மீனாட்சி அம்மன் கோயிலில் இன்று திருக்கல்யாணம்

மதுரை மீனாட்சி அம்மன் கோயிலில் திருக்கல்யாண உற்சவத்தையொட்டி உழவாரப் பணி செய்வோர் நேற்று வழங்கிய சீர்வரிசைப் பொருட்கள். படம்: எஸ்.கிருஷ்ணமூர்த்தி
மதுரை மீனாட்சி அம்மன் கோயிலில் திருக்கல்யாண உற்சவத்தையொட்டி உழவாரப் பணி செய்வோர் நேற்று வழங்கிய சீர்வரிசைப் பொருட்கள். படம்: எஸ்.கிருஷ்ணமூர்த்தி
Updated on
1 min read

மதுரை: மதுரை மீனாட்சி அம்மன் கோயில் சித்திரைத் திருவிழாவின் 10-ம் நாளான இன்று (ஏப்.21) மீனாட்சி-சுந்தரேசுவரர் திருக்கல்யாண உற்சவம் விமரிசையாக நடைபெறுகிறது.

மதுரை மீனாட்சி அம்மன் கோயிலில் கடந்த 12-ம் தேதி சித்திரைத் திருவிழா தொடங்கியது. நேற்று முன்தினம் மீனாட்சி அம்மனுக்கு பட்டாபிஷேகம், நேற்று திக்விஜயம் நிகழ்ச்சிகள் நடைபெற்றன.

முக்கிய நிகழ்வான மீனாட்சி-சுந்தரேசுவரர் திருக்கல்யாண உற்சவம் இன்று காலை 8.35 முதல் 8.59 மணிக்குள் நடைபெறுகிறது. இதையொட்டி, திருக்கல்யாண மண்டபத்தை நறுமண வெட்டிவேர்கள், பல வண்ண மலர்கள், பெங்களூரு மலர்கள், தாய்லாந்து ஆர்க்கிட் மலர்கள் உள்ளிட்ட 10 டன் மலர்களால் அலங்கரிக்கும் பணிகள் நடைபெற்றன.

திருக்கல்யாணத்தை தரிசிக்க, கட்டண தரிசனத்தில் 6 ஆயிரம் பேர், இலவச தரிசனத்தில் 6 ஆயிரம்பேர் என மொத்தம் 12 ஆயிரம்பக்தர்கள் மட்டுமே அனுமதிக்கப்படுகின்றனர். மொத்தம் 3 ஆயிரத்துக்கும் மேற்பட்ட போலீஸார் பாதுகாப்புப் பணியில் ஈடுபடுகின்றனர்.

நாளை காலை 6.30 மணியளவில் தேரோட்டம் நடைபெறுகிறது. வரும் 23-ம் தேதி தீர்த்தம், தெய்வேந்திர பூஜை, ரிஷப வாகனங்களில் சுவாமி புறப்பாடுடன் திருவிழா நிறைவு பெறுகிறது.

கள்ளழகர் மதுரை புறப்பாடு: கள்ளழகர் கோயில் சித்திரைத்திருவிழா நேற்று முன்தினம் சுவாமி புறப்பாடுடன் தொடங்கியது. இன்று மாலை அழகர் மலையிலிருந்து கள்ளழகர் மதுரைக்குப் புறப்படுகிறார். வரும் 22-ம் தேதி அதிகாலை மூன்றுமாவடியில் எதிர்சேவை நடைபெறுகிறது. 23-ம் தேதிஅதிகாலை கருப்பணசாமி கோயிலுக்குச் செல்லும் கள்ளழகர், பின்னர் ஆயிரம் பொன்சப்பரத்தில் எழுந்தருள்கிறார். முக்கிய நிகழ்வான வைகை ஆற்றில் கள்ளழகர் எழுந்தருளும் வைபவம் அன்று அதிகாலை நடைபெறுகிறது. லட்சக்கணக்கான பக்தர்கள் கள்ளழகரை வரவேற்று, தரிசிப்பர். சித்திரைத் திருவிழாவால் மதுரை வீதிகள் விழாக்கோலம் பூண்டுள்ளன.

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in