

கும்பகோணம்: சித்திரை திருவிழாயொட்டி, கும்பகோணம் வட்டம், சுவாமிமலை சுவாமிநாத சுவாமி கோயிலில் இன்று (வியாழக்கிழமை) தேரோட்டம் நடைபெற்றது.
ஆறுபடை முருகன் கோயிலில் 4-ம் படை வீடான கும்பகோணம் சுவாமிமலை சுவாமிநாதர் கோயிலில் சித்திரை திருவிழா ஆண்டுதோறும் சிறப்பாக நடைபெறும். அதன்படி, நாடாப்பாண்டுக்கான திருவிழா கடந்த ஏப்.17-ம் தேதி கொடியேற்றத்துடன் தொடங்கியது. இதனை தொடர்ந்து ஏப்.18-ம் தேதி முதல் வரும் 27-ம் தேதி வரை பல்வேறு வாகனங்களில் சுவாமிகளின் வீதியுலா நடைபெறுகிறது.
இதனிடையே, திருவிழாவின் முக்கிய நிகழ்வான தேரோட்டம் இன்று ( ஏப்.25-ம் தேதி ) நடைபெற்றது. இதில், வள்ளி தெய்வானை உடன் சுப்ரமணியர் சிறப்பலங்காரத்தில் எழுந்தருளி பக்கதர்களுக்கு காட்சியளித்தனர். தேரோட்ட உபயதாரும், ‘தி இந்து’ குழும இயக்குநருமான ரோஹித் ரமேஷ், அறநிலையத் துறை இணை ஆணையர் மோகன சுந்தரம், துணை ஆணையர் உமா தேவி ஆகியோர் தேரோட்டத்தை வடம் பிடித்து இழுத்து தொடங்கி வைத்தனர். இந்நிகழவில் ஏராளமான பக்தர்கள் பங்கேற்று ’அரோகரா, அரோகரா’ என முழக்கமிட்டபடி தேரினை வடம் பிடித்து இழுத்தனர்.