

தஞ்சாவூர்: தஞ்சாவூரில் நேற்று 16 பெருமாள்கோயில்களின் உற்சவர்கள், வெண்ணெய்த்தாழி உற்சவம் என்னும் நவநீத சேவையில் வீதியுலா வந்தனர். இதில் ஏராளமான பக்தர்கள் கலந்துகொண்டு, சுவாமி தரிசனம் செய்தனர்.
இந்து சமய அறநிலையத் துறை, தஞ்சாவூர் அரண்மனை தேவஸ்தானம், ஸ்ரீராமானுஜ தரிசன சபா ஆகியவை சார்பில்90-வது ஆண்டாக கருட சேவைவிழா, தஞ்சாவூர் வெண்ணாற்றங்கரை நரசிம்ம பெருமாள் சந்நிதியில், திவ்யதேசப் பெருமாள்களுக்கு திருமங்கை ஆழ்வார் மங்களாசாசனத்துடன் கடந்த 28-ம் தேதி தொடங்கியது.
தொடர்ந்து, நேற்று முன்தினம்காலை வெண்ணாற்றங்கரையிலிருந்து திவ்யதேசப் பெருமாளுடன் 26 பெருமாள் கோயில்களின் உற்சவர்கள் கருட வாகனத்தில் வீதியுலா செல்லும் நிகழ்ச்சி நடைபெற்றது.
நேற்று நீலமேகப் பெருமாள், நரசிம்ம பெருமாள், மணிகுன்றப் பெருமாள், கல்யாண வெங்கடேச பெருமாள், கரந்தை யாதவ கண்ணன் கோயில், கீழராஜ வீதி வரதராஜ பெருமாள் உட்பட16 கோயில்களிலிருந்து உற்சவபெருமாள் சுவாமிகள், வெண்ணெய்த்தாழி உற்சவம் என்னும் நவநீத சேவையில் வீதியுலா செல்லும் நிகழ்ச்சி நடைபெற்றது.
தஞ்சாவூரின் நான்கு ராஜவீதிகளிலும் நடைபெற்ற இந்த விழாவில் ஏராளமானோர் கலந்துகொண்டு, சுவாமி தரிசனம் செய்தனர்.