Published : 07 Aug 2014 12:00 AM
Last Updated : 07 Aug 2014 12:00 AM

மனிதன் துன்புறும்போது கடவுள் என்ன செய்கிறார்?

“கடவுளுக்கு என்னப்பா கவலை? அவர் சகல சவுகரியங் களோடும் வானுலகில் இருக்கிறார், ஆனா நாமதான் இங்க பாடாதபாடு படுறோம்!”

நடைமுறை வாழ்வின் நெருக்கடிகள் தரும் அழுத்தத்தால் இப்படிச் சொல்லாத மனிதர்கள் பூவுலகில் குறைந்த எண்ணிகையில்தான் இருப்பார்கள். இப்படிக் கடவுள் மீது குற்றச்சாட்டு வைப்பவர்களில் பதின்வயதை எட்டிய இளைஞர்கள் அதிமாக இருக்கிறார்கள். இவர்கள் பெரும்பாலும் கடவுளை வெறுப்பதில்லை. ஆனால் கடவுள் நாம் துன்புறும் வேளையில் அதை வேடிக்கை பார்த்துக்கொண்டிருக்கிறார், அல்லது நாம் துன்புற அனுமதிக்கிறார் என்று நினைக்கிறார்கள். உண்மையில் நாம் துன்புறுவதை வேடிக்கை பார்ப்பவரா கடவுள்?

நிகழ்கால உலகம்

இன்றைய தலைமுறையினர் பிரச்சினைகள் மிகுந்த ஓர் உலகில் பிறந்திருக்கிறார்கள். இயற்கை பேரழிவுகள், சாலை விபத்துகள், உள்நாட்டுப் போர்கள், அண்டை தேசம் தொடுக்கும் போர்கள், இன அழிப்பு, தீவிரவாதிகளின் தாக்குதல்கள், கொடூர கொள்ளை நோய்கள், குடிநோய், பட்டினி, குடிநீரின்மை என தினசரி ஆயிரக்கணக்கானோருடைய உயிர்களைப் பறிகொடுக்கும் பூமியில் வாழ்ந்து கொண்டிருக்கிறோம். நமது நேசத்திற்குரியவர்களை எதாவது ஒருவகையில் நாம் இழக்கும்போது கடவுளைத் திட்டுவதன் மூலம் நாம் நமது கோபத்தையும் ஆற்றாமையையும் கொஞ்சம் குறைத்துக்கொள்கிறோம்.

துயர நிகழ்வுகளைச் சந்திக்கும்போதெல்லாம் கோபப்படுவது மனிதனின் இயல்பான குணங்களில் ஒன்றுதான். ஆனால் எனக்கு மட்டும் ஏன் இப்படி நடக்க வேண்டும் எனப் பலர் கேட்கலாம். ஏற்றுக்கொள்வதற்கு நம் மனம் மறுத்தாலும், மரணமும் வேதனையும் வாழ்க்கையின் நிஜங்கள். “பெண்ணிடமிருந்து பிறந்த மனிதன் வாழ்நாள் குறுகினவனும் சஞ்சலம் நிறைந்தவனுமாயிருக்கிறான்.” (யோபு14:1) என்று யோபு நிதர்சனத்தை எடுத்து வைக்கிறார். அப்படியானால் பூவுலகின் இந்தத் துயரங்களில் இருந்து ஆறுதல் பெற முடியாதா என்ற கழிவிரக்கம் நிரம்பிய கேள்வி எழுகிறதல்லவா?

இயேசு சொன்ன பதில்

கிட்டத்தட்ட இதே கேள்வியை இயேசுவின் சீடர்களும் கேட்டார்கள். ஆனால், “உலகம் முடியும் கடைசி நாள்வரை நிலைநிற்பவனே இரட்சிக்கப்படுவான்” என இயேசு கூறினார் (மத்தேயு 24:3, 13). இயேசுவின் பதில் தொலைநோக்குப் பார்வையுடன் அமைந்திருக்கிறது. எந்தவொரு பிரச்சினைக்கும் முடிவு என்ற ஒன்று உண்டு. அந்த முடிவு வரும் முன் பல கஷ்டங்களைச் சகித்துக்கொள்வதற்கு நாம் தயாராக இருக்க வேண்டும்.

அப்படியானால், மனிதன் உள்ளிட்ட பூவுலக உயிர்களின் மத்தியில் துன்பத்தை அனுமதிக்கும் கடவுளிடம் நாம் கோபப்படுவது நியாயமா? துன்பங்கள் அனைத்துக்கும் முடிவைக் கொண்டுவருவேன் என்று கடவுள் வாக்குறுதி அளித்திருப்பதைப் பார்க்கும்போது இப்படிக் கோபப்படுவதில் நியாயமில்லை. கெட்ட காரியங்களை கடவுளே ஏற்படுத்துகிறார் என்று நினைப்பதும் நியாயமில்லை.

தவறுகள் நிறைந்த வாழ்க்கை

கடவுள் மீது குற்றம் காணுவதை விட, அவர் நம்மை வாழச் சொன்ன வாழ்வை நாம் வாழ்கிறோமா என்பதை எண்ணிப் பார்க்க வேண்டும். பூமியில் மனித இனம் எதிர்கொள்ளும் எல்லாத் துன்பங்களின் பின்னணியும் கடவுள் காட்டிய கட்டளைகளுக்கு அடிபணியாமல் வாழ்வதால் ஏற்படும் எதிர்விளைவாகத்தானே இருக்கிறது? நமக்குத் துன்பம் வரும்போது அதன் ஊற்றுக் கண்ணை நாம் ஏன் காண மறந்த குருடர்கள் ஆகிவிடுகிறோம்?

இது சோதனை அல்ல

மாறாக நாம் துன்பப்படவும், கஷ்டப்படவும் வேண்டுமென்று கடவுள் விரும்புகிறார் என்றோ கடவுள் நம்மைச் சோதிக்கிறார் என்றோ எண்ண வேண்டியதில்லை. கஷ்டங்கள் நம்மைப் பக்குவப்படுத்தலாம் என்பதும், கடவுள் அனுமதிக்கும் சோதனைகள் நம்முடைய இறைநம்பிக்கையைச் சுத்திகரிக்கலாம் எனவும் பைபிள் சொல்கிறது. அதேநேரம் கடும் சோதனைகளையும் துன்பங்களையும் சந்திக்கும் பலர், பொறுமைசாலிகளாகவும் இரக்கமுள்ளவர்களாகவும் மாறுகிறார்கள்.

இவர்களது வழிகாட்டுதல் அவர்களது வம்சாவளியினரையும், அவர்களுக்கு நெருக்கமானவர்களையும் துன்பங்களில் சிக்கிக்கொள்ளாமல் காக்கிறது . “சோதிக்கப்படுகிற எவனும், நான் தேவனால் சோதிக்கப்படுகிறேன் என்று சொல்லாதிருப்பானாக; தேவன் பொல்லாங்கினால் சோதிக்கப்படுகிறவரல்ல, ஒருவனையும் அவர் சோதிக்கிறவருமல்ல.”

துன்பம் யாருடைய அதிகாரம்?

அப்படியானால், துன்பம் எங்கிருந்து ஆரம்பமாகிறது? கடவுளுக்கும் எதிரிகள் இருக்கிறார்கள் என்பதை மறந்துவிடாதீர்கள்; அதில் பிரதானமானவன் ‘உலகமனைத்தையும் மோசம்போக்குகிற தீய சக்தி என்றும் சாத்தான் என்றும் சொல்லப்பட்டவனே.’ (வெளிப்படுத்துதல் 12:9) என விவிலியம் நமக்கு வெளிப்படுத்துகிறது. ஆக, துன்பம் சாத்தான் செலுத்தும் அதிகாரமாக இருக்கிறது. நாம் செல்கிற வாழ்வின் பாதையும், நேர்மையின்மையும், ஏமாற்றுதலும், சக மனிதனை நம் காலுக்குக் கீழே வைத்து மிதிப்பதும் உயிர்களைக் போக்கும் கொலை பாதகமும், பிறர் உயிர்போகக் காரணமாய் நாம் இருப்பதுமான கொலை பாதகமும் தீயசக்தியின் பாதையே என்பதை விவிலியம் திட்டவட்டமாகச் சொல்கிறது.

ஆதாம் ஏவாளாக நாம் பாதை தவறிய பயணத்தைத் தொடங்கினோம். ஆனால் இன்றுவரை நாம் தீய சக்தியின் அடிமைகளாக இருப்பதிலேயே இன்பத்தைக் காண்கிறோம். பாவத்தின் வழியான இன்பம் என்பது ஒரு நாண யத்தின் ஒரு பக்கம் மட்டுமே என்கிறது விவிலியம். அதன் இரண்டாம் பக்கம் நாமாக உருவாக்கிக்கொண்ட துன்பம்.

எனினும் மனிதர்களை மீட்கவே தன் மகனாகிய இயேசுவை நம் மத்தியில் அனுப்பினார் வானுலகத் தந்தை. இயேசுவே ஒரு சமயம் தனது நண்பரை இழந்தபோது ‘கண்ணீர் விட்டாரே!’(யோவான் 11:35) என்கிறார் யோவான். கடவுளே மனித உரு எடுத்தபோது கண்ணீர் சிந்த வேண்டியிருந்தது. தீமைகளை எதிர்த்துப் போராடி அவர் மரித்தபோது, அவரது தாய் தந்தையரைக் கடும் சோகத்துக்கு ஆளாக்க வேண்டி வந்தது.

என்றாலும் ஒருநாள், நாம் “அழிவுக்குரிய அடிமைத்தனத்தினின்று விடுதலையாக்கப்பட்டு, தேவனுடைய பிள்ளைகளுக்குரிய மகிமையான சுயாதீனத்தைப் பெற்றுக்கொள்வோம்” என பைபிள் உறுதியளிக்கிறது. (ரோமர் 8:21) அதுவரை, நல்லவர்களும் ஞானவான்களும், பூவுலகுக்காகக் கண்ணீர் சிந்துகிறவர்களும்கூடத் துன்பப்படலாம்.

இத்தகைய துன்பம் ஏன் வருகிறது என்பதையும், அது தொடர்ந்து நீடித்திருக் காது என்பதையும் அறிந்து கொண்டதன் மூலம் கடவுளுக்கு நெருக்கமான ஞான வானாக இந்தக் கணம் முதல் மாறுகிறோம்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x