Last Updated : 31 May, 2018 10:51 AM

 

Published : 31 May 2018 10:51 AM
Last Updated : 31 May 2018 10:51 AM

கிறிஸ்துவின் தானியங்கள்: ஒரே ஒரு வார்த்தை மட்டும் போதும்

இயேசுவின் காலத்தில் ஜெருசலேமை ரோமானியர்கள் ஆண்டுவந்தனர். அதேநேரத்தில் யூதர்களின் மத நம்பிக்கைகளில் அவர்கள் தலையிடவில்லை. மேலும் ரோமானிய ஆளுநருக்கு அடுத்த நிலையில் யூத மதத்தின் அதிகார வர்க்கமாகிய யூத தலைமைச் சங்கத்தார் இருந்தனர். அவர்கள் யூத இனம் மட்டுமே புனிதமானது என்ற நம்பிக்கையுடன் வாழ்ந்துவந்தார்கள். அவர்களின் பழமைவாதத்தைத் துணிச்சலாகக் கேள்விக்குள்ளாக்கியவர் இயேசு. இதை இயேசுவின் வாழ்வில் நிகழ்ந்த ஒரு சம்பவம் வழியாகவே நாம் தெரிந்துகொள்ளமுடியும்.

நூற்றுவர் தலைவனின் கோரிக்கை

ஜெருசலேம், கப்பர்நாகூம், சமாரியா உள்ளிட்ட பெரிய நகரங்களின் சட்டம் ஒழுங்கைக் காத்துவந்த ரோமானியப் படையணியில், யூதர்கள் அல்லாத பிற இனத்தைச் சேர்ந்தவர்களும் உயர்ந்த பொறுப்புகளில் இருந்தனர். நூறு படை வீரர்களுக்குத் தலைவராக இருப்பவர்களை ‘நூற்றுவர் தலைவர்’ எனப் பெயரிட்டு அழைத்தனர். அப்படியான ‘நூற்றுவர் தலைவர்’ ஒருவர், இயேசுவைத் தேடி வந்தார். அதைக் குறித்து, மத்தேயு எழுதிய நற்செய்தியிலிருந்து அதிகாரம் 8-ல் 5 முதல் 17வரையிலான, இறை வசனங்களைப் படித்துத் தெரிந்துகொள்ளலாம்.

அந்தக் காலத்தில் இயேசு கப்பர்நாகூமுக்குச் சென்றபோது ‘நூற்றுவர் தலைவர்’ ஒருவர் அவரிடம் உதவி வேண்டி வந்தார். “ஐயா, என் மகன் முடக்கு வாதத்தால் மிகுந்த வேதனையுடன் படுத்த படுக்கையாகக் கிடக்கிறான்” என்றார். இயேசு அவரிடம், “நான் உங்கள் வீட்டுக்கு வந்து அவனைக் குணமாக்குவேன்” என்றார். நூற்றுவர் தலைவர் மறுமொழியாக, “ஐயா, நீர் என் வீட்டுக்குள் அடியெடுத்து வைக்க நான் தகுதியற்றவன். ஆனால், ஒரே ஒரு வார்த்தை மட்டும் சொல்லுங்கள், என் மகன் நலமடைவான். நான் அதிகாரத்துக்கு உட்பட்டவன். என் அதிகாரத்துக்கு உட்பட்ட படைவீரர்கள் உள்ளனர். நான் அவர்களுள் ஒருவரிடம் ‘செல்க’ என்றால் செல்கிறார். வேறு ஒருவரிடம் ‘வருக’ என்றால் வருகிறார்.

என் பணியாளரைப் பார்த்து ‘இதைச் செய்க’ என்றால் அவர் செய்கிறார்” என்றார். இதைக் கேட்ட இயேசு, தம்மைப் பின்தொடர்ந்து வந்தவர்களை நோக்கி, “உறுதியாக உங்களுக்குச் சொல்கிறேன்: இஸ்ரவேல் மக்கள் யாரிடமும் இத்தகைய நம்பிக்கையை நான் கண்டதில்லை. கிழக்கிலும் மேற்கிலும் இருந்து பலர் வந்து ஆபிரகாம், ஈசாக்கு, யாக்கோபு ஆகியோருடன் விண்ணரசின் பந்தியில் அமர்வார்கள். அரசுக்கு உரியவர்களோ புறம்பாக உள்ள இருளில் தள்ளப்படுவார்கள். அங்கே அழுகையும் அங்கலாய்ப்பும் இருக்கும்” என்றார்.

பின்னர் இயேசு நூற்றுவர் தலைவரை நோக்கி, “நீர் போகலாம், நீர் நம்பியவண்ணமே உமக்கு நிகழும்” என்றார். நூற்றுவர் தலைவர் வீட்டுக்குத் திரும்பிச் சென்றபோது அவரது மகன் குணமடைந்துவிட்ட அதிசயம் நிகழ்ந்திருந்தது. அதன்பின் இயேசு பேதுருவின் வீட்டுக்குள் சென்றபோது, பேதுருவின் மாமியார் காய்ச்சலாய்ப் படுத்திருப்பதைக் கண்டார். இயேசு அவரது கையைத் தொட்டதும் காய்ச்சல் நீங்கிற்று. அவரும் எழுந்து இயேசுவுக்குப் பணிவிடைசெய்தார்.

பேய் பிடித்த பலரை மாலை வேளையில் இயேசுவிடம் கொண்டு வந்தனர். அவர் ஒரு வார்த்தை சொல்ல தீய ஆவிகள் ஓடிப்போயின. மேலும் எல்லா நோயாளிகளையும் அவர் குணமாக்கினார். இவ்வாறு, ‘அவர் நம் பிணிகளைத் தாங்கிக்கொண்டார்; நம் துன்பங்களைச் சுமந்துகொண்டார்’ என்று இயேசுவுக்கு முன்பு வாழ்ந்த இறைவாக்கினர் எசாயா உரைத்த தீர்க்க தரிசனம் நிறைவேறியது.

கடவுளின் பந்தியில் அனைவருக்கும் இடம் உண்டு

இயேசுவின் வார்த்தைகள், அதுவரையிலான யூதர்களின் நம்பிக்கை பற்றிய பார்வையை அடியோடு புரட்டிப்போட்டது. ‘நூற்றுவர் தலைவன்’, தனது மகனைக் குணப்படுத்த இயேசுவின் உதவியை நாடுகிறார். அதில் உள்ள பிரச்சினையும் அவருக்குத் தெரியும். யூதச் சட்டப்படி, ஒரு யூதர் புற இனத்தவரின் வீட்டுக்குச் செல்லக்கூடாது. புறவினத்தார் வாழக்கூடிய பகுதிகள், யூதர்களின் பார்வையில் தூய்மையற்றவை, பிரவேசிக்கத் தகுதி அற்றவை. இயேசு ஒரு யூதர்.

‘நூற்றுவர் தலைவன்’ ஒரு புற இனத்தவர். இந்தச் சிக்கல் இரண்டு பேருக்குமே தெரிந்திருக்கிறது. அப்படியிருந்தும், இயேசு, “நான் உங்கள் வீட்டுக்கு வந்து உங்கள் மகனைக் குணப்படுத்துவேன்” என்கிறார். இயேசு நடைமுறையில் இருக்கும் தீண்டாமைப் பிரச்சினை அறியாமல் அதைச் சொல்லவில்லை. மாறாக, ‘நூற்றுவர் தலைவனின்’ பதில் என்னவாக இருக்கப் போகிறது என்பதை எதிர்பார்த்துச் சொல்கிறார்.

இந்த இடத்தில்தான் இயேசுவின் மீதான நூற்றுவர் தலைவனின் ஆழ்ந்த நம்பிக்கை வெளிப்படுகிறது. அந்த நம்பிக்கையைப் பாராட்டும் இயேசு, அடுத்து கடவுளின் சித்தம் எதுவென்பதை அதிரடியாக அறிவிக்கிறார். அதாவது, “கிழக்கிலும், மேற்கிலுமிருந்து பலர் வந்து, கடவுள் தேர்ந்துகொண்ட இஸ்ரவேலின் வெவ்வேறு இனத்தில் பிறந்த மூதாதையர்களான ஆபிரகாம், ஈசாக்கு, யாக்கோபு ஆகியோருடன் விண்ணரசின் பந்தியில் அமர்வர்” என்பதுதான் அந்தச் செய்தி.

கடவுள் வாக்குறுதி அளித்த மீட்பர் இந்த மண்ணுலகுக்கு வருகிறபோது செய்யப்படுகிற விருந்தில் புற இனத்தவர்க்கு இடமே கிடையாது என்ற நம்பிக்கையில் இருந்த யூதர்களுக்கு, இந்தச் செய்தி காதில் ஈயத்தைக் காய்ச்சி ஊற்றியதைப்போல இருந்தது.

இயேசுவின் எண்ணம் பரந்துபட்ட எண்ணம். அது அடிமைத்தளைகளை உடைத்தெறிகிற எண்ணம். அனைவரையும் ஏற்றுக்கொள்ளக்கூடிய எண்ணம். இந்த உலகத்தில் இருக்கிற அனைத்து மக்களையும் கடவுளின் பிள்ளைகளாகப் பார்க்கக்கூடிய எண்ணம். இயேசுவைப் பின்பற்றுகிற அனைவரும் வேறுபாடுகளைக் கடந்து அனைவரையும் தங்கள் சொந்தச் சகோதரர்களாக ஏற்றுக்கொள்வார்கள் என்பதையே இயேசுவின் இந்த அறிக்கை எடுத்துக்காட்டுகிறது.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x