ஈரோடு பெரிய மாரியம்மன் | ஆடி மாதமும் அம்மன் திருவருளும்

ஈரோடு பெரிய மாரியம்மன் | ஆடி மாதமும் அம்மன் திருவருளும்
Updated on
1 min read

ஈரோடு நகரின் மையப்பகுதியில், மீனாட்சி சுந்தரனார் சாலையில், மாநகராட்சி அலுவலகத்தின் எதிர்புறத்தில் பெரிய மாரியம்மன் கோயில் அமைந்துள்ளது. ஈரோட்டின் காவல் தெய்வமாக போற்றப்படும் பெரிய மாரியம்மன் கோயிலின் கிழக்கு பிரகாரத்தில் நாச்சியார் சிலையும், மேற்கு பிரகாரத்தில் பரசுராமரும், பட்டாலம்மனும் எழுந்தருளியுள்ளனர்.

கருவறையில், கரங்களில் நாக பந்தத்துடன் உடுக்கை, பாசம், கபாலம், கத்தி ஆகியவற்றுடன் அமர்ந்த கோலத்தோடு இருக்கும் அன்னையை கண் குளிர வழிபடலாம். இந்து சமய அறநிலையத்துறை பராமரிப்பின் கீழ் உள்ள இக்கோயிலில், காலை 6 மணிக்கு காலை சந்தி பூஜை, பகல் 12 மணிக்கு உச்சிக்கால பூஜை, மாலை 6 மணிக்குச் சாயரட்சை பூஜை நடைபெறுகிறது.

ஆடி மாதம் முழுவதும் பெரிய மாரியம்மனுக்கு சிறப்பு அலங்காரம் மற்றும் விசேஷ பூஜைகள் நடக்கின்றன. குறிப்பாக ஆடி மாத செவ்வாய், வெள்ளிக்கிழமைகளில் வெளியூர் பக்தர்களும் இங்கு வந்து அம்மனை வழிபட்டு வருகின்றனர்.

நேர்த்திக் கடனாக கூழ் காய்ச்சி அம்மனை வேண்டி வருவோருக்கு வழங்குவது, மா விளக்கு போடுதல், பூக்கள் மற்றும் உப்பினை படைத்து வழிபடுவதை வழக்கமாக கொண்டுள்ளனர்.

இக்கோயில் வகையறா கோயில்களான சின்ன மாரியம்மன், வாய்க்கால் மாரியம்மன் கோயில்களையும் சேர்த்து ஆண்டுதோறும் பங்குனி மாதம் நடக்கும் குண்டம், தேர்த்திருவிழா பிரசித்தி பெற்றதாகும். பல்லாயிரக்கணக்கான பக்தர்கள் பங்கேற்று, கம்பத்தை ஊர்வலமாக எடுத்துச் சென்று, ஆற்றில் விட்டு, திருவிழாவை நிறைவு செய்யும் நடைமுறை உள்ளது.

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in