

கோவை: சித்ரா பெளர்ணமியை முன்னிட்டு, வெள்ளியங்கிரி மலை ஏற 10 ஆயிரத்துக்கும் மேற்பட்ட பக்தர்கள் திரண்டு வந்தனர்.
கோவையை அடுத்த பூண்டியில் மேற்கு தொடர்ச்சி மலையடிவார பகுதியில் பிரசித்தி பெற்ற வெள்ளியங்கிரி ஆண்டவர் கோயில் உள்ளது. 7-வது மலை உச்சியில் சுயம்பு லிங்கமாக காட்சி தரும் வெள்ளியங்கிரி ஆண்டவரை, மகா சிவராத்திரி முதல் லட்சக் கணக்கான பக்தர்கள் மலை ஏறி தரிசனம் செய்து வருகின்றனர். சித்ரா பௌர்ணமியை முன்னிட்டு நேற்று இரவு ஆயிரக்கணக்கான பக்தர்கள் மலை ஏறினர்.
இது குறித்து, போளுவாம்பட்டி வனச்சரகர் சுசீந்திரநாத் கூறும்போது, “மகா சிவராத்திரி நாளில் 30 ஆயிரம் பேர் வரை மலை ஏறினர். சித்ரா பெளர்ணமியை முன்னிட்டு 10 ஆயிரத்துக்கும் மேலான பக்தர்கள் மலை ஏறி வருகின்றனர். 7 மலைகளை கொண்ட வெள்ளியங்கிரி மலையில் பக்தர்கள் குழுவாகச் சென்று சுவாமி தரிசனம் செய்ய அறிவுறுத்தப்பட்டு வருகின்றனர். முழு உடல் பரிசோதனை செய்து மலை ஏற வேண்டும். 6-வது மலையில் வனத்துறை சார்பில் தற்காலிக முகாம் அமைத்து கண்காணிக்கப்பட்டு வருகிறது. டிரோன் மூலமும் கண்காணிக்கப்படுகிறது” என்றார்.
இளைஞர் உயிரிழப்பு: கடந்த 19-ம் தேதி திருப்பூர் மாவட்டத்தைச் சேர்ந்த வீரக்குமார் ( 31 ) என்பவர் தனது நண்பர்களுடன் வெள்ளியங்கிரி மலை ஏற வந்தார். வெள்ளியங்கிரி ஆண்டவரை தரிசனம் செய்த பிறகு 7-வது மலையில் இருந்து கீழே இறங்கிக் கொண்டிருந்தார். அப்போது எதிர்பாராத விதமாக மலையில் இருந்து கீழே தவறி விழுந்தார். இதில் அவரது கை, வயிற்று பகுதிகளில் பலத்த காயம் ஏற்பட்டது. இது தொடர்பாக வனத்துறையினருக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது.
பூண்டி மலையடிவாரத்தில் இருந்து சென்ற மீட்புக் குழுவினர் ‘டோலி’ மூலம் அவரை கீழே கொண்டு வந்தனர். முதலுதவி சிகிச்சைக்குப் பிறகு கோவை அரசு மருத்துவமனையில் சேர்க்கப்பட்டார். அங்கு அவருக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வந்த நிலையில், சிகிச்சை பலனின்றி நேற்று காலை உயிரிழந்தார். நடப்பாண்டில், வெள்ளியங்கிரி மலை ஏறும் போது உயிரிழந்த பக்தர்களின் எண்ணிக்கை 8 ஆக உயர்ந்துள்ளது.