Last Updated : 24 May, 2018 10:42 AM

 

Published : 24 May 2018 10:42 AM
Last Updated : 24 May 2018 10:42 AM

கிறிஸ்துவின் தானியங்கள்: ஆலயம் தேடி ஓடத் தேவையில்லை!

இறைவனோடு இணைந்திருந்தல் என்பதுதான் ஆன்மிக நிலையில் முக்கியமான செயல்பாடு. அதற்குப் போலியான பக்தி எனும் வெளிவேடம் ஒருபோதும் பலன் தருவதில்லை. கடவுளின் வார்த்தைகளின்படி நடப்பதும் வாழ்வதும் அல்லது மற்றவர்களுக்கு எடுத்துக்காட்டான முன்மாதிரியாகத் திகழ்வதும்தான் இறைவனோடு நம்மை இணைக்கிறது.

இப்படி அர்த்தபூர்வமான வாழ்க்கை வாழ்ந்தால் இறைவனைத் தேடி ஆலயத்துக்கு ஓட வேண்டியதில்லை. அவரே இறைவன் வாழும் ஆலயமாகிவிடுகிறார். இதைத்தான் யோவான் எழுதிய நற்செய்தி அதிகாரம் 15: 1 முதல் 8 வரையிலான இறைவார்த்தைகள் நமக்கு எடுத்துக்காட்டுகின்றன.

கனி கொடாத கிளைகள்

அக்காலத்தில் இயேசு தம் சீடரை நோக்கிக் கூறியது: “உண்மையான திராட்சைக் கொடிநானே. என் தந்தையே அதை நட்டு வளர்ப்பவர். என்னிடமுள்ள கனி கொடாத கிளைகள் அனைத்தையும் அவர் தறித்துவிடுவார். கனி தரும் அனைத்துக் கிளைகளையும் மிகுந்த கனி தருமாறு கழித்துவிடுவார்.

நான் சொன்ன வார்த்தைகளால் நீங்கள் ஏற்கெனவே தூய்மையாய் இருக்கிறீர்கள். நான் உங்களோடு இணைந்து இருப்பதுபோல நீங்களும் என்னோடு இணைந்து இருங்கள். கிளைகள் திராட்சைக் கொடியோடு இணைந்து இருந்தாலன்றித் தானாகக் கனி தர இயலாது.

அதுபோல நீங்களும் என்னோடு இணைந்திருந்தாலன்றிக் கனி தர இயலாது. நானே திராட்சைக் கொடி; நீங்கள் அதன் கிளைகள். ஒருவர் என்னுடனும் நான் அவருடனும் இணைந்திருந்தால் அவர் மிகுந்த கனி தருவார். என்னைவிட்டுப் பிரிந்து உங்களால் எதுவும் செய்ய இயலாது.

என்னோடு இணைந்து இராதவர் கிளையைப் போலத் தறித்து எறியப்பட்டு உலர்ந்து போவார். அக்கிளைகள் கூட்டிச் சேர்க்கப்பட்டு நெருப்பிலிட்டு எரிக்கப்படும். நீங்கள் என்னுள்ளும் என் வார்த்தைகள் உங்களுள்ளும் நிலைத்திருந்தால் நீங்கள் விரும்பிக் கேட்பதெல்லாம் நடக்கும். நீங்கள் மிகுந்த கனி தந்து என் சீடராய் இருப்பதே என் தந்தைக்கு மாட்சி அளிக்கிறது” என்றார்.

இஸ்ரேல் எனும் திராட்சைக் கொடி

“நானே உண்மையான திராட்சைச் செடி” என்று இயேசு கூறுகிறார். ‘உண்மையான’ என்ற வார்த்தை எதைக் குறிக்கிறது? அதனுடைய விவிலியப் பின்னணி என்ன என்பதை ஆராய்ந்தால் பழைய ஏற்பாட்டில் எப்போதெல்லாம் திராட்சைச்செடி அல்லது கொடி பற்றிய செய்தி வந்திருக்கிறதோ அப்போதெல்லாம் எதிர்மறையாகத்தான் பெரும்பாலும் அது சொல்லப்பட்டிருக்கிறது.

திராட்சைச்செடி இஸ்ரேயேல் தேசத்துக்கு ஒப்பிடப்பட்டாலும் அந்தத் தேசத்தின் தவறான அணுகுமுறையால்தான் இறைவாக்கினர்களால் திராட்சைச்செடியோடு ஒப்பிடப்படுகிறது. உதாரணமாக, இறைவாக்கினர் எரேமியா, இஸ்ரேயேலைக் காட்டுத் திராட்சைக்கு ஒப்பிடுகிறார். அதிலிருந்து உண்பதற்கான பழங்களைப் பார்க்க முடியவில்லை என்றும் கூறுகிறார். இதே கருத்தைத்தான் இறைவாக்கினர் எசாயாவும் முன்வைக்கிறார். ஆக, இங்கே திராட்சைச்செடி போலியானதாக சித்தரிக்கப்படுகிறது.

கனி தராத தேசம்

ஆனால், இயேசு தன்னை உண்மையான திராட்சைச் செடி என்று அறிவிக்கிறார். அப்படி அவர் கூறியதில் மறைந்திருக்கும் செய்தி என்ன என்பதை ஆராய்ந்தால் தெளிவான உண்மை புலப்படும். இஸ்ரேயேல் கடவுளின் உண்மையான திராட்சைச் செடியாகத் தன்னை நினைத்துக்கொண்டிருக்கிறது. ஆனால், அது உண்மையல்ல. இஸ்ரேயேலின் நடத்தையைப் பார்க்கிறபோது, அது உண்மையான திராட்சைச் செடியாக இல்லை. இனத்தால் யூதர்கள் என்பதால் யாரும் மீட்பு பெற்றுவிட முடியாது. யூதராக இருந்தாலும் அதற்கேற்ற இறைவார்த்தைகளைப் பின்பற்றி வாழும் வாழ்வை வெளிப்படுத்த வேண்டும். ஆனால், இஸ்ரேயேல் அதைச் செய்யவில்லை.

அப்படிப்பட்ட ஒரு தேசத்தில், குலத்தில் உதித்த இயேசு இறைவனோடு இணைந்து வாழ அவரது வார்த்தைகளைப் பின்பற்றி நடக்க வேண்டும். அதுவே உண்மையான சீடத்துவ வாழ்வு என்பதை எடுத்துக்காட்டினார். அதன்படியே வாழ்ந்தும் காட்டினார். பொய்மையை எதிர்த்தார், போலி பக்தியைக் கிழித்தார், அதிகார பீடத்தில் இருந்தவர்களைத் துணிவுடன் விமர்சித்தார். தன்னைப் பலியாக்கியதன் மூலம் தியாகமும் அர்ப்பணிப்பும் மனித வாழ்வின் அங்கம் என்பதைக் காட்டினார்.

தனது முன்மாதிரியை முன்வைத்தே கனிதரும் திராட்சைக் கொடியாகிய என்னுடன் கிளையாக இணைந்திருங்கள் என்று அறிவுறுத்துகிறார். இயேசு உதித்த யூத குலத்தில் பிறந்தவராக இருந்தாலும் இறைவனோடு இணைந்திருக்கக் கடவுளுக்குப் பிரியமான முறையில் வாழ்ந்து காட்ட வேண்டும். மற்றவர்களைத் திருப்திப்படுத்துவது நமது வாழ்வின் நோக்கமல்ல. மாறாக, கடவுள் காட்டிய வாழ்வை, நாம் வாழப் பழகிக்கொள்ள வேண்டும். அதுதான் உண்மையான ஆன்மிக வாழ்வு.

வாழ்வும் அனுபவமும்

இறையனுபவம் என்பதும் கடவுளோடு இணைந்திருத்தல் என்பதும் ஒன்றே. தவறிலிருந்து மீண்டு வருவதற்கான ஆன்மிக சக்தியை இறை வார்த்தைகள் வழங்குகின்றன. குறைகளை ஏற்றுக்கொண்டு, நிறைவோடு வாழ்வதற்கான உந்துசக்தி இறைவார்த்தைகளில் ஊற்றாகப் பெருகி வழிகிறது. எந்தச் சூழ்நிலையிலும் சோர்ந்து போகாத ஒரு நிலையை இறை வார்த்தையைக் கற்பவர்களுக்கு அது வழங்குகிறது.

இயேசுவின் வெற்றிகரமான பூமி வாழ்க்கைக்கு இறை வார்த்தைகள் உதவியாக இருந்தன, அவர் கடவுளாகிய தந்தையோடு கொண்டிருந்த இறையனுபவமே அவரைத் தலைவராக்கியது. தாம் பெற்ற இறையனுபவத்தை உலகமும் பெற்றுக்கொள்ள வாழ்வுதரும் வார்த்தைகளை, அவர் மண்ணுலகுக்குக் கொட்டிக்கொடுத்திருக்கிறார். அவற்றை உள்ளங்களில் நிரப்பிக்கொண்டு இறை அனுபவம் பெற்றுக்கொள்வதே உண்மையான கிறிஸ்தவ வாழ்வு.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x