

திருப்பதி: திருப்பதி நகரின் மையப் பகுதியில் அமைந்துள்ள கோவிந்தராஜ பெருமாள் கோயில் ஆயிரம் ஆண்டுகள் பழமையானது.
இங்கு ஸ்ரீதேவி, பூதேவி சமேதமாக, சயன கோலத்தில் படி அளந்த பெருமாளாக கோவிந்தராஜர், பக்தர்களுக்கு அருள் பாலித்து வருகிறார். இக்கோயிலில் ஆண்டாள், ஸ்ரீநிவாசர், ராமானுஜருக்கு தனி சன்னதிகள் உள்ளன. இந்த ஆண்டு பிரம்மோற்சவம் நேற்று கொடியேற்றத்துடன் தொடங்கியது. இதையொட்டி நேற்று காலை உற்சவர்களான ஸ்ரீதேவி, பூதேவி சமேத கோவிந்தர் மற்றும் சக்கரத்தாழ்வாருக்கு சிறப்பு திருமஞ்சனம் நடைபெற்றது.
இதை யடுத்துகோயிலில் உள்ள தங்க கொடி மரத்தில் உற்சவ மூர்த்திகளின் முன்னிலையில், வேத பண்டிதர்கள் வேத மந்திரங்கள் ஓத,மேள தாள முழக்கத்துடன் கருடன்சின்னம் பொறித்த கொடி ஏற்றப்பட்டது. இதனை தொடர்ந்து உற்சவ மூர்த்திகளும் சக்கரத்தாழ்வாரும் தங்க திருச்சியில் மாட வீதிகளில் உலா வந்து பக்தர்களுக்கு அருள் பாலித்தனர். மாலையில் ஊஞ்சல் சேவை நடைபெற்றது. இதையடுத்து ஸ்ரீதேவி, பூதேவிசமேத கோவிந்தராஜர்,பெரிய சேஷ வாகனதில் உலா வந்து பக்தர்களுக்கு அருள் பாலித்தார்.