Last Updated : 09 May, 2018 12:43 PM

 

Published : 09 May 2018 12:43 PM
Last Updated : 09 May 2018 12:43 PM

ஜோதிடம் அறிவோம்! 38 இதுதான்... இப்படித்தான்! உங்கள் நட்சத்திரம் என்ன? உங்கள் குணம் இதுதான்!

திருமணத்தின் போது நட்சத்திரப் பொருத்தம் பார்க்கப்படுகிறதே... அது திருமணத்திற்கு மட்டுமா? அல்லது அதில் ஏதேனும் சிறப்புத் தகவல் உண்டா? என்பது குறித்துப் பார்க்கலாம் என தெரிவித்திருந்தேன்.

இப்போது அதுபற்றிப் பார்க்கலாம்.

உண்மையில் நட்சத்திரங்கள் என்பது உங்களை யாரெனக் காட்டக்கூடியவை. உங்கள் குணாதிசியங்களை அப்படியே உள்ளது உள்ளபடி, கண்ணாடியெனக் காட்டக் கூடியவை. உங்கள் உடல் மொழியைச் சொல்லிவிடும். உங்கள் குணத்தையேக் காட்டிவிடும்.

முதலில் இந்தப் பத்துப் பொருத்தங்கள் என்ன? அது தனிமனித வாழ்வில் என்ன செய்யும் என்பதைப் பார்க்கலாம்.

தசவித பொருத்தம் என்பது பத்துப் பொருத்தம். தசம் என்றால் பத்து. உண்மையில் இது 20 ஆக இருந்தது, தற்போது இது 10 ஆக குறைந்திருக்கிறது. இன்னும் சில காலங்களில் இது 5 ஆக மாறும் ( இப்போதே நான் உட்பட சில ஜோதிடர்கள் 3 பொருத்தம் மட்டுமே பார்க்கிறோம்)

1) தினப்பொருத்தம், 2)கணப்பொருத்தம், 3) மகேந்திர பொருத்தம், 4)ஸ்தரீ தீர்க்கம், 5)ராசி பொருத்தம், 6)ராசி அதிபதி பொருத்தம், 7) யோனி பொருத்தம், 8) ரஜ்ஜு பொருத்தம், 9) வசிய பொருத்தம் 10) வேதை பொருத்தம்.

மற்றும் நாடி, மரம் என்றெல்லாம் உண்டு.

இப்போது திருமணப் பொருத்தப் பாடம் நடத்தமாட்டேன். இதில் இருக்கும் சூட்சும ரகசியங்களை பகிர்ந்துகொள்ளப் போகிறேன்.

தினம்:- இது நாம் ஏற்கெனவே பார்த்த தாரா பலம் பற்றியது. போதுமான வரை பார்த்துவிட்டோம். எனவே அடுத்து பார்க்கலாம்.

கணம்:- ஒருவருடைய தாங்கும் சக்தி அல்லது ஏற்றுக்கொள்ளும் பக்குவம் (மனதளவில்) பற்றி அறிந்து கொள்வது ஆகும்.

இதை பற்றி அறிவதற்கு முன்,

நீங்கள் என்ன கணம் என தெரிந்து கொள்ளுங்கள்.

கணம் மூன்று வகையாக உள்ளது.

1) தேவ கணம், 2) மனுஷ கணம், 3) ராஜச கணம்.

1) தேவகணம்:- அசுவினி,மிருகசீரிடம்,புனர்பூசம்,பூசம், அஸ்தம்,சுவாதி, அனுஷம், திருவோணம், ரேவதி

இந்த 9 நட்சத்திரங்களும் தேவ கணத்தைச் சேர்ந்தது.

2) மனுஷகணம்:- பரணி, ரோகிணி, திருவாதிரை, பூரம், உத்திரம், பூராடம், உத்திராடம், பூரட்டாதி, உத்திரட்டாதி. இந்த 9 நட்சத்திரங்களும் மனஷ கண நட்சத்திரங்களாகும்.

3) ராஜசகணம்:- கார்த்திகை, ஆயில்யம், மகம், சித்திரை,விசாகம்,கேட்டை, மூலம், அவிட்டம், சதயம். இந்த 9 நட்சத்திரங்களும் ராஜச கணம் ஆகும்.

இப்போது நீங்கள் எந்த கணம் என்பதை தெரிந்துகொண்டிருப்பீர்கள்.

இந்த கணம் என்ன செய்யும்?

தேவகணம்:- மிக மென்மையானவர். அதிர்ந்து பேசாதவர். இரக்ககுணம் உடையவர். பிரதிபலன் எதிர்பாராமல் உதவுபவர். அதிர்ச்சிகளைத் தாங்காதவர். பய உணர்வு உள்ளவர். கடின உழைப்பு செய்யாதவர். ( ஆசிரியர். வங்கி பணி, அலுவலகத்தில் அமர்ந்து வேலை பார்ப்பவர், மூளை உழைப்பு) மருத்துவரிடம் ஊசி போடும்போது தன்னை அறியாமல் அலறுபவர். போதைப் பழக்கம் பழகாதவர். ஆனால் போதைப் பழக்கம் பழகினால் மீள முடியாதவர். அந்த பழக்கத்தினால் தன் ஆயுளைத் தானே குறைத்துக்கொள்பவர். மிக மென்மையான தோல் உடையவர். தலைமுடி மிக மென்மையாக இருக்கும்.

மனுசகணம்:- ஒன்றைக் கொடுத்து ஒன்றைப் பெறுபவர். உதவும் மனப்பான்மை இருக்கும். இருந்தாலும் தயக்கப்படுபவர். சக மனித நட்பு உடையவர். மிதமான உழைப்பை உடையவர்.

அலைச்சல் மிகுந்த தொழில் , பயணத்தொழில், உணவகத்தொழில், தோல் சற்று கடின அமைப்பை உடையவர். எனவே ஊசி போடும் போது மெலிதாக சத்தம் போடுபவர். தலைமுடி பலமுறை வாரியபின் அடங்கும். போதை பழக்கம் “இருக்கும் ஆனால் இருக்காது “ தேவை என்றால் மட்டும் அல்லது அடுத்தவர் பணத்தில் என்றால் மட்டும் இந்தப் பழக்கம் இருக்கும். மனது வைத்தால் திருந்தலாம்.

ராஜசகணம்:- ஒற்றை வரியில் சொல்வதென்றால் இவருக்கு எதுவும் பிரச்சினையில்லை, அதாவது தான் செய்வதுதான் சரி என்ற மனப்பான்மையும், பிடிவாதமும் உண்டு. கடின உழைப்பாளி. வெயில், மழை, குளிர் என எதுவும் பாதிக்காது. பாதித்தாலும் விரைவில் மீண்டுவிடுவார். கட்டிடத் தொழில், உயரமான இடங்களில் வேலை, அரசியல், காவல், ராணுவம், மன தைரியம் மிக்க வேலைகளைப் பார்ப்பவர். மருத்துவரிடம் ஊசி போட்டால் ஊசி போட்டாச்சா என கேட்பவர் ( உறைக்காது). தோல் கடினமாக இருக்கும். தலைமுடி வாரவே தேவையில்லை. கோரைப்புல் போல, கம்பி போல “ரப்” பாக இருக்கும்.

போதை பழக்க வழக்கம் இவரை பாதிக்காது (அதற்காக போதைப் பழக்கத்தை பழக வேண்டாம், இது மானுட உடல் அமைப்புக்கான உதாரணம்) போதைப் பழக்கம் பழக மீளவும் மாட்டார். அதற்கான முயற்சியும் எடுக்க மாட்டார்.

இதில் நீங்கள் யார் என அறிந்து கொண்டீர்களா?

இதை நீங்களே உங்களுடன் ஒப்பிட்டு பார்த்துக்கொள்ளுங்கள்.

இன்னும் பார்க்கலாம் பல தகவல்களை...

தேவகணத்தைச் சேர்ந்தவர் மெல்லிய மனம், குணம் உடையவராகவும், பலம் குறைந்தவராகவும் இருப்பவருக்கு ராஜச கணம் உள்ளவரை இணைத்தால் என்னாகும்?

அது ஆணோ பெண்ணோ, ராஜசத்தின் பலத்தை தேவகணம் தாங்குமா? எந்த விதத்திலும் ஒன்றுக்கொன்று சேராது. சேர்ந்தாலும் மனதளவில் பாதிப்பு ஏற்படும். ( ராஜசம் முரட்டுத்தனமாக இயங்கும், தேவகணம் மெல்லியதாக(soft) இயங்கும்)

எனவே இது எதிரெதிர் துருவங்கள்.

ஆக தேவகணத்தை தேவகணத்தோடுதான் இணைக்கவேண்டும்.

மாற்று ஏற்பாடாக மனுச கணத்தை இணைக்கலாம்.

மனுச கணம் சற்று விட்டுக்கொடுத்துப் போகும். தேவகணத்தின் எண்ணத்திற்கேற்ப தன்னை மாற்றிக்கொள்ளும்.

இந்த மானுசகணம் ராஜசத்தையும் அனுசரித்துப் போகும். எனவே ....

ராஜசம்=ராஜசம்+மானுசம்

தேவம்=தேவம்+மானுசம்

மானுச கணம்=தேவம்+ராஜசம்

இப்படி இணைந்த வாழ்க்கையில் எந்த பிரச்சினையும் வராது. வந்தாலும் அனுசரித்துப் போகும்.

இன்னும் பார்க்கலாம்.

ஜோதிடரைத் தொடர்பு கொள்ள:98841 60779

அடுத்த அத்தியாயம் வரும்14.5.18 திங்கட்கிழமை அன்று வெளிவரும்.

- தெளிவோம்

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x