Last Updated : 17 May, 2018 10:45 AM

 

Published : 17 May 2018 10:45 AM
Last Updated : 17 May 2018 10:45 AM

ஆன்மா என்னும் புத்தகம் 04: இது தாவோ வழி

சீனா, 2,300 ஆண்டுகளுக்கு முன்னர் உள்நாட்டுப் போரினாலும் மக்கள் கிளர்ச்சிகளாலும் பாதிப்புக்குள்ளாகியிருந்தது. கிளர்ச்சியாளர்களை அடக்குவதற்கு ஆட்சியாளர்கள் எல்லா வகையிலும் முயன்றுகொண்டிருந்தனர். இந்தக் காலகட்டத்தில், சுவாங் ட்சு (Chaung Tzu) என்ற சிறந்த தத்துவ ஞானி வாழ்ந்துவந்தார்.

ஓர் அரசர், தனக்கு ஆலோசகராக இருக்கும்படி அவரை அழைத்தார். ஆனால், ஆட்சியின் அடிப்படை அம்சமான ஊழலில் கறைபட விரும்பவில்லை என்று சொல்லி அந்த அழைப்பை ஏற்க அவர் மறுத்துவிட்டார்.

தாவோயிஸத்தின் அடித்தளங்களாகத் திகழும் புத்தகங்களில், இவர் எழுதிய ‘The Book of Chaung Tzu’ புத்தகமும் ஒன்று. பிரபல ‘தாவோ தே ஜிங்’ புத்தகம், இந்தப் புத்தகம் வெளியாவதற்கு 200 ஆண்டுகளுக்கு முன் வெளியானது. ‘The Book of Chaung Tzu’ புத்தகத்தில் ஏழு அத்தியாயங்களை சுவாங் ட்சு எழுதியதாகவும் மற்ற அத்தியாயங்களை அவருடைய மாணவர்கள் எழுதியதாகவும் கூறப்படுகிறது.

சீன வரலாற்றின் முக்கியமான பிரபல ஆளுமைகள் குறித்த உருவகங்களும் உப கதைகளும் இந்தப் புத்தகத்தில் இடம்பெற்றிருக்கின்றன. அத்துடன், சீனாவின் சிறந்த சிந்தனையாளர்களான கன்ஃபூசியஸ், லாவோ ட்சு, லை ட்சு (Lieh Tzu) ஆகியோர் இடையிலான கற்பனை உரையாடல் பகுதிகள் இந்தப் புத்தகத்தின் சுவாரசியமான அம்சமாக இருக்கின்றன.

தாவோ என்றால் என்ன?

உலகில் அனைத்தும் இயல்பாக இயங்குவதற்கான மூலாதாரமாக தாவோ விளங்குகிறது. ஓர் அறிவார்ந்த, வெற்றிகரமான மனிதர், பிரபஞ்சத்தை இயக்கும் இந்தச் சக்தியைப் பற்றிய விழிப்புடன் செயல்படுகிறார். இந்தச் சக்தியுடன் ஒத்திசைவைப் பேணுகிறார். இந்தச் சக்திதான் எல்லாவற்றுக்குமான ஆதாரம் என்பதை அவர் எப்போதும் மறப்பதில்லை.

தாவோவில் அடைக்கலம்

இந்தப் புத்தகத்தின் ‘சீசன் ஆஃப் தி ஆட்டம் ஃப்ளட்ஸ்’ (Season of the Autumn Floods) என்ற அத்தியாயத்தில் இந்த உருவகக் கதை இடம்பெற்றிருக்கிறது.

ஓர் இலையுதிர்க் கால வெள்ளம் வந்தபோது, தன் நீர் எல்லைகள் விரிவடைந்ததால் மஞ்சள் நதியின் கடவுள் மகிழ்ச்சியடைந்தார். அவர் வடக்குக் கடலை அடையும்வரை கம்பீரத்துடன் ஆர்ப்பரித்துவந்தார். அங்கே, கடலின் கடவுளான ‘ஜோ’வை அவர் எதிர்கொண்டார். ‘ஜோ’ கடவுளின் எல்லை அற்ற பரப்பைப் பார்த்து மஞ்சள் நதியின் கடவுள் அமைதியைக் கைகொண்டார். இந்தக் கதையில் வரும் மஞ்சள் நதியின் கடவுள், கிணற்றின் மேல் அமர்ந்திருக்கும் தவளை, தனக்கு முன்னாலிருக்கும் நீரைப் பார்த்து வியப்பதைப் போல் தன்னை வியந்துகொள்கிறார்.

அந்தத் தவளை எப்படிக் கடலின் பெரும்பரப்பைப் பற்றி அறிந்திருக்கவில்லையோ, அதேபோல மஞ்சள் நதியின் கடவுளும் அறிந்திருக்கவில்லை. கோடையில் மட்டும் வாழும் பூச்சிக்குப் பனிக்கட்டியைப் பற்றி எதுவும் தெரியாது. அதேமாதிரி, ஏற்கெனவே போதனைகளால் நிரம்பிவழியும் ஓர் அறிஞரால், தாவோவைப் புரிந்துகொள்ள முடியாது. தாவோயிஸத்தைப் பற்றிக் கொஞ்சம் அறிந்துவைத்திருக்கும் ஒருவர், தன்னை மேம்பட்டவராக நினைத்துகொள்ளலாம். ஆனால், அது தாவோவுடன் ஒத்திசைவுடன் இருப்பது ஆகாது என்று விளக்குகிறார் சுவாங் ட்சு.

எளிமையே சிறந்தது

சீன அரசர் ஒருவர் பதவியைத் துறந்து துறவறம் ஏற்க நினைத்தார். தன் பதவியை ஷான் சுவான் என்பவருக்கு வழங்க நினைத்தார். இந்தக் காலகட்டத்தில் அரசர்கள் ‘சொர்க்கத்தின் மைந்தர்கள்’ என்று அழைக்கப்பட்டனர். அரசராக இருப்பது மாபெரும் பேறாகக் கருதப்பட்டது. ஆனால், ஷான் சுவான், “நான் ஏன் நாட்டை ஆட்சிபுரிய வேண்டும்?” என்று கேட்டார். அவர் தன் நிலத்தில் விவசாயம் செய்து மாறும் பருவநிலைகளைக் கொண்டாடியபடி எளிமையான வாழ்க்கையை வாழ்ந்துகொண்டிருந்தார்.

அவருக்கு அதிகாரத்திலும் கவுரவங்களிலும் எந்த நாட்டமும் இல்லை. பதவியையும் புகழையும் ஒருவர் அடையும்போது, அவர்கள் அதைத் தக்கவைத்துகொள்ளவே வாழ்க்கையின் பெரும்பாலான நேரத்தைச் செலவிடுகிறார்கள். அதனால் வாழ்க்கையை வாழ முடியாமல் போகிறது. இந்தப் புத்தகத்தில் சுவாங் ட்சு, “தாவோவுடன் ஒத்திசைவுடன் இருப்பவர்கள், எப்போதும் அதிகாரம் நிறைந்த வாழ்க்கையைவிட அமைதி நிறைந்த வாழ்க்கையைத் தேர்ந்தெடுப்பார்கள்” என்கிறார்.

தாவோவின் பண்புகள்

# இந்தப் புத்தகத்தில் சுவாங் ட்சுவின் கதைகளிலும், விளக்கங்களிலும் தாவோவுடன் ஒத்திசைவுடன் இருப்பவரின் பண்புகளாக கீழ்க்கண்டவற்றைக் குறிப்பிடுகிறார்:

# தாவோவுடன் ஒத்திசைவுடன் இருக்கும் நபருக்குப் பெரிய திட்டங்கள் எவையும் இருக்காது. ஆனால், பிரச்சினைகள் உருவாகும்போது தகுந்தவாறு அவற்றை எதிர்கொள்வார்.

# தாவோவைப் பின்பற்றுபவர்கள் தங்கள் சுயத்திலிருந்து வெளியேறுவதை அனுமதிப்பார்கள். ஏனென்றால், அப்போதுதான் மற்றவர்களைத் தெளிவாகப் பார்க்க முடியும் என்று அவர்கள் உணர்ந்திருக்கிறார்கள்.

# பெரும்பாலானவர்கள் நிறைவைக் கண்டடைய முயல்வார்கள். ஆனால், அறிவார்த்தமான நபர் ஒன்றுமில்லாதவராக மாறுவதற்கு முயல்வார். அதுதான் தாவோவை அடைவதற்கான வழி.

# தாவோவுடன் ஒத்திசைவுடன் இருப்பவரின் வாழ்க்கையில், ஒரு குழந்தையின் மகிழ்ச்சி, சாதுவின் அறிவு என இரண்டும் இணைந்திருக்கும்.

15chgow_Chuang Tzu

# அவர்கள் வழக்கமான அறநெறிகளுக்கு அப்பாற்பட்டவர்களாக இருக்கின்றனர். நற்பண்புகளைப் பற்றி ஒருவர் யோசித்தாலே, அவர் இயல்பாக வாழவில்லை என்று அர்த்தம்.

# தாவோவுடன் ஒத்திசைவுடன் இருக்கும் நபர், அறிவை வாழ்க்கை நோக்குடன் அணுகுவார்கள். அவர்களின் ஞானம் வாழ்க்கை முழுமைத்துவத்தின் விழிப்பிலிருந்து கிடைக்கிறது.

# தாவோயிஸத்தைப் பற்றி அடிப்படையாகப் புரிந்துகொள்ள நினைப்பவர்களுக்கு இந்தப் புத்தகம் வழிகாட்டும்.

சுவாங் ட்சு

சுவாங் ட்சு, சீனாவில் கி.மு. 400-ம் நூற்றாண்டில் வாழ்ந்த தலைசிறந்த தத்துவஞானிகளில் ஒருவர். தத்துவஞானி லாவோ ட்சுவின் கருத்துகளைப் பின்பற்றியே இவர் தன் படைப்புகளை எழுதியிருக்கிறார். கன்ஃபூசியஸ் காலச் சமூகத்தையும் பிரபலங்களையும் இவர் தன் படைப்புகளில் நகைமுரணுடன் விமர்சித்திருக்கிறார்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x