

திருத்தணி: திருத்தணி முருகன் கோயிலில் சித்திரை பிரம்மோற்சவ விழா, நேற்று கொடியேற்றத்துடன் தொடங்கியது. திருவள்ளூர் மாவட்டம், திருத்தணியில் உள்ள சுப்பிரமணிய சுவாமி கோயிலில் இந்தாண்டுக்கான சித்திரை பிரம்மோற்சவ விழாநேற்று அதிகாலை கொடியேற்றத்துடன் தொடங்கியது. தங்க, வைர ஆபரணங்கள் மற்றும் வண்ண மலர்களால் அலங்கரிக்கப்பட்ட சுப்பிரமணிய சுவாமி வீற்றிருக்க, மலர்களால் அலங்கரிக்கப்பட்ட கொடிக் கம்பத்தில் கொடியேற்றம் நடைபெற்றது.
தொடர்ந்து நேற்று மாலை சுப்பிரமணிய சுவாமி கேடயத்தில் உலா சென்று பக்தர்களுக்கு அருள்பாலித்தார். வரும் 24-ம் தேதி வரை நடைபெற உள்ள சித்திரை பிரம்மோற்சவ விழாவில், காலை மற்றும் இரவு வேளைகளில் பல்வேறு வாகனங்களில் சுப்பிரமணிய சுவாமி வீதியுலா சென்று பக்தர்களுக்கு அருள்பாலிக்க உள்ளார்.
இவ்விழாவில், முக்கிய நிகழ்வான திருத்தேர் விழா வரும் 20-ம் தேதியும், தெய்வானை திருக்கல்யாணம் 21-ம் தேதியும், கதம்ப பொடி விழா 22-ம் தேதியும், தீர்த்தவாரி 23-ம் தேதியும் நடைபெற உள்ளன என, கோயில் நிர்வாகம் தெரிவித்துள்ளது.
வேதகிரீஸ்வரர் கோயில்: திருக்கழுக்குன்றம் வேதகிரீஸ்வரர் மலைக்கோயிலில் சித்திரை திருவிழா உற்சவம் கொடியேற்றத்துடன் நேற்று தொடங்கியதை அடுத்து, பல்லக்கில் சுவாமி வீதியுலா நடைபெற்றது.
செங்கல்பட்டு மாவட்டம், திருக்கழுக்குன்றம் நகரில் வேதகிரீஸ்வரர் மலைக்கோயில் மற்றும் தாழக்கோயில் அமைந்துள்ளது. மலைக்கோயிலில் சித்திரை திருவிழா நேற்று கொடியேற்றத்துடன் தொடங்கியது. இதில், அதிகாலையில் கொடிமரத்துக்கு சிறப்பு ஆராதனைகள், அர்ச்சனைகள் நடைபெற்றன. பின்னர், காலை 5 மணியிலிருந்து 6 மணிக்குள்ளான முகூர்த்தத்தில் கொடியேற்றம் நடைபெற்றது. பின்னர், மூலவருக்கு சிறப்பு வழிபாடுகள் செய்யப்பட்டன.
இதையடுத்து, சிறப்பு மலர் அலங்காரத்தில் பல்லக்கில் சுவாமி எழுந்தருளி பக்தர்களுக்கு அருள்பாலித்தார். மேலும், முக்கிய வீதிகளின் வழியாக வீதியுலா நடைபெற்றது.
இதேபோல், மாலையில் புண்ணியக்கோடி விமான உற்சவமும் நடைபெற்றது. இதில், ஏராளமான பக்தர்கள் பங்கேற்று சுவாமியை வழிபட்டனர்