

ராகு,கேது ஆகிய இரு நவக்கிரக நாயகர்களைத் தொலைவில்லி மங்கலம் சென்று வணங்கினால், ராகு, கேது தோஷங்கள் தீரும் என்பது ஐதீகம். இத்திருக்கோவிலுக்கான நம்மாழ்வார் பாசுரங்களும் மிகுந்த நன்மையினை அளிக்கும் என்பது பக்தர்களின் நம்பிக்கை. இத்திருக்கோவில்களின் தல வரலாறு சுவாரசியமானது.
குபேரனை மதிக்காமல் சென்ற வித்யாதரன் என்ற மன்னனையும் அவன் மனைவியையும், குபேரன் வில்லாகவும், தராசாகவும் மாறச் சபிக்கிறான். சாப விமோசனமாகப் பெருமாளை நோக்கித் தவமிருக்கக் கூறுகிறான்.
அவர்களும் அவ்வாறே பல ஆண்டுகள் தவம் இருந்தனர். இந்நிலையில் அவ்விடத்திற்கு யாகம் நடத்த வந்தார் சுப்பிரபர். மண்ணை உழுது யாக சாலை அமைக்க முற்படும்பொழுது, புதைந்திருந்த வில்லும் தராசும் வெளிப்பட்டன. சாப விமோசனமும் அடைந்து அவர்கள் முக்தியும் பெற்றனர்.
சுப்பிரபர் தொடர்ந்து யாகத்தை நடத்தினார். அவருடன் இணைந்து தேவர்களும் வேண்ட அவிர்பாகம் பெற்றார் பெருமாள். தேவர்களுக்கு பெருமாள் இங்கும் தலைவனாக இருந்ததால் அவருக்கு தேவர் பிரான் என்பது திருநாமம். தொலை என்பது தராசு. வில்லி என்பது வில். இவர்களுக்கு பெருமாள் முக்தியை மங்கலமாக அளித்ததால் இவ்வூரின் பெயர் தொலைவில்லிமங்கலம் என்றானது.
தேவர் பிரான் சன்னதியில் யாகம் முடித்த பின்னும் சுப்பிரபர் அருகில் உள்ள குளத்தில் இருந்து தாமரை மலர்களைக் கொண்டு பெருமாளைத் தொடர்ந்து அர்ச்சித்துவந்தார்.
இம்மலர்களின் வாசனையிலும், அழகிலும் மயங்கிய பெருமான், இவற்றை சுப்பிரபர் எங்கிருந்து கொண்டு வருகிறார் என அறிய விரும்பினார். முனிவர் பூக்கொய்யச் செல்லும் நேரத்தில் அவரைப் பின்தொடர்ந்தார். இயற்கை எழில் கொஞ்சும் அவ்விடத்தை அடைந்த பெருமாள் அங்கேயே தங்கிவிட உளம் கொண்டார்.
தேவர் பிரானோடு சேர்ந்து தனக்கும் பூஜை செய்ய அன்புடன் பணித்தார். இரு பெருமாளுக்கும் தொண்டு செய்து முக்தி அடைந்தார் சுப்பிரபர். செந்தாமரையை விரும்பியதால் பெருமாளின் மற்றொரு திருநாமம் செந்தாமரைக் கண்ணன். இத்தலத்தில் பெருமாளுடன் தாயாரையும் சேர்த்தே மங்களாசாசனம் செய்துள்ளார் நம்மாழ்வார். அப்பாசுரங்கள்:
குமுறும் ஓசை விழவு ஒலித்
தொலைவில்லிமங்கலம் கொண்டு புக்கு
அமுத மென் மொழியாளை நீர் உமக்கு
ஆசை இன்றி அகற்றி நீர்,
திமிர்க் கொண்டால் ஒத்து நிற்கும்; மற்று இவள்
தேவ தேவ பிரான் என்றே,
நிமியும் வாயொடு, கண்கள் நீர் மல்க
நெக்கு, ஒசிந்து, கரையுமே.
என்றும்,
திருந்து வேதமும் வேள்வியும்
திரு மா மகளிரும் தாம் மலிந்து
இருந்து வாழ் பொருநல் வடகரை
வண் தொலைவில்லிமங்கலம்,
கருந் தடங் கண்ணி கைதொழுத அந் நாள்
தொடங்கி இந்நாள் தொறும்,
இருந்து இருந்து அரவிந்தலோசன
என்று என்றே நைந்து, இரங்குமே.
தேவர் பிரான் மற்றும் அரவிந்தலோசனன் என்று பெருமாள் திருநாமம் குறிப்பிட்டு நம்மாழ்வார் மங்களா சாசனப் பாசுரங்கள் அமைந்துள்ளது குறிப்பிடத்தக்கது.