Last Updated : 07 May, 2024 04:10 AM

 

Published : 07 May 2024 04:10 AM
Last Updated : 07 May 2024 04:10 AM

வீரபாண்டியில் சித்திரை திருவிழா தொடக்கம்: 24 மணி நேரமும் பேருந்துகள் இயக்கம்

வீரபாண்டி கோயில் திருவிழாவையொட்டி ராட்டினம் அமைக்கும் பணியில் ஈடுபட்டிருந்த தொழிலாளி.

தேனி: வீரபாண்டி கவுமாரியம்மன் கோயில் சித்திரை திருவிழா இன்று தொடங்குகிறது. இதற்காக 24 மணி நேரமும் சிறப்பு பேருந்துகள் இயக்கப்படுகின்றன. பொழுது போக்கு அம்சமாக ராட்டினங்கள் உள்ளிட்டவை தயார் நிலையில் உள்ளன.

பிரசித்தி பெற்ற வீரபாண்டி கவுமாரியம்மன் கோயில் சித்திரை திருவிழாவானது, ஆண்டுதோறும் சித்திரை கடைசி செவ்வாய்க் கிழமை தொடங்கி, வைகாசி முதல் செவ்வாய்க்கிழமை வரை நடைபெறும். அதன்படி, இந்த ஆண்டுக்கான திருவிழா இன்று (செவ்வாய்க் கிழமை) தொடங்கி 14-ம் தேதி வரை நடைபெறுகிறது. இதற்காக, கடந்த ஏப்.17-ம் தேதி கம்பம் நடப்பட்டு, பக்தர்கள் விரதத்தை தொடங்கினர். அன்று முதல் பக்தர்கள் திருக்கம்பத்துக்கு புனிதநீர் ஊற்றி, அம்மனை வழிபட்டு வருகின்றனர்.

திருவிழாவில 24 மணி நேரமும் நடை திறக்கப்பட்டு வழிபாடுகள் நடைபெறும் என்பதால், பக்தர்களுக்காக பல்வேறு ஏற்பாடுகள் செய்யப் பட்டுள்ளன. மாற்றுத் திறனாளிகள் உள்ளிட்டோர் எளிதில் தரிசனம் செய்யும் வகையில், வளாகத்தில் சிறப்பு வரிசை ஏற்படுத்தப்பட்டுள்ளது. இங்கு பொழுது போக்கு அம்சங்களாக டோரா டோரா, கேட்டர்பில்லர், கொலம்பஸ் கப்பல், மினிடவர், பவர் ரேஞ்சர், ஆக்டோபஸ் உள்ளிட்ட பல்வேறு வகையான ராட்டினங்களும், பனிச்சாரல் குகை, கடல் கன்னி, சாகசக் கிணறு உள்ளிட்டவையும் அமைக்கப்பட்டுள்ளன.

ஆய்வுக்கு உட்படுத்தப்ட்ட நிலையில், இவை அனைத்தும் தயார் நிலையில் உள்ளன. இன்று மாலை முதல் இவை அனைத்தும் இயக்கப் படுகின்றன. திருவிழாவின் முக்கிய நிகழ்வாக மே 10-ம் தேதி தேரோட்டம் நடைபெறுகிறது. இதற்காக அன்று தேனி மாவட்டத்துக்கு உள்ளூர் விடுமுறை அளிக்கப்பட்டுள்ளது. திருவிழா முடியும் வரை 24 மணி நேரமும் சிறப்பு பேருந்துகள் இயக்கப்படுகின்றன.

திண்டுக்கல் - குமுளி தேசிய நெடுஞ்சாலையில் கோயில் அமைந்துள்ளதால், இதர வாகனங்களை மாற்று வழித்தடத்தில் இயக்க உத்தரவிடப் பட்டுள்ளது. அதன்படி, தேனியில் இருந்து சின்னமனூர் மார்க்கமாகச் செல்லும் அனைத்து வாகனங்களும் உப்புக்கோட்டை விலக்கு, குச்சனூர் வழியாகவும், சின்னமனூரில் இருந்து தேனி மார்க்கத்தில் வரும் வாகனங்கள் உப்பார்பட்டி பிரிவில் இருந்து தாடிச்சேரி, தப்புக் குண்டு, கொடுவிலார்பட்டி வழியே தேனி செல்லவும் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.

கோயில் வளாகத்தில் முடிகாணிக்கை கொட்டகை, பெண்கள் உடை மாற்றும் அறை, கழிப்பறை, குடிநீர் உள்ளிட்ட அனைத்து அடிப்படை வசதிகளும் மேற்கொள்ளப்பட்டு, திருவிழாவுக்கு தயார் நிலையில் வைக்கப்பட்டுள்ளதாக, கோயில் நிர்வாகிகள் தெரிவித்தனர்.

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x