

திருச்சி: திருச்சி மலைக்கோட்டை தாயுமானவர் கோயில் சித்திரை தேரோட்டம் நேற்று நடைபெற்றது. இதில், ஏராளமான பக்தர்கள் வடம்பிடித்து தேர் இழுத்தனர்.
திருச்சி மலைக்கோட்டை மட்டுவார்குழலம்மை உடனாய தாயுமான சுவாமி கோயிலில் ஆண்டுதோறும் சித்திரை தேர்த்திருவிழா சிறப்பாக நடைபெறும். இந்த ஆண்டுக்கான விழா ஏப்.14-ம் தேதி கொடியேற்றத்துடன் தொடங்கியது. தொடர்ந்து, நாள்தோறும் காலையில் சுவாமி, அம்மனுக்கு சிறப்பு அபிஷேக, ஆராதனைகள், மாலையில் வெவ்வேறு வாகனங்களில் எழுந்தருளி வீதியுலாக் காட்சி ஆகியவை நடைபெற்றன. இவ்விழாவின் 5-ம் திருநாளான 18-ம் தேதி சிவ பக்தியில் சிறந்த ரத்தினாவதிக்கு சிவபெருமான் தாயுமானவராக வந்து மருத்துவம் பார்த்த நிகழ்ச்சி நடைபெற்றது.
தொடர்ந்து, விழாவின் 9-ம் நாளான நேற்று முக்கிய உற்சவமான தேரோட்டம் நடைபெற்றது. இதையொட்டி, சோமாஸ்கந்தராக தாயுமானசுவாமி, மட்டுவார் குழலம்மை அம்மன் ஆகியோர் நேற்று அதிகாலை 4.30 மணிக்கு சிறப்பு அலங்காரத்தில் கோயிலிலிருந்து புறப்பட்டு, மலைக்கோட்டை உள் வீதி வழியாக வந்தனர். பின்னர், அதிகாலை 5.40 மணியளவில் சோமாஸ்கந்தர் பெரிய தேரிலும், மட்டுவார்குழலம்மை அம்மன் தனித் தேரிலும் மற்றும் பஞ்சமூர்த்திகள் தனியாக சப்பரத்திலும் எழுந்தருளினர்.
இதைத் தொடர்ந்து தேரோட்டம் காலை 6.10 மணிக்குத் தொடங்கியது. தேரோட்டத்தை தமிழக பள்ளிக் கல்வித் துறை அமைச்சர் அன்பில் மகேஸ் பொய்யா மொழி வடம் பிடித்து இழுத்து தொடங்கி வைத்தார். தொடர்ந்து திரளான பக்தர்கள் வடம் பிடித்து தேர் இழுத்தனர். வீதிகளில் வலம் வந்த தேர்கள் மீண்டும் நிலையை அடைந்தன. சிவனடியார் திருக் கூட்டத்தினர் கைலாய வாத்தியங்களை வாசித்தனர்.
பல்வேறு அமைப்புகள் சார்பில் பக்தர்களுக்கு நீர் மோர், அன்னதானம் உள்ளிட்டவை வழங்கப்பட்டன. தேரோட்ட விழாவுக்கான ஏற்பாடுகளை அறநிலையத் துறை மண்டல இணை ஆணையர் பிரகாஷ் மற்றும் கோயில் உதவி ஆணையர் ( பொறுப்பு ) அனிதா மற்றும் கோயில் ஊழியர்கள், உபயதாரர்கள் செய்திருந்தனர். இவ்விழாவில், இன்று காலை நடராஜர் தரிசனம், பகல் 12 மணிக்கு தெப்பக்குளத்தில் தீர்த்தவாரி, இரவு 7 மணிக்கு வெள்ளி ரிஷப வாகனத்தில் சுவாமி, அம்மன் எழுந்தருளி கொடியிறக்கம் நடைபெறும்.