

சென்னை: இஸ்கான் அமைப்பு சார்பில் ஜெகந்நாதர் ரத யாத்திரை வெகு விமரிசையாக நடந்தது. இதில் ஏராளமான பக்தர்கள் கலந்து கொண்டு வடம் பிடித்து இழுத்தனர். அகில உலக கிருஷ்ண பக்தி இயக்கம் (இஸ்கான்) சார்பில் ஆண்டுதோறும் ஜெகந்நாதர் ரத யாத்திரை நடத்தப்படுகிறது.
அந்தவகையில், சென்னை கிழக்கு கடற்கரையில் உள்ள இஸ்கான் கோயில் சார்பில் 44-வது ஜெகந்நாதர் ரத யாத்திரை திருவிழா ஞாயிற்றுக்கிழமை வெகு விமரிசையாக நடந்தது. இந்த நிகழ்ச்சியில் பக்தி வினோதசுவாமி மஹாராஜர் சிறப்பு விருந்தினராக கலந்து கொண்டு மதியம் 2.30 மணிஅளவில் பாலவாக்கத்தில் ரத யாத்திரையை தொடங்கி வைத்தார்.
ஜெகந்நாதர், பாலபத்ரர், சுபத்ரா சுவாமிகள் அலங்கரிக்கப்பட்ட ரதத்தில் வலம் வர ஏராளமான பக்தர்கள் ரதத்தை வடம் பிடித்து இழுத்தனர். தொடர்ந்து, ரதமானது நீலாங்கரை, வெட்டுவாங்கேணி, ஈஞ்சம்பாக்கம் வழியாக அக்கரையில் உள்ள இஸ்கான் கோயிலை வந்தடைந்தது.
இதையடுத்து, மாலை 6 மணிக்கு பிரபுபாதா நாடக குழுவினரின் ‘நீல மாதவர்’ என்ற தலைப்பில் ஆன்மிக நாடகம் நடந்தது. தொடர்ந்து, இரவு 9 மணி வரை இஸ்கான் கோயிலில் பக்தர்கள் சுவாமி தரிசனமும், கீர்த்தனைகளும் நடைபெற்றது. இறுதியாக இஸ்கான் சார்பில் பக்தர்களுக்கு பிரசாதம் வழங்கப்பட்டது.