Published : 18 Apr 2024 08:51 PM
Last Updated : 18 Apr 2024 08:51 PM

கள்ளழகர் வைகை ஆற்றில் எழுந்தருளும் தங்கக் குதிரை வாகனம் மதுரை வந்தது!

படம்: எஸ்.கிருஷ்ணமூர்த்தி.

மதுரை: கள்ளழகர் கோயில் சித்திரைத் திருவிழாவின் சிகர நிகழ்ச்சியான வைகை ஆற்றில் எழுந்தருளும் தங்கக்குதிரை வாகனம் தல்லாகுளம் பிரசன்ன வெங்கடாசலபதி கோயிலுக்கு வியாழக்கிழமை வந்தடைந்தது.

மதுரையின் சித்திரைத் திருவிழாக்கள் உலகப் புகழ் பெற்றது. மதுரை மீனாட்சி அம்மன் கோயில் சித்திரைத் திருவிழா ஏப்ரல் 12-ல் தொடங்கி 23-ம் தேதி விழா நிறைவடைகிறது. அதேபோல் கள்ளழகர் கோயில் சித்திரைத் திருவிழா ஏப்.19 தொடங்கி, ஏப். 28-ம் தேதி வரை நடைபெற உள்ளது. அதனையொட்டி முதல் நாளான நாளை (ஏப். 19) மாலை 6.30 மணியளவில் தோளுக்கினியானில் சுவாமி புறப்பாடாகி வீதி உலா நடைபெறும்.

இரண்டாம் நாள் (ஏப்.20) தோளுக்கினியானில் சுவாமி புறப்பாடு நடைபெறும். விழாவின் மூன்றாம் நாளான ஏப். 21 மாலை மாலை 5.15 மணிக்கு மேல் 6.25 மணிக்குள் கொண்டப்ப நாயக்கர் மண்டபத்திலிருந்து சுவாமி சுந்தரராஜப்பெருமாள், கள்ளழகர் திருக்கோலத்தில் மதுரைக்குப் புறப்படுகிறார். ஏப். 22-ல் மதுரை மூன்றுமாவடியில் எதிர்சேவை நடைபெறும்.

அன்றிரவு தல்லாகுளம் பிரசன்ன வெங்கடாசலபதி கோயிலில் சுவாமி தங்குகிறார். ஏப்.23-ல் கள்ளழகர் வைகை ஆற்றில் தங்கக் குதிரை வாகனத்தில் அதிகாலை 5.51 மணிக்கு மேல் 6.10 மணிக்குள் எழுந்தருள்கிறார். பின்னர் ராமராயர் மண்டபத்தில் தண்ணீர் பீய்ச்சுதல் வைபவமும், அதைத்தொடர்ந்து அண்ணா நகர் வழியாக பல்வேறு மண்டகப்படிகளில் எழுந்தருளும் நிகழ்வு நடைபெறும்.

அன்று இரவு வண்டியூர் வீரராகவப் பெருமாள் கோயிலில் சுவாமி தங்குகிறார். ஏப்.24-ல் வண்டியூர் வைகை ஆற்றிலுள்ள தேனூர் மண்டபத்தில் மண்டூக மகரிஷிக்கு கள்ளழகர் மோட்சம் அளிக்கிறார். அன்றிரவு ராமராயர் மண்டபத்தில் தசாவதாரம் நடைபெறும். ஏப். 25-ல் பூப்பல்லக்கில் சுவாமி எழுந்தருள்கிறார். ஏப். 26-ல் கள்ளழகர் மதுரையிலிருந்து அழகர்மலைக்குப் புறப்படுகிறார்.

ஏப்.27-ல் காலை 10.32 மணிக்கு மேல் 11 மணிக்குள் இருப்பிடம் வந்து சேருகிறார். ஏப்.28-ல் உற்சவ சாற்றுமுறையுடன் திருவிழா நிறைவுபெறுகிறது. அதனையொட்டி கள்ளழகர் எழுந்தருளும் தங்கக்குதிரை வாகனம், தசாவதார நிகழ்வின்போது எழுந்தருளும் கருட வாகனம், சேஷ வாகனம் ஆகியவை இன்று காலையில் கள்ளழகர் கோயிலிலிருந்து வாகனங்களில் புறப்பட்டது.

அங்கிருந்து இன்று மதியம் தல்லாகுளம் பிரசன்ன வெங்கடாசலபதி கோயிலுக்கு வந்தது. தங்கக்குதிரை வாகனங்களை சீர்பாதங்கள் இறக்கி வைத்தனர். அதேபோல், கருடவாகனம், சேஷவாகனம் வண்டியூர் வீரராகவப் பெருமாள் கோயிலில் சீர்பாதங்கள் இறக்கி வைத்தனர். விழாவுக்கான ஏற்பாடுகளை கோயில் துணை ஆணையர் லெ.கலைவாணன், அறங்காவலர் குழுத் தலைவர் வெங்கடாசலம் மற்றும் அறங்காவலர்கள், கோயில் பணியாளர்கள் செய்து வருகின்றனர்.

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x