Published : 30 Apr 2024 08:03 AM
Last Updated : 30 Apr 2024 08:03 AM

இயற்கை எழில் கொஞ்சும் அன்னமலை முருகன் கோயில் @ நீலகிரி!

அன்னமலை முருகன் கோயில்

உதகை: நீலகிரி மாவட்டம் மஞ்சூரில் அமைந்துள்ளது அன்னமலை முருகன் கோயில். குறிஞ்சி நிலத்தில் எழுந்தருளியுள்ள தமிழ் கடவுளான முருகப் பெருமான், கையில் தண்டம் ஏந்தி தண்டாயுதபாணியாக இத்திருத்தலத்தில் காட்சி அளிக்கிறார். அன்னமலையின் சிறப்பு குறித்து பார்ப்போம்.

சுற்றிலும் இயற்கை எழில் கொஞ்சும் மலைகள் சூழ அமைந்துள்ளது தண்டாயுதபாணி கோயில் கொண்டுள்ள அன்னமலை. உதகையில் இருந்து சுமார் 30 கிலோமீட்டர் தொலைவில் இந்த கோயில் அமைந்துள்ளது. இயற்கை மற்றும் இறையருள் என இரண்டு அனுபவங்களையும் ஒருசேர இங்கு செல்பவர்கள் பெறலாம்.

சுமார் அரை நூற்றாண்டுக்கு முன்பு இந்த கோயில் கட்டப்பட்டுள்ளது. அதற்கான பணிகளை தொடங்கியவர் கிருஷ்ண நந்தாஜி. அவரோடு மக்களும் இணைந்து கோயிலை நிறுவியுள்ளனர். கோயிலுக்கு வரும் பக்தர்களுக்கு இடைவிடாது கோயில் நிர்வாகத்தின் சார்பில் அன்னதானம் செய்து கொண்டே உள்ளனர். அதுவே இந்த கோயிலின் சிறப்பு என்றும், அதன் காரணமாகவே இந்த மலை ‘அன்னமலை’ என்றும் அறியப்படுவதாக உள்ளூர் மக்கள் சொல்கின்றனர்.

இந்தக் கோயிலில் பக்தர்களுக்கு காட்சி தரும் முருகப்பெருமான் ஒவ்வொரு நாளும் வெவ்வேறு விதமான அலங்காரத்தில் காட்சி அளிக்கிறார். ராஜ அலங்காரம், ஆண்டி அலங்காரம் என நாளுக்கு நாள் அது மாறுபடுகிறது. விநாயகர், காயத்ரி தேவி, நாகராஜர், நவக்கிரங்கள் முதலிய சன்னதிகளும் கோயிலை சுற்றி அமைந்துள்ளன. விரும்பும் பக்தர்கள் அன்னதான சேவைக்கு நன்கொடை அளிக்கலாம்.

பிரதி மாதம் கிருத்திகை மற்றும் விசேஷ நாட்களில் அன்னமலை தண்டாயுதபாணிக்கு சிறப்பு பூஜைகள் நடக்கின்றன. ஆண்டுக்கு ஒரு முறை சித்திரை மாதத்தில் காவடி விழாவும் வெகு விமரிசையாக இங்கு நடத்தப்படுகிறது. பக்தர்களின் பிரார்த்தனை, குறைகளை களையும் வகையில் இத்தலத்தில் அருள்பாலிக்கிறார் தண்டாயுதபாணி.

சிவன் குகை: இந்தக் கோயிலின் மற்றொரு சிறப்பாக அமைந்துள்ளது சிவன் குகை. அன்னமலை தண்டாயுதபாணி கோயிலில் இருந்து சுமார் 300 மீட்டர் தொலைவில் இந்த குகை அமைந்துள்ளது. குகைக்கு செல்ல கோயில் நிர்வாகத்தின் சார்பில் பாதை ஏற்படுத்தப்பட்டுள்ளது. அன்னமலையில் இருந்து கீழ் பக்கமாக நடைவழியாக இங்கு செல்லலாம்.

மலைப்பாதையில் கவனத்துடன் நடந்து சென்றால் ஒரு குகை வருகிறது. இந்த குகையில் தான் அன்னமலை கோயில் அமைய காரணமாக அமைந்த கிருஷ்ண நந்தாஜி, தவம் செய்ததாக தகவல். அப்படியே இந்த குகையை ஒட்டி அமைந்துள்ள மலைகள், பள்ளத்தாக்கு போன்றவற்றையும் ரசிக்கலாம். இந்த குகைக்கு சென்று வர சுமார் 30 நிமிடங்கள் வரை ஆகும். நீலகிரியில் ட்ரெக்கிங் சென்ற அனுபவத்தையும் இதன் ஊடாக பெறலாம்.

கோயிலுக்கு செல்வது எப்படி? - உதகையில் இருந்து குந்தா வழியாக மஞ்சூர் செல்லலாம். நீலகிரிக்கு சுற்றுலா நிமித்தமாக செல்பவர்கள் அவசியம் பார்க்க வேண்டிய இடங்களில் ஒன்றாக இது அமைந்துள்ளது. உதகையின் புறநகரில் இந்த கோயில் அமைந்துள்ளது குறிப்பிடத்தக்கது.

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x