

காரைக்கால்: காரைக்கால் அம்மையார் கோயிலில் ஆண்டுதோறும் மாங்கனித் திருவிழா விமரிசையாக நடைபெறும். நடப்பாண்டு விழா நேற்று மாலை பரமதத்தர் அழைப்பு (மாப்பிள்ளை அழைப்பு) வைபவத்துடன் தொடங்கியது.
இதையொட்டி, சுந்தராம்பாள் சமேத கைலாசநாதர் கோயிலில் அனுக்ஞை, விக்னேஸ்வர பூஜை நடைபெற்றது. பின்னர், ஆற்றங் கரை சித்தி விநாயகர் கோயிலில் சிறப்பு பூஜைகள் செய்யப்பட்டு, அங்கிருந்து மாப்பிள்ளை அலங்காரத்தில் பரமதத்த செட்டியாரை, மங்கல வாத்தியங்கள் முழங்க அம்மையார் கோயிலுக்கு ஊர்வலமாக அழைத்துவரும் மாப்பிள்ளை அழைப்பு வைபவம் நடைபெற்றது.
இந்த நிகழ்ச்சியில், அமைச்சர் பிஆர்என்.திருமுருகன், நிர்வாக அதிகாரி (கோயில்கள்) கு.அருணகிரிநாதன், கைலாசநாதர் கோயில் நிர்வாக அதிகாரி ஆர்.காளிதாசன் மற்றும் திரளான பக்தர்கள் பங்கேற்றனர்.
இன்று (ஜூன் 20) காலை 7.35 மணிக்கு புனிதவதியார் தீர்த்தக் கரைக்கு வருதல், 8 மணிக்கு பரமதத்த செட்டியார் குதிரை வாகனத்தில் திருக்கல்யாண மண்ட பத்துக்கு வருதல், பகல் 11 மணிக்கு திருக்கல்யாண வைபவம் ஆகிய நிகழ்ச்சிகள் நடைபெறும். மாலை 6.30 மணிக்கு பிச்சாண்டவர் வெள்ளை சாற்றி புறப்பாடு, இரவு 10 மணிக்கு பரமதத்த செட்டி யாரும், புனிதவதியாரும் முத்துச் சிவிகையில் திருவீதியுலா நடைபெறும்.
மாங்கனி இறைத்து வழிபடுதல்: விழாவின் முக்கிய நிகழ்ச்சியான, பவழக்கால் சப்பரத்தில் சிவபெருமான் பிச்சாண்டவர் கோலத்தில் வீதியுலா வரும்போது பக்தர்கள் மாங்கனிகளை இறைத்து இறைவனை வழிபடும் நிகழ்ச்சிநாளை (ஜூன் 21) காலை நடைபெறுகிறது.
மாலை 6 மணியளவில் அம்மையார் பிச்சாண்டவரை எதிர்கொண்டு அழைத்து மாங்கனியுடன் அமுது படைக்கும் நிகழ்வும், இரவு 11 மணிக்கு பாண்டிய நாடாகிய சித்தி விநாயகர் கோயிலில் பரமதத்தருக்கு 2-வது திருமண நிகழ்வும் நடைபெறும்.
வரும் 22-ம் தேதி அதிகாலை அம்மையார் பேய் உருவம் கொண்டு திருக்கயிலாய மலைக்கு சிவபெருமானைக் காண்பதற்காக தலையால் நடந்து செல்லும் நிகழ்வு, இறைவன் அம்மையாருக்கு காட்சிக் கொடுக்கும் நிகழ்வுஆகியவற்றுடன் மாங்கனித் திருவிழாவின் முக்கிய நிகழ்வுகள் நிறைவடைகின்றன.