

மதுரை: கள்ளழகர் கோயில் சித்திரைத் திருவிழாவின் மூன்றாம் நாளான இன்று அழகர் கோவிலிலிருந்து கள்ளழகர் மதுரைக்கு மாலையில் புறப்பட்டா். வழிநெடுகிலும் மண்டகப்படியில் எழுந்தருளும் கள்ளழகருக்கு நாளை மதுரை மூன்றுமாவடியில் எதிர்சேவை நடைபெறும். நாளை மறுநாள் அதிகாலையில் வைகை ஆற்றில் கள்ளழகர் எழுந்தருளும் நிகழ்ச்சி நடைபெறுகிறது.
அழகர்கோவிலில் உள்ள கள்ளழகர் கோயில் சித்திரைத் திருவிழா ஏப். 19-ம் தேதி சுந்தரராஜ பெருமாள் காப்புக்கட்டுதல், திருவீதி உலாவுடன் தொடங்கியது. இரண்டாம் நாள் (ஏப்.20) கோயில் திருக்கல்யாண மண்டபத்தில் சுந்தரராஜ பெருமாள் சிறப்பு அலங்காரத்தில் அருள்பாலித்தார். மூன்றாம் நாளான நேற்று காலையில் தோளுக்கினியானில் சுந்தரராஜபெருமாள் எழுந்தருளினார். பின்னர் மாலையில் மண்டூக முனிவருக்கு மோட்சம் அளிப்பதற்காக கோயிலிலிருந்து தங்கப்பல்லக்கில் சுந்தரராஜ பெருமாள் கள்ளழகர் வேடத்தில் பல்லாயிரக்கணக்கான பக்தர்கள் வெள்ளத்தில் மதுரைக்கு புறப்பட்டார்.
அங்கு ராஜகோபுர வாசலிலுள்ள பதினெட்டாம்படி கருப்பணசாமி சன்னதியில் தீபாராதனை நடந்தது. கருப்பணசாமியிடம் உத்தரவு பெற்று மதுரைக்கு கள்ளழகர் மாலை 6.25 மணியளவில் புறப்பட்டார். பல்லாயிரக்கணக்கான பக்தர்கள் பங்கேற்று தரிசனம் செய்தனர். இவ்விழாவில் அமைச்சர் சேகர்பாபு, கோயில் துணை ஆணையர் கலைவாணன் உள்பட பலர் கலந்து கொண்டனர்.
பின்னர் கோயில் கோட்டைவாசலை கடந்து பொய்கைக்கரைப்பட்டி, கள்ளந்திரி, அப்பன்திருப்பதி என வழிநெடுகிலும் கிராமங்களிலுள்ள மண்டகப்படிகளில் எழுந்தருளி கள்ளழகர் பக்தர்களுக்கு அருள்பாலித்தார்.
நாளை (ஏப்.22) அதிகாலை 5.30 மணியளவில் மதுரை மூன்றுமாவடியில் எதிர்சேவை நடைபெறும். நாளை இரவு தல்லாகுளம் பிரசன்ன வெங்கடாசலபதி கோயிலில் கள்ளழகர் தங்குகிறார். தங்கக்குதிரை வாகனத்தில் சாத்துப்படியாகி ஸ்ரீவில்லிபுத்தூர் ஆண்டாள் சூடிய மாலையை சாற்றி அருள்பாலிக்கிறார். பின்னர் தங்கக்குதிரை வாகனத்தில் புறப்பாடாகி ஆயிரம் பொன் சப்பரத்தில் அதிகாலை 3.30 மணியளவில் எழுந்தருள்கிறார். பின்னர் முக்கிய நிகழ்வாக சித்திரை பவுர்ணமியில் கள்ளழகர் வைகை ஆற்றில் தங்கக்குதிரை வாகனத்தில் நாளை மறுநாள் (ஏப்.23) அதிகாலை 5.51 மணிக்கு மேல் 6.10 மணிக்குள் எழுந்தருள்கிறார்.
அங்கு வைகை ஆற்றிலும் கரைகளிலும் லட்சக்கணக்கான பக்தர்கள் கள்ளழகரை காத்திருந்து தரிசிப்பார்கள். காலை 7.30 மணியளவில் வைகை ஆற்றிலிருந்து புறப்பட்டு ராமராயர் மண்டபம் செல்லும் கள்ளழகர் மீது பக்தர்கள் தண்ணீர் பீய்ச்சுவர். பின்னர், அண்ணாநகர் வழியாக வண்டியூர் வீரராகவப் பெருமாள் கோயிலில் இரவு எழுந்தருளல் நடைபெறும். ஏப்.24ல் வண்டியூர் வைகை ஆற்றிலுள்ள தேனூர் மண்டபத்தில் மண்டூக முனிவருக்கு மோட்சம் அளிக்கிறார்.
அன்றிரவு ராமராயர் மண்டபத்தில் தசாவதாரம் நடைபெறும். ஏப்.25-ல் பூப்பல்லக்கில் எழுந்தருள்கிறார். ஏப்.26-ல் கள்ளழகர் அழகர்மலைக்குப் புறப்படுகிறார். ஏப்.27-ல் காலை 10.32 மணிக்கு மேல் 11 மணிக்குள் இருப்பிடம் வந்து சேருகிறார். ஏப்.28-ல் உற்சவ சாற்றுமுறையுடன் திருவிழா நிறைவுபெறுகிறது. விழா ஏற்பாடுகளை அறங்காவலர் குழுத்தலைவர் வெங்கடாசலம், கோயில் துணை ஆணையர் லெ.கலைவாணன் மற்றும் அறங்காவலர்கள் செய்து வருகின்றனர்.