வடபழனி முருகன் கோயிலில் வைகாசி விசாக பிரம்மோற்சவ விழா தொடக்கம் - ‘அரோகரா’ கோஷத்துடன் பக்தர்கள் சுவாமி தரிசனம்

சென்னை வடபழனி முருகன் கோயிலில் வைகாசி உற்வச பிரம்மோற்சவம் கொடியேற்றத்துடன் நேற்று தொடங்கியது. (உள் படம்) சிறப்பு அலங்காரத்தில் பக்தர்களுக்கு அருள்பாலித்த வடபழனி ஆண்டவர். 

| படங்கள்: எஸ்.சத்தியசீலன் |
சென்னை வடபழனி முருகன் கோயிலில் வைகாசி உற்வச பிரம்மோற்சவம் கொடியேற்றத்துடன் நேற்று தொடங்கியது. (உள் படம்) சிறப்பு அலங்காரத்தில் பக்தர்களுக்கு அருள்பாலித்த வடபழனி ஆண்டவர். | படங்கள்: எஸ்.சத்தியசீலன் |
Updated on
1 min read

சென்னை: வடபழனி முருகன் கோயில் வைகாசி விசாக பிரம்மோற்சவம் கொடியேற்றத்துடன் கோலாகலமாக தொடங்கியது. ‘அரோகரா’ கோஷத்துடன் பக்தர்கள் சுவாமி தரிசனம் செய்தனர். வடபழனியில் உள்ள பிரசித்தி பெற்ற முருகன் கோயிலில் வைகாசிவிசாகத்தை முன்னிட்டு 10 நாட்கள் பிரம்மோற்சவ விழா வெகு விமரிசையாக கொண்டாடப்படுகிறது.

இதையொட்டி, நேற்று முன்தினம் மாலை வரசித்தி விநாயகர் திருவீதி உலா நடந்தது. பிரம்மோற்சவத்தின் முதல் நாளான நேற்று காலை 6 மணிக்கு துவஜா ரோஹணம் எனும் கொடியேற்றம் நடந்தது.

இதில் ஏராளமான பக்தர்கள் பங்கேற்று‘அரோகரா’ என்ற பக்தி முழக்கத்துடன் முருகனை தரிசனம் செய்தனர். இதைத் தொடர்ந்து, வள்ளி,தெய்வயானை சமேத சுப்பிரமணியருக்கு சிறப்பு பூஜைகளும், வீதி உலாவும் நடந்தது.

இரவு 7 மணிக்கு வள்ளி தெய்வயானை சமேத சுப்பிரமணியர் மங்களகிரி விமானத்தில் வீதி உலா நடந்தது. பிரம்மோற்சவத்தை முன்னிட்டு தினமும் காலை மற்றும் இரவில் சுவாமி வீதி உலாநடைபெற உள்ளது. 2-வது நாளான இன்று காலை மற்றும் இரவு சூரிய பிரபை, சந்திர பிரபைவாகனத்திலும், 15-ம் தேதி ஆட்டுக்கிடா வாகனத்திலும், 16-ம் தேதி நாக வாகனத்திலும் சுவாமி வீதி உலாநடக்கிறது.

17-ம் தேதி பஞ்சமூர்த்தி புறப்பாடும், 18-ம் தேதி யானை புறப்பாடும் நடைபெறுகிறது. பிரம்மோற்சவத்தின் முக்கிய நிகழ்வான தேரோட்டம் 19-ம் தேதி காலை நடைபெறுகிறது.

அன்று இரவு ஒய்யாளி உற்சவமும், 20-ம் தேதி குதிரை வாகன புறப்பாடும் நடைபெறுகிறது. 21-ம் தேதி வடபழனி ஆண்டவர் வீதி உலா வந்து பக்தர்களுக்கு அருள்பாலிக்கிறார். வைகாசி விசாகமான 22-ம் தேதி காலை 9 மணிக்கு வள்ளி, தெய்வயானை சமேத சண்முகர் வீதி உலாவும், காலை 10 மணிக்கு தீர்த்தவாரி உற்சவமும், கலசாபிஷேகமும் நடக்கிறது.

தொடர்ந்து, மாலை 6 மணிக்குதிருக்கல்யாண உற்சவம், மயில்வாகனத்தில் புறப்பாடும், சுப்பிரமணியர் வீதி உலாவும் நடைபெறுகிறது. பின்னர், துவஜ அவரோஹணம் எனும் கொடியிறக்கத்துடன் பிரம்மோற்சவம் விழா நிறைவு பெறுகிறது.

பிரம்மோற்சவ விடையாற்றி கலை நிகழ்ச்சிகள் 24-ம் தேதி முதல் ஜூன் 2-ம் தேதி வரை தினமும் மாலை நடைபெறுகிறது. இதில் பரதநாட்டியம், சொற்பொழிவு, இன்னிசைக் கச்சேரி, வீணை கச்சேரி, இசைச் சொற்பொழிவு ஆகியவை நடைபெற உள்ளன.

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in