திருச்செந்தூரில் வைகாசி விசாக திருவிழா: லட்சக்கணக்கான பக்தர்கள் சுவாமி தரிசனம்

வைகாசி விசாகத்தையொட்டி திருச்செந்தூர் கடலில் புனித நீராட குவிந்த பக்தர்கள். படம்: என்.ராஜேஷ்
வைகாசி விசாகத்தையொட்டி திருச்செந்தூர் கடலில் புனித நீராட குவிந்த பக்தர்கள். படம்: என்.ராஜேஷ்
Updated on
1 min read

தூத்துக்குடி: திருச்செந்தூர் சுப்பிரமணிய சுவாமி கோயிலில் வைகாசி விசாகத் திருவிழாவை முன்னிட்டு நேற்று லட்சக்கணக்காண பக்தர்கள் கடலில் புனித நீராடி, சுவாமி தரிசனம் செய்தனர்.

முருகனின் ஜென்ம நட்சத்திரத் திருவிழாவான வைகாசி விசாகத் திருவிழா, கடந்த 13-ம் தேதி வசந்த விழாவாக தொடங்கியது. விழான் 10-ம் நாளான நேற்றுவைகாசி விசாகத்தை முன்னிட்டுஅதிகாலை கோயில் நடை திறக்கப்பட்டு, விஸ்வரூப தரிசனம், உதயமார்த்தாண்ட அபிஷேகம், மூலவருக்கு உச்சிகால அபிஷேகம் மற்றும் தீபாராதனைகள் நடைபெற்றன.

மாலையில் சுவாமி ஜெயந்திநாதர் திருக்கோயிலில் இருந்து தங்க சப்பரத்தில் எழுந்தருளி, வசந்த மண்டபம் சேர்ந்தார். அங்கு சுவாமிக்கு சிறப்பு அபிஷேகம், அலங்காரம், தீபாராதனை நடைபெற்றது.

தொடர்ந்து, வசந்த மண்டபத்தை சுவாமி 11 முறை வலம்வரும் வைபவமும், முனிக்குமாரர்களுக்கு சாப விமோசனம் அளிக்கும் வைபவமும் நடைபெற்றன. பின்னர், ஜெயந்திநாதர், வள்ளி, தெய்வானையுடன் கிரிவீதி வலம் வந்து, திருக்கோயிலை அடைந்தார்.

விழாவையொட்டி தமிழகத்தின் பல்வேறு பகுதிகளிலிருந்தும் லட்சக்கணக்கான பக்தர்கள் திருச்செந்தூரில் குவிந்தனர். அதிகாலையில் இருந்தே கடல் மற்றும் நாழிகிணற்றில் புனித நீராடி, நீண்டவரிசையில் காத்திருந்து சுவாமி தரிசனம் செய்தனர். மேலும் ஏராளமானோர் பாத யாத்திரையாக வந்தும், அலகுகுத்தியும், புஷ்ப காவடி, இளநீர் காவடி, பால்குடம் எடுத்தும் நேர்த்திக் கடன் செலுத்தினர்.

தமிழகத்தின் பல்வேறு பகுதிகளில் இருந்தும் திருச்செந்தூருக்கு சிறப்பு பேருந்துகள் இயக்கப்பட்டன. எஸ்.பி. பாலாஜி சரவணன் மேற்பார்வையில் போலீஸார்பலத்த பாதுகாப்பு ஏற்பாடுகளை செய்திருந்தனர். விழா ஏற்பாடுகளை அறங்காவலர் குழுத் தலைவர் அருள்முருகன், கோயில் இணை ஆணையர் கார்த்திக் மற்றும் அறங்காவலர்கள், பணியாளர்கள் செய்திருந்தனர்.

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in