிர்ப்பித்து இருவருக்கும் திருமணம் செய்து வைத்தார்.

வணிகனின் முத்த மனையாள் தொடுத்த வழக்கில் இறைவனே சென்று, இருவரும் திருமணம் செய்து கொண்டமைக்குத் தாமே சாட்சி என்று உரைத்தார். அதுமுதல் இறைவன் சாட்சிநாதர் எனப்பட்டார். இந்த அற்புதம் நிகழ்ந்த தலம் தான், தஞ்சை மாவட்டம், கும்பகோணத்திற்கு அருகில் உள்ள திருப்புறம்பியம். இந்தத் தலத்திற்கு மற்றொரு சிறப்பும் உண்டு. அது என்ன சிறப்பு?

வெள்ளப்பெருக்கிலிருந்து காத்த விநாயகர்

கிருத யுகத்தின் முடிவில் ஏற்பட்ட வெள்ளப் பெருக்கிலிருந்து திருப்புறம்பியத்தைக் காத்தருள சிவபெருமான் திருவுளம் கொண்டார். சிவனின் திருவுளத்தை ஏற்று விநாயகர் ஓங்காரத்தைப் பிரயோகம் செய்து ஏழு கடல்களின் பெருக்கை ஒரு கிணற்றுக்குள் அடக்கிக் காத்தார். (அதற்குச் சான்றாக இன்றும் ஆலயத் திருக்குளமான பிரம்ம தீர்த்தத்தின் கிழக்கே ஏழு கடல் கிணறு அமைந்துள்ளது) அப்போது வருண பகவான், தன் திருமேனியிலிருந்து சங்கம், நந்தான் கூடு, கிளிஞ்சல், கடல் நுரை போன்ற பொருட்களை எடுத்து, அவற்றால் விநாயகரைப் பிரதிஷ்டை செய்து வழிபட்டார்.

பிரளய வெள்ளத்தில் இருந்து புன்னாக வனத்தை (திருப்புறம்பயத்தை) பாதுகாத்தருள விநாயகர் புறமாக நின்றதால் இந்த ஊருக்குப் புறம்பயம் என்ற பெயரும் விநாயகருக்கு பிரளயம் காத்த விநாயகர் என்ற பெயரும் உண்டாயிற்று.

தேன் அபிஷேகம்

இத்தலத்தில் சந்தன நிறத்தில் காட்சி தரும் கணபதிக்கு விநாயகர் சதுர்த்தி திருநாளில் மட்டுமே தேனால் அபிஷேகம் நடைபெறுகிறது. அபிக்ஷேகத் தேன் முழுவதும் விநாயகர் திருமேனியில் உறிஞ்சப்படுவது கண்கொள்ளா அற்புதக் காட்சியாகும்.

இந்த அபிஷேகத்தின்போது விநாயகர் செம்பவள மேனியராக ஜொலிக்கிறார். இந்த வியத்தகு தேனாபிஷேகத்தின் காட்சியைக் கண்டு தரிசித்தால் வேண்டும் வரங்கள் கிட்டும்.

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in