

மதுரை / திண்டுக்கல்: மதுரை திருப்பரங்குன்றம் சுப்பிரமணிய சுவாமி கோயிலில் வைகாசி விசாகத் திருவிழா காப்பு காப்பு கட்டுதலுடன் நேற்று தொடங்கியது.
முன்னதாக, உற்சவர் சந்நிதி யிலிருந்து சுப்பிரமணிய சுவாமி, தெய்வானை மரிக்கொழுந்து அலங்காரத்தில் எழுந்தருளினர். அதைத் தொடர்ந்து, நேற்று மாலை கோயில் வளாகத்திலுள்ள வசந்த மண்டபத்தில் எழுந்தருளினர். அங்கு சுவாமிக்கு சிறப்பு பூஜைகள், தீபாராதனைகள் நடந்தன. இதில் ஏராளமானோர் கலந்துகொண்டு தரிசனம் செய்தனர்.
தினமும் வசந்த மண்டபத்தில் சுவாமி, தெய்வானையுடன் எழுந் தருளி, மூன்று முறை வலம் வந்து தீபாராதனைக்குப் பின் கோயிலை அடைவர். விழா ஏற்பாடுகளை, கோயில் துணை ஆணையர் நா.சுரேஷ், அறங்காவலர்கள் குழுத்தலைவர் ப.சத்யபிரியா, அறங்காவலர்கள் செய்து வருகின்றனர்.
நத்தம் கைலாசநாதர் கோயில்: திண்டுக்கல்லை அடுத்துள்ள நத்தம் கோவில்பட்டியில் உள்ள செண்பகவல்லி அம்பிகா சமேத கைலாசநாதர் கோயிலில் வைகாசி விசாக திருவிழாவையொட்டி நேற்று கொடியேற்றம் நடைபெற்றது. முன்னதாக சுவாமி, அம்பாளுக்கு சிறப்பு அபிஷேகம், ஆராதனைகள் நடைபெற்றன.
முன்னாள் எம்எல்ஏ ஆண்டி அம்பலம், திமுக திண்டுக்கல் மேற்கு மாவட்டப் பொருளாளர் விஜயன், பேரூராட்சித் தலைவர் சேக் சிக்கந்தர் பாட்சா, அதிமுக நத்தம் ஒன்றியக் குழுத் தலைவர் கண்ணன், தக்கார் சரவணன், நிர்வாக அலுவலர் பால சரவணன், உள்ளிட்டோர் பங்கேற்றனர்.