

திருவண்ணாமலை: சித்ரா பவுர்ணமியையொட்டி திருவண்ணாமலையில் லட்சக்கணக்கான பக்தர்கள் நேற்று கிரிவலம் சென்றனர்.
திருவண்ணாமலை அண்ணாமலையார் கோயிலில் ஆண்டுதோறும் சித்ரா பவுர்ணமி விழா விமரிசையாக நடைபெறும். நடப்பாண்டு சித்ரா பவுர்ணமி விழாநேற்று விமரிசையாக நடைபெற்றது. இதையொட்டி நேற்று அதிகாலை மூலவர் மற்றும் அம்மனுக்கு சிறப்பு அபிஷேகம், மகா தீபாராதனை நடைபெற்றது. மேலும், அம்மன் சந்நிதி எதிரே உள்ள சித்திர குப்தன் சந்நிதியிலும் சிறப்பு பூஜைகள் நடைபெற்றன.
சிறப்பு அலங்காரத்தில் அருள்பாலித்த அண்ணாமலையார், உண்ணாமுலை அம்மன் மற்றும்சித்திர குப்தனை பல்லாயிரக்கணக்கான பக்தர்கள் தரிசனம் செய்தனர். ராஜகோபுரம் வழியாக அனுமதிக்கப்பட்ட பக்தர்கள், திருமஞ்சன கோபுரம் வழியாக வெளியே சென்றனர்.
மேலும், மலையே மகேசன் எனப் போற்றப்படும், 14 கி.மீ.தொலைவுள்ள அண்ணாமலையை பக்தர்கள் கிரிவலம்வந்து வழிபட்டனர். லட்சக்கணக்கான பக்தர்களின் கிரிவலம் நேற்றுஅதிகாலை தொடங்கி விடிய விடியநடைபெற்றது. கடும் வெயிலையும் பொருட்படுத்தாமல், ஓம் நமசிவாய என்ற ஐந்தெழுத்து மந்திரத்தை உச்சரித்தபடி பக்தர்கள் கிரிவலம் சென்றனர். ஆதி அண்ணாமலையார் கோயில், திருநேர் அண்ணாமலை மற்றும் அஷ்ட லிங்கங்கள் உள்ளிட்ட கோயில்களில் பக்தர்கள் சுவாமி தரிசனம் செய்தனர்.
இதையொட்டி 150-க்கும்மேற்பட்ட இடங்களில் அன்னதானம் வழங்கப்பட்டது. ஐந்து ஆயிரத்துக்கும் மேற்பட்ட போலீஸார் பாதுபாப்பு பணியில் ஈடுபட்டனர். மேலும், வெளி மாவட்டம் மற்றும் வெளி மாநிலங்களில் இருந்து சிறப்பு பேருந்துகள் மற்றும் ரயில்கள் இயக்கப்பட்டன. திருவண்ணாமலை நகரம் மற்றும் கிரிவலப் பாதையை சுத்தம் செய்யும் பணியில் 1,800 தூய்மைப் பணியாளர்கள் தொடர்ந்து ஈடுபட்டனர்.