குடியாத்தம் கெங்கையம்மன் கோயில் சிரசு திருவிழா: லட்சக்கணக்கான பக்தர்கள் அம்மனை தரிசித்தனர்

வேலூர் மாவட்டம் குடியாத்தத்தில் நேற்று நடைபெற்ற கெங்கையம்மன் சிரசு ஊர்வலம். (உள்படம்) விழாவையொட்டி கோயிலில் சிறப்பு அலங்காரத்தில் அருள்பாலித்த கெங்கையம்மன். படங்கள்: வி.எம்.மணிநாதன்
வேலூர் மாவட்டம் குடியாத்தத்தில் நேற்று நடைபெற்ற கெங்கையம்மன் சிரசு ஊர்வலம். (உள்படம்) விழாவையொட்டி கோயிலில் சிறப்பு அலங்காரத்தில் அருள்பாலித்த கெங்கையம்மன். படங்கள்: வி.எம்.மணிநாதன்
Updated on
1 min read

குடியாத்தம்: வேலூர் மாவட்டம் குடியாத்தம் கெங்கையம்மன் கோயில் சிரசுத் திருவிழாவில் லட்சக்கணக்கான பக்தர்கள் கலந்துகொண்டனர்.

இந்தக் கோயிலில் ஆண்டுதோறும் வைகாசி 1-ம் தேதி சிரசுதிருவிழா விமரிசையாக நடத்தப்படுகிறது. இதில், வேலூர் மிட்டுமின்றி, தமிழகத்தின் பல்வேறு மாவட்டங்கள் மற்றும் ஆந்திரா, கேரளா, கர்நாடகா, புதுச்சேரி மாநிலங்களைச் சேர்ந்த லட்சக்கணக்கான பக்தர்கள் கலந்துகொண்டு, அம்மனை தரிசனம் செய்வார்கள்.

நடப்பாண்டு திருவிழா கடந்த ஏப். 29-ல் காப்புக்கட்டுதலுடன் தொடங்கியது. கடந்த 10-ம் தேதிஅம்மனுக்கு திருக்கல்யாண உற்சவம், நேற்று முன்தினம் தேரோட்டம் நடைபெற்றன. விழாவின் முக்கிய நிகழ்வான சிரசுத் திருவிழா நேற்று விமரிசையாக நடைபெற்றது.

இதையொட்டி, நேற்று அதிகாலை பிச்சனூர்பேட்டை, நடுப்பேட்டை பகுதிகளில் இருந்து அம்மனுக்கு சீர்வரிசை மற்றும் பட்டுப்புடவைகள் கொண்டுவரப்பட்டு, தரணம்பேட்டை முத்தியாலயம்மன் கோயிலில் சிறப்பு அபிஷேகம், ஆராதனைகள் நடத்தப்பட்டன.

தொடர்ந்து, அம்மன் சிரசு ஊர்வலம் புறப்பட்டது. வழியெங்கும் புலியாட்டம், கோலாட்டம், சிலம்பாட்டம் ஆகியவை கோலாகலமாக நடைபெற்றது. தரணம்பேட்டை ஜி.என்.செட்டித் தெரு, காந்தி ரோடு,ஜவஹர்லால் தெரு, கோபாலபுரம் வழியாக சிரசு ஊர்வலம் நடைபெற்றபோது, லட்சக்கணக்கான பக்தர்கள் திரண்டு, அம்மனை வழிபட்டனர். மேலும், அம்மன் சிரசு மீது பூச்சரம் போட பக்தர்கள் முண்டியடித்தனர். கோயில் வளாகத்தைச் சுற்றி வந்த பிறகு, அம்மன் சிரசு மண்டபத்தில் உள்ள 7 அடி உயர சண்டாளச்சி அம்மன் உடலில் பொருத்தப்பட்டது.

தொடர்ந்து, அம்மனுக்கு கூழ்வார்த்தல், கண் திறப்பு நிகழ்ச்சிகள் நடைபெற்றன. நேற்று முழுவதும் ஏராளமான பக்தர்கள் அம்மனை தரிசித்தனர். இரவு மீண்டும் சண்டாளச்சி அம்மன் உடலில் இருந்து

கெங்கையம்மன் சிரசு எடுக்கப்பட்டு, சுண்ணாம்புபேட்டை சலவை படித்துறைக்கு ஊர்வலமாகக் கொண்டுவரப்பட்டது. பின்னர், வாண வேடிக்கை நடைபெற்றது. கவுண்டன்ய ஆறு அருகே கட்டப்பட்டு வரும் பாலம், கோபாலபுரம், காமராஜர் பாலம் பகுதிகளில் இருந்து ஆயிரக்கணக்கான பக்தர்கள் இந்நிகழ்வை கண்டு ரசித்தனர்.

விழாவையொட்டி, வேலூர் எஸ்.பி. மணிவண்ணன் தலைமையில் 1,000 போலீஸார் பாதுகாப்புப் பணியில் ஈடுபட்டனர்.

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in