கவுதமி அன்னையும் புத்தரும்

கவுதமி அன்னையும் புத்தரும்
Updated on
1 min read

புத்தரின் வாழ்க்கையில் ஒரு பெண் மிக முக்கியமான இடத்தைப் பிடித்திருந்தார் என்றால், அது பிரஜா கவுதமிதான். புத்தரின் தாய் மகாமாயா, புத்தர் பிறந்த ஏழாவது நாளில் காலமாகிவிட்டார். அதற்குப் பிறகு புத்தரை வளர்த்தவர் பிரஜா கவுதமிதான்.

துறவுக்கு அனுமதி

பிரஜா கவுதமிதான் பெண்களையும் புத்தத் துறவியாக ஏற்றுக்கொள்ளும்படி புத்தரிடம் முதன்முதலில் வலியுறுத்தியவர். புத்தரின் தந்தை சுத்தோதனர் இறந்த பிறகு, பிரஜா கவுதமி துறவு கொள்ள விரும்பினார். கபிலவஸ்துவில் இருந்தபோது, தன்னையும் பிற பெண்களையும் வீடற்ற, பற்றற்ற வாழ்க்கை முறைக்கு ஏற்றுக்கொள்ளும்படி புத்தரிடம் பல முறை அவர் வேண்டினார். ஆனால், புத்தர் துறவு தர மறுத்து, வைசாலி நகரத்துக்குச் சென்றுவிட்டார்.

இதனால் பிரஜா கவுதமி தன் முடியை மழித்துக்கொண்டு, மஞ்சள் நிறத் துறவி உடை தரித்து, சில சாக்கியப் பெண்களையும் உடன் அழைத்துக்கொண்டு புத்தர் இருந்த வைசாலி நகரத்துத் தோப்புக்குச் சென்றார். புத்தரின் விசுவாசமான முதன்மைச் சீடர்களில் ஒருவரான ஆனந்தர், அப்போது பிரஜா கவுதமியைப் பார்த்தார்.

"ஏன் கவுதமி அன்னையே, இப்படி வீங்கிய புழுதி படிந்த கால்களுடன் அழுகையும் துன்பத்துடனும் கதவருகே நின்றுகொண்டிருக்கிறீர்கள்" என்று கேட்டார்.

ஆனந்தரின் பரிந்துரை

புத்தச் சங்கத்தில் பெண்களைச் சேர்த்துக்கொள்ள வேண்டும் என்ற தன் விருப்பத்தைக் கவுதமி மீண்டும் சொன்னார். ஆனால், கவுதமி அன்னையின் வேண்டுகோளைப் புத்தர் ஏற்றுக்கொள்ளவில்லை.

அப்போது புத்தரிடம் ஆனந்தர், "பெண்கள் துறவு வாழ்க்கைக்குத் தகுதி இல்லாதவர்களா?" என்று கேட்டார். நிச்சயம் தகுதி உள்ளவர்கள்தான் என்பதைப் புத்தர் ஒப்புக்கொண்டார்.

புத்தரை அவருடைய குழந்தைப் பருவத்தில் கவுதமி அன்னை சிறப்பாக வளர்த்ததை, ஆனந்தர் அப்போது சுட்டிக்காட்டினார். அதன் பிறகே புத்தர் பெண்களைப் புத்தச் சங்கத்தில் சேர்த்துக்கொண்டார்.

ஆனால், பெண்களுக்குச் சில கடுமையான நல்லொழுக்க நிபந்தனைகளை விதித்தார். பவுத்த சங்கத்தில் பிக்குகளுக்குச் சமமான இடத்தைப் பிக்குணிகளுக்குத் தர புத்தருக்கு முதலில் சம்மதமில்லை. பெண்களின் வரவால் ஆண் துறவிகளின் ஒழுக்கம் பாதிக்கப்படலாம் என்ற கவலைதான் அவருடைய தயக்கத்துக்குக் காரணம். ஆனால், அதெல்லாம் பின்னர் மறைந்தது.

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in