

ருத்ரபிரயாக்: உத்தராகண்ட் மாநிலத்தில் உள்ள கார்த்திக் சுவாமி கோயிலில் ஸ்கந்த மகா யாகம், சங்காபிஷேகம் வெகு விமரிசையாக நடைபெற்றது.தமிழகத்தின் அறுபடை வீடுகளில் இருந்து கொண்டு வரப்பட்ட முருகப் பெருமானின் வஸ்திரங்கள், பூமாலைகள், கிரீடம் ஆகியவை கார்த்திக் சுவாமிக்கு சாற்றப்பட்டன.
உத்தராகண்ட் மாநிலம் ருத்ரபிரயாக் மாவட்டத்தில் உள்ள கிரவுஞ்ச மலையில் ‘கார்த்திக் சுவாமி மந்திர்’ என்ற பெயரில் முருகன் கோயில் அமைந்துள்ளது. இங்கு அருவ வடிவில் முருகப் பெருமான் அருள்பாலிக்கிறார்.
இக்கோயிலில், கடந்த 15-ம்தேதி ஸ்கந்த மகா யாகம், 108 வலம்புரி சங்கு பூஜை விமரிசையாக நடைபெற்றது. தவில், நாதஸ்வர கலைஞர்களின் மங்கள இசையுடன் வழிபாடுகள் தொடங்கின. தமிழகத்தில் இருந்து வந்திருந்த சிவாச்சாரியார்கள் தலைமையில் யாகம்,பூஜைகள் நடைபெற்றன. திருமுறைகள், திருப்புகழ் பாடல்களை ஓதுவார்கள் பாடினர்.
ஆதீன கர்த்தர்கள் பங்கேற்பு: மயிலம் பொம்மபுரம், கூனம்பட்டி கல்யாணபுரி, சிரவை கவுமாரமடாலயம் ஆகிய ஆதீன கர்த்தர்கள் சிறப்பு அழைப்பாளர்களாக பங்கேற்று அருளாசி வழங்கி, வழிபாட்டு நிகழ்ச்சிகளை நடத்தி வைத்தனர். முன்னதாக, அவர்களுக்கு பூரணகும்ப மரியாதைஅளித்து, வரவேற்பு அளிக்கப்பட் டது.
விழாவையொட்டி, தமிழகத்தின் அறுபடை வீடுகளான திருப்பரங்குன்றம், திருச்செந்தூர், பழநி,சுவாமிமலை, திருத்தணி, பழமுதிர்ச்சோலை ஆகிய 6 திருத்தலங்களிலும் முருகப் பெருமானுக்கு அணிவிக்கப்பட்ட வஸ்திரங்கள், பூமாலை, கிரீடம் மற்றும் பூஜை பொருட்களை அந்தந்த கோயிலின் அர்ச்சகர்கள் கொண்டு வந்திருந்தனர். அவை அனைத்தும் கார்த்திக் சுவாமிக்கு சாற்றப்பட்டு, வழிபாடு நடைபெற்றது. பின்னர்,இங்கிருந்து அறுபடை வீடுகளுக்கும் வஸ்திரங்கள் அனுப்பி வைக்கப்பட்டன.
வீணை கலைஞர் ராஜேஷ் வைத்யா, மாண்டலின் யு.ராஜேஷ் குழுவினரின் இசை கச்சேரியும் நடந்தது.
மாநில விமான போக்குவரத்து மற்றும் நிதித் துறை கூடுதல் செயலரான தமிழகத்தை சேர்ந்த ரவிசங்கர், விழா ஏற்பாடுகளை ஒருங்கிணைத்தார்.
செய்தியாளர்களிடம் அவர் கூறியதாவது:
தமிழகத்திலிருந்து ரயில்: நாட்டின் வடக்கு எல்லையில் இமயமலையை ஒட்டியுள்ள மாநிலமான உத்தராகண்டில் தமிழ்க் கடவுள் முருகப் பெருமான் கோயில் அமைந்துள்ளது. ‘சார் தாம்’ எனப்படும் கேதார்நாத், பத்ரிநாத், கங்கோத்ரி, யமுனோத்ரி போல கார்த்திக் சுவாமி கோயிலையும் பிரசித்தி பெறச் செய்யும் நோக்கில் பல்வேறு முயற்சிகளை உத்தராகண்ட் மாநில அரசு மேற்கொண்டு வருகிறது.
இக்கோயிலுக்கு தற்போது அதிக பக்தர்கள் வருகின்றனர். கேதார்நாத், பத்ரிநாத் புனித தலங்களுடன் சேர்த்து கார்த்திக் சுவாமி ஆலயத்துக்கும் தமிழக பக்தர்கள் எளிதாக சென்று தரிசிக்கும் வகையில், தமிழகத்தில் இருந்து ரயில் இயக்க நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது. தங்கும் வசதி, மலைக்கோயிலுக்கு செல்ல குதிரை, டோலி போன்ற வசதிகள் தொடர்ந்து மேம்படுத்தப்படும்.
இவ்வாறு அவர் கூறினார்.
- உத்தராகண்டில் இருந்து எஸ்.ரவிகுமார்