தஞ்சாவூரில் ஒரே இடத்தில் 25 கருட சேவை

தஞ்சாவூரில் ஒரே இடத்தில் 25 கருட சேவை

Published on

தஞ்சாவூர்: தஞ்சாவூரில் ஒரே இடத்தில் 25 கருடசேவை வைபவ விழா நேற்று நடைபெற்றது.

இந்து சமய அறநிலையத் துறை,தஞ்சாவூர் அரண்மனை தேவஸ்தானம், ஸ்ரீ ராமானுஜ தரிசன சபா ஆகியவை சார்பில் ஆண்டுதோறும் வைகாசி மாத திருவோணநட்சத்திரத்தன்று திருமங்கையாழ்வாருக்கு மங்களாசாசனம், மறுநாள் கருட சேவை, அதற்கு அடுத்தநாள் நவநீத சேவை ஆகியவை நடைபெறுவது வழக்கம்.

அதன்படி நிகழாண்டு விழாமே 28-ம் தேதி தொடங்கியது. அன்றைய தினம் வெண்ணாற்றங்கரை ஸ்ரீ நரசிம்ம பெருமாள் சந்நிதியில் திவ்யதேச பெருமாள்களுக்கு திருமங்கை ஆழ்வார் மங்களாசாசனம் நடைபெற்றது.

தொடர்ந்து, வெண்ணாற்றங்கரையிலிருந்து நேற்று காலை திவ்யதேச பெருமாள்களுடன் கருட வாகனத்தில் புறப்பட்டு, கீழ வீதி, தெற்கு வீதி, மேல வீதி, வடக்கு வீதி ஆகிய ராஜ வீதிகளில் வீதியுலா நடைபெற்றது.

ராஜவீதியில் சேவை: இதில், நீலமேக பெருமாள், நரசிம்ம பெருமாள், மணிக்குன்ற பெருமாள், வேளூர் வரதராஜ பெருமாள், கல்யாண வெங்கடேசபெருமாள், யாதவ கண்ணன்,கொண்டிராஜ பாளையம் யோகநரசிம்ம பெருமாள், பள்ளியக்ரஹாரம் கோதண்டராமர், கீழ வீதி வரதராஜ பெருமாள், தெற்கு வீதி கலியுக வெங்கடேச பெருமாள் உட்பட 25 கோயில்களிலிருந்து பெருமாள்கள் எழுந்தருளி ராஜவீதிகளில் ஒரே நேரத்தில் பக்தர்களுக்கு சேவை சாதித்தனர். இதில் ஆயிரக்கணக்கான பக்தர்கள் பங்கேற்று திருப்பாசுரங்களை பாடியபடி பெருமாளை வழிபட்டனர்.

பின்னர், இன்று (மே 30) காலை நவநீத சேவை நடைபெறவுள்ளது. இதில், 16 கோயில்களிலிருந்து பெருமாள் சுவாமிகள் எழுந்தருளி, ராஜ வீதிகளில் ஒரே நேரத்தில் பக்தர்களுக்கு சேவை சாதிக்கஉள்ளனர்.

வெண்ணாற்றங்கரை சந்நிதிகளில் நாளை(மே 31) காலை விடையாற்றி உற்சவம் நடைபெறவுள்ளது. இதற்கான ஏற்பாடுகளை அந்தந்த கோயில் நிர்வாகிகள் செய்துள்ளனர்.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in