மதுரை வந்த கள்ளழகருக்கு மூன்றுமாவடியில் எதிர்சேவை: இன்று அதிகாலை வைகை ஆற்றில் இறங்குகிறார்

மதுரை வந்த கள்ளழகருக்கு மூன்றுமாவடியில் எதிர்சேவை: இன்று அதிகாலை வைகை ஆற்றில் இறங்குகிறார்
Updated on
1 min read

மதுரை: கள்ளழகர் கோயில் சித்திரைத் திருவிழாவை முன்னிட்டு அழகர்கோவிலில் இருந்து புறப்பட்ட கள்ளழகருக்கு நேற்று மதுரை மூன்றுமாவடியில் பக்தர்கள் எதிர்சேவை செய்தனர். இன்று அதிகாலை 5.51 மணியளவில் ஆழ்வார்புரம் வைகை ஆற்றில் எழுந்தருள்கிறார்.

அழகர்கோவில் கள்ளழகர் கோயில் சித்திரைத் திருவிழா ஏப்.19-ம் தேதி தொடங்கியது. 3-ம் நாளான 21-ம் தேதி மண்டூக முனிவருக்கு மோட்சம் அளிக்க சுந்தரராஜ பெருமாள், கண்டாங்கி பட்டு உடுத்தி நேரிக்கம்புடன் தங்கப் பல்லக்கில் கள்ளழகர் வேடத்தில் மதுரைக்கு பதினெட்டாம்படி கருப்பணசாமியிடம் உத்தரவு பெற்று புறப்பட்டார்.

நேற்று (ஏப்.22) அதிகாலை 5.30 மணியளவில் மதுரை மாநகர எல்லையான மூன்றுமாவடிக்கு கள்ளழகர் வருகை தந்தபோது, ஆயிரக்கணக்கான பக்தர்கள் கள்ளழகரை வரவேற்று எதிர்சேவை செய்தனர். அதைத்தொடர்ந்து புதூர் மாரியம்மன் கோயில், ரிசர்வ் லைன் மாரியம்மன் கோயில் வழியாக அவுட்போஸ்ட், தல்லாகுளம் அம்பலக்காரர் மண்டகப்படியில் நேற்று மாலையில் எழுந்தருளினார்.

இரவு 8 மணிக்கு மேல் தல்லாகுளம் பிரசன்ன வெங்கடாஜலபதி கோயிலில் கள்ளழகர் தங்கினார். பின்னர் இரவு 11.30 மணிக்கு மேல் திருமஞ்சனமாகி தங்கக்குதிரை வாகனத்தில் எழுந்தருளி, பின்பு வில்லிபுத்தூர் ஆண்டாள் சூடிய மாலையைச் சாற்றி அருள்பாலித்தார்.

இன்று வைகையில் எழுந்தருளல்: இன்று அதிகாலை தல்லாகுளம் கருப்பணசாமி கோயிலுக்கு கள்ளழகர் எழுந்தருள்கிறார். பின்னர் தங்கக்குதிரை வாகனத்தில் ஆயிரம் பொன் சப்பரத்தில் அதிகாலை 3.30 மணியளவில் எழுந்தருள்கிறார்.

பின்னர் முக்கிய நிகழ்வான சித்திரை பவுர்ணமியில் ஆழ்வார்புரம் வைகை ஆற்றில் தங்கக்குதிரை வாகனத்தில் கள்ளழகர் அதிகாலை 5.51 மணிக்கு மேல் 6.10 மணிக்குள் எழுந்தருள்கிறார். முன்னதாக அவரை வீரராகவப்பெருமாள் எதிர்கொண்டு வரவேற்கிறார்.

கள்ளழகர் ஆற்றில் இறங்கும் வைபவத்துக்காக மதுரை மாநகரமே விழாக்கோலத்திலும் உற்சாக வெள்ளத்திலும் காட்சி அளிக்கிறது.

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in