

காஞ்சிபுரம்: காஞ்சிபுரம் வரதராஜ பெருமாள் கோயிலில் வைகாசி பிரம்மோற்சவம் வரும் 20-ம் தேதி தொடங்க உள்ளதால், காந்தி சாலையில் உள்ள திருத்தேர் திறக்கப்பட்டு பராமரிப்பு பணிகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன.
காஞ்சிபுரம் நகரின் மையப் பகுதியில் உலகப் பிரசித்தி பெற்ற வரதராஜ பெருமாள் கோயில் அமைந்துள்ளது. இக்கோயிலில், அனந்த புஷ்கரணி தீர்த்த குளத்தில் அத்திவரதர் சயனகோலத்தில் அமைந்துள்ளதால், உள்ளூர் மற்றும் வெளி மாநிலங்களிலிருந்து ஏராளமான பக்தர்கள் சுவாமி தரிசனத்துக்காக வந்து செல்கின்றனர். மேலும், இக்கோயிலில் ஆண்டுதோறும் வைகாசி மாதத்தில் பிரம்மோற்சவம் நடைபெறுவது வழக்கம். இந்நிலையில், இந்தாண்டுக்கான வைகாசி பிரம்மோற்சவம் வரும் 20-ம் தேதி கொடியேற்றத்துடன் தொடங்க உள்ளது.
இதைத் தொடர்ந்து, நாள்தோறும் காலை மற்றும் மாலையில் பல்வேறு வாகனங்களின் மீது சுவாமி வீதியுலா வரும் நிகழ்ச்சி நடைபெற உள்ளது. விழாவுக்காக கோயிலின் மேற்கு ராஜகோபுரத்தின் முகப்பு பகுதியிலிருந்து 16 கால் மண்டபம் வரையில் பந்தல் அமைக்கும் பணிகள் நடைபெற்று வருகிறது. மேலும், காந்தி சாலையில் உள்ள திருத்தேரின் மேற்கூரை திறந்து பராமரிப்பு பணிகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன.
இதுதவிர, சுவாமி வீதியுலாவின்போது காஞ்சிபுரம்-செங்கல்பட்டு செல்லும் சாலையில் போக்குவரத்து நெரிசல் ஏற்படாமல் இருப்பதற்கான முன்னேற்பாடுகளை போலீஸார் மேற்கொண்டு வருகின்றனர்.