Published : 26 Apr 2018 10:09 am

Updated : 26 Apr 2018 10:46 am

 

Published : 26 Apr 2018 10:09 AM
Last Updated : 26 Apr 2018 10:46 AM

மானாமதுரையில் வீர அழகர்

சித்திரைத் திருவிழா, சித்ரா பெளர்ணமி என்றதும் மதுரை மாநகரம்தான் நினைவுக்கு வரும். அங்கு மீனாட்சி அம்மனுக்கும் சொக்கநாதருக்கும் நடக்கும் திருக்கல்யாணம், தேரோட்டம், திக்விஜயம், அழகர் வைகை ஆற்றில் இறங்கும் வைபவம் எல்லாம் கோலாகலமாகக் கொண்டாடப்படும். இதற்கு சற்றும் குறையாத வகையில் இதே திருவிழா காலம்காலமாக மானாமதுரையிலும் கொண்டாடப்பட்டு வருகிறது.

மதுரையின் அரசி மீனாட்சி என்றால் மானாமதுரையில் அவள் பெயர் ஆனந்தவல்லி. அங்கு சொக்கநாதர்; இங்கு சோமநாதர். திருமாலிருஞ்சோலையில் எழுந்தருளி சகோதரியின் திருமணத்தைக் காண வருகிறார் கள்ளழகர். அவருக்கு நிகராக மானாமதுரையில் எழுந்தருளுபவர் வீர அழகர். இப்படி மதுரைக்கு இணையாக சித்ரா பெளர்ணமி திருவிழா மானாமதுரையிலும் விழா களைகட்டும்.


சித்திரைத் திருவிழா நிகழ்வுக்குள் போகுமுன் மானாமதுரை சோமநாதர் ஆலயம், வீர அழகர் ஆலயத்தின் ஸ்தல புராணத்தையும் சற்றுத் தெரிந்துகொள்வோம்.

Maanaa Madurai -2சந்திரனின் பிணி தீர்ந்தது

27 நட்சத்திரப் பெண்களை மனைவிகளாகக் கொண்ட சந்திரன், ரோஹிணி, கார்த்திகை ஆகிய இருவர் மீது மட்டும் தனி அன்பு செலுத்த, இதனால் மற்ற மனைவிகள் வெறுப்படைந்து தம் தந்தையான தட்சனிடம் முறையிடுகின்றனர். கோபம் கொண்ட தட்சன், சந்திரனுக்குச் சாபம் கொடுக்க, வெப்பு நோயால் பாதிக்கப்பட்டு, களையிழந்து தேயத் தொடங்குகிறான். சாபம் நீங்க அகத்திய முனிவரிடம் தீர்வு என்ன என்று சந்திரன் கேட்க, அவர் வடக்கில் இருந்து தெற்கு நோக்கிப் பாயும் நதியின் மேற்குக் கரையில் அமைந்த வில்வ வனத்தில் அருள் காட்சி தரும் லிங்கத்துக்குத் தனியே கோயில் கட்டி பூஜித்தால் உன் பிணி நீங்கும் என்று அருளிச் செய்கிறார். சந்திரனும் அவ்வாறே செய்ய அவன் பிணி நீங்கியதாகச் சொல்லப்படுகிறது. அத்துடன் சந்திரனின் வேண்டுகோளுக்கு இணங்க, சிவபெருமானின் திருமுடியிலும் இடம் பெற்றதாகத் தல வரலாறு தெரிவிக்கிறது.

ராமாயண காலத்தில் ராவணனால் கவர்ந்து செல்லப்பட்ட சீதையைத் தேடி ஸ்ரீராமன் இலங்கைக்குச் செல்லும்போது இத்தலத்துக்கு வானரப் படையுடன் வந்து சோமநாதரை வழிபட்டார். அப்போது, ராமனிடம் ‘சீக்கிரமே சீதையை அடைவாய்’ என்று ஆசி வழங்கியதாகவும் தகவல்கள் தெரிவிக்கின்றன. இங்கு வந்தபோது ராமபிரான் உடன் வந்த வானரச் சேனைகளின் பசியைத் தீர்த்த இடம் என்பதால் வானர மதுரை எனப் பெயர் பெற்று பின்னர் இதுவே மருவி மானாமதுரை என மாறியதாகவும் சொல்லப்படுகிறது.

மானாமதுரையில் அருள் காட்சி தரும் சுந்தரராஜ பெருமாள் எனும் வீர அழகர் கிழக்கு நோக்கி திருமுக மண்டலம் கொண்டு நின்ற திருக்கோலத்தில் சேவை சாதிக்கிறார். நிலமகளும் திருமகளும் உடன் காட்சி தருகின்றனர். செளந்தரவல்லித் தாயார் எனும் பெயரில் மகாலட்சுமியின் தரிசனத்தையும் இங்கே காணலாம்.

தென்திசை நோக்கி வீர அனுமன்

பெருமாளின் வலப்புறம் ஆழ்வார்கள் சேவை சாதிக்கிறார்கள். தென் திசை நோக்கி நின்ற திருக்கோலத்தில் வீர அனுமன் காட்சியளிக்கிறார். இக்கோயில் 13-ம் நூற்றாண்டில் கட்டப்பட்டதாகக் கூறப்படுகிறது.

மாவலி வானதிராயா எனும் அரசனின் கனவில் தோன்றிய நாராயணன், ஓர் எலுமிச்சையை இரண்டாகப் பிளந்து வீசும்படி கூறியதுடன், அதன் ஒருபாகம் விழுந்த இடத்தில் பெருமாளுக்கு ஒரு கோயிலையும், மறுபாகம் விழுந்த இடத்தில் திருக்குளத்தையும் அமைக்கும்படியும் கூறுகிறான். அதன்படியே மன்னன் செய்ய, இங்கிருக்கும் திருக்குளம் நூபுர கங்கை என அழைக்கப்படுகிறது. திருக்குளத்தின் நீர் எலுமிச்சைச் சாறு போல அமிலத் தன்மையுடன் இருப்பதாகக் கூறப்படுகிறது.

மதுரையில் நடப்பது போலவே அழகருக்கு எதிர் சேவை, திரி எடுத்து சாமியாடுவது, பீச்சாங்குழல் சேவை என அனைத்தும் இப்பகுதியில் உள்ள சுற்றுவட்டார மக்களால் உற்சாகத்துடன் கொண்டாடப்படுகின்றன.

கடந்த 19-ம் தேதி கொடியேற்றத்துடன் தொடங்கிய திருவிழா வரும் 27-ம் தேதி திருக் கல்யாணம், 28-ம் தேதி தேர்த் திருவிழா, 29-ம் தேதி எதிர் சேவை, 30-ம் தேதி வீர அழகர் வைகை ஆற்றில் இறங்கும் திருவிழாவும் நடைபெறுகிறது.

சோமநாதரையும் ஆனந்தவல்லித் தாயாரையும் வீர அழகரையும் தரிசித்து வாழ்வில் எல்லா வளங்களையும் பெறுவோம்.

மானாமதுரைக்கு எப்படிப் போகலாம்?

மதுரையிலிருந்து ராமேஸ்வரம் செல்லும் நெடுஞ்சாலையில் சுமார் 45 கி.மீ. தொலைவில் உள்ளது மானாமதுரை. திருக்கோயிலின் தொடர்புக்கு : 9942226962, 9629673713, 9443286951.


Sign up to receive our newsletter in your inbox every day!

More From This Category

More From this Author

x