

மதுரை: தேர்தல் திருவிழாவுடன் சித்திரைத் திருவிழாவும் வந்ததால் மதுரை மாநகமே விழாக் கோலம் பூண்டுள்ளது. அழகர் கோயிலில் இருந்து மதுரைக்கு வரும் கள்ளழகரை வரவேற்க 450-க்கும் மேற்பட்ட மண்டகபடிகள் தயாராகி வருகின்றன.
தமிழகத்தில் நடக்கும் திருவிழாக்களில் மதுரை சித்திரைத் திருவிழா புகழ்பெற்றது. மீனாட்சியம்மன் கோயில், அழகர் கோயில் ஆகிய இரு கோயில்களின் ஒருங்கிணைந்த விழாவாகதான் இந்த சித்திரைத் திருவிழா நடைபெறுகிறது. சித்திரைத் திருவிழா மதுரை மாவட்ட மக்கள் மட்டுமில்லாது, முன்பு ஒருங்கிணைந்த மதுரை மாவட்டத்தில் இருந்த திண்டுக்கல், சிவகங்கை, ராமநாதபுரம், தேனி மாவட்ட மக்களும் சேர்ந்து கொண்டாடும் விழாவாகும். அதனால், ஒவ்வொரு ஆண்டும் இந்த திருவிழாவில் லட்சக்கணக்கான பக்தர்கள் திரள்கிறார்கள்.
இந்த ஆண்டு மக்கள் ஆவலுடன் எதிர்பார்த்த சித்திரைத் திருவிழா கடந்த ஏப்ரல் 12-ம் தேதி கொடியேற்றத்துடன் தொடங்கி நடக்கிறது. நாளை ஏப்ரல் 19-ம் தேதி மீனாட்சியம்மன் பட்டாபிஷேகம், நாளை மறுநாள் 20-ம் தேதி திக்கு விஜயம், ஏப்ரல் 21-ம் தேதி மீனாட்சி சுந்தரேஸ்வரர் திருக்கல்யாணம், ஏப்ரல் 22-ம் தேதி திருத்தேரோட்டமும் நடைபெறவுள்ளன. இந்த திருவிழாவுடன் இணைந்த மற்றொரு பிரசித்திப் பெற்ற அழகர்மலை கள்ளழகர் கோயிலில், சித்திரைத் திருவிழாவை முன்னிட்டு ஏப்ரல் 22-ம் தேதி இரவு கள்ளழகர் எதிர்சேவையும், ஏப்ரல் 23-ம் தேதி அதிகாலை கள்ளழகர் வைகையாற்றில் எழுந்தருளும் நிகழ்வும் நடைபெறவுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.
வைகை ஆற்றில் இறங்கி பக்தர்களுக்கு அருள் பாலிப்பதற்காக கள்ளழகர் அழகர் கோயிலில் இருந்து வரும் 21-ம் தேதி மாலை மதுரைக்கு புறப்படுகிறார். அவரை வரவேற்கவும், பக்தர்களுக்கு அவர் அருள்பாலிக்கவும் மண்டகபடிகள் தயார் செய்யப்படுகின்றன. மொத்தம் 450-க்கும் மேற்பட்ட மண்டகபடிகள் உள்ளன. இதில், ஆண்டாண்டு காலமாக உள்ள பாரம்பரிய மண்டகபடிகளும் அடங்கும். சித்திரைத் திருவிழா தொடங்கிவிட்டதால் மண்டகப்படிகளுக்கு வெள்ளையடித்து, அலங்காரம் செய்யும் பணி முழுவீச்சில் நடக்கிறது.
இந்த மண்டகபடிகள், முன் நிழல் பந்தல் அமைத்து அலங்காரம் செய்து கள்ளழகரை வரவேற்க தயார் செய்யப்படுகின்றன. அழகர் கோயிலில் இருந்து வைகை ஆற்றுக்கு எதிர்சேவை வரும்போதும், திருவிழா முடிந்து அழகர் கோயில் செல்லும்போதும் இந்த மண்டக படிகளில் நின்று கள்ளழகர் பக்தர்களுக்கு அருள்பாலிப்பார். அவரை காண மண்டகப்படிகளில் மக்கள் திருவிழா போல் திரள்வார்கள்.
சித்திரைத் திருவிழாவின் முக்கிய நிகழ்வான வைகை ஆற்றில் எழுந்தருள வரும் கள்ளழகரை பார்க்க கடந்த காலத்தில் மாட்டுவண்டிகளிலும் கால்நடையாகவும் கூட்டம் கூட்டமாக மதுரையை நோக்கி வருகிறார்கள். அவர்கள், கிட்டத்தட்ட 10 நாட்கள் மதுரையில் வைகை ஆற்றங்கரையோரங்களில் தங்கி திருவிழாவை கண்டு ரசிப்பார்கள். அதனால், இந்த திருவிழா நாட்களில் வைகை ஆற்றங்கரை முழுவதுமே மக்கள் கூட்டமாக காணப்படும்.
காலப்போக்கில் மக்கள் மதுரையில் முன்போல் 10 நாட்கள் தங்கியிருப்பதை தவிர்த்தாலும், அனைவரும் சொந்தமாக கார், இரு சக்கர வாகனங்கள் வைத்திருப்பதால் தினமும் மதுரை வந்து சித்திரைத் திருவிழாவில் பங்கேற்கிறார்கள். அதனால், ஆண்டுக்கு ஆண்டு இந்த திருவிழாவில் பங்கேற்கும் மக்கள் எண்ணிக்கை அதிகரிக்கிறது.
இந்த திருவிழாவின் சிறப்பு என்னவென்றால், இந்துக்கள் மட்டுமில்லாது அனைத்து மதத்தினரும் பங்கேற்பார்கள். இந்தத் திருவிழாக்களில் பங்கேற்கும் பக்தர்களுக்கு மூன்று வேளை சாப்பாடும், பிரசாதமாக பக்தர்கள், தன்னார்வ அமைப்புகள் வழங்குவார்கள்.
மேலும், மண்டக படிகளில் மூன்று வேளையும் அன்னதானம் வழங்கப்படும். கோடை காலத்தில் சித்திரைத் திருவிழா நடப்பதால் மதுரை நகர் முழுவதுமே தாகத்துக்கும் ஜூஸ், நீர் மோர் தயார் செய்து இலவசமாக வழங்குவார்கள். வட மாநிலங்களில் நடக்கும் கும்பமேளா போல், தமிழகத்தில் நடக்கும் முக்கிய விழாவாக சித்திரைத் திருவிழா கொண்டாடப்படுகிறது. தற்போது மதுரையில் சித்திரைத் திருவிழா களைகட்டத்தொடங்கிவிட்டதால் நகரமே விழா கோலம் பூண்டிருக்கிறது.