

சென்னை: இஸ்கான் அமைப்பின் சார்பில் வடசென்னையில் கிருஷ்ண ரத யாத்திரை விமரிசையாக நடைபெற்றது. ஏராளமான பக்தர்கள் வடம் பிடித்து இழுத்தனர். அகில உலக கிருஷ்ண பக்தி இயக்கம் (‘இஸ்கான்’) சார்பில் ஆண்டுதோறும் ஜகன்னாத் ரத யாத்திரை நடத்தப்படுகிறது.
அதேபோல, வடசென்னை இஸ்கான்அமைப்பின் சார்பில் ஸ்ரீகிருஷ்ணரின் மகிமைகளை எடுத்துரைக்கும் வகையில் ஆண்டுதோறும் ‘கவுர நித்தாய்’ ரத யாத்திரை (ஸ்ரீ கிருஷ்ண ரத யாத்திரை) நடத்தப்பட்டு வருகிறது.
அந்த வகையில், இந்த ஆண்டின் ஸ்ரீகிருஷ்ண ரத யாத்திரை நேற்று விமரிசையாக நடந்தது. பெரம்பூர் பேருந்து நிலையம் அருகே நடந்த விழாவில், பிரம்மாண்ட ரத யாத்திரையை சென்னை இஸ்கான் அமைப்பின் நிர்வாக குழு தலைவர் ரங்க கிருஷ்ண தாஸ் மாலை 3.30 மணி அளவில் தொடங்கி வைத்தார்.
இதைத் தொடர்ந்து, 4.30 மணி அளவில் யாத்திரை தொடங்கியது. ஏராளமான பக்தர்கள் வடம் பிடித்து இழுத்தனர். பாரதி சாலை, பெரம்பூர் நெடுஞ்சாலை, பேப்பர் மில்ஸ் சாலை, 70 அடி சாலை, ஜவஹர் நகர் பிரதான சாலை, எஸ்ஆர்பி கோயில் தெரு வழியாக ரத யாத்திரை சென்றது.
வண்ணமயமான கோலங்கள்: ரதத்தில் ஸ்ரீகிருஷ்ணரும், பலராமரும் வீற்றிருந்து அருள்பாலித்தனர். யாத்திரை முழுவதும் பக்தர்கள் ‘ஹரே கிருஷ்ண ஹரே கிருஷ்ண’ என்று துதிபாடியும், கீர்த்தனையோடு ஆடியபடியும் ஊர்வலமாக சென்றனர். வழிநெடுகிலும் பகவான் ஸ்ரீகிருஷ்ணரை வரவேற்கும் விதமாக வண்ணமயமான ரங்கோலி கோலங்கள் வரையப்பட்டிருந்தன. பக்தர்களுக்கு பிரசாதமும் வழங்கப்பட்டது.
இரவு 7 மணி அளவில் துறையூர் நாடார் கல்யாண மண்டபத்தில் ரதயாத்திரை நிறைவடைந்தது. பின்னர், அங்கு சிறப்பு ஆரத்தி காட்டப்பட்டது. அதைத் தொடர்ந்து, சிறப்புசொற்பொழிவு, நாடகம் நடைபெற்றன. இது 10-வது ஆண்டுவிழா என்பதால், 25.6 அடி உயரத்தில் புதிய ரதமும் இஸ்கான் அமைப்பால் உருவாக்கப்பட்டிருந்தது குறிப்பிடத்தக்கது.
ரத யாத்திரை குறித்து சென்னை இஸ்கான் அமைப்பின் பொது மேலாளர் ஜெயகோபிநாத் தாஸ் கூறும்போது, ‘‘முன்பெல்லாம் மன்னர்கள் தங்களது மக்களை காண இவ்வாறு வலம் வருவார்கள். அதேபோல பகவான் ஸ்ரீகிருஷ்ணரும் மக்களை சந்திக்க பொதுவெளியில் வந்து பக்தர்களுக்கு அருள்பாலிக்கிறார். உலக அமைதிக்காகவும், மக்களிடம் ஆன்மிக விழிப்புணர்வை ஏற்படுத்தவும் இந்த ரத யாத்திரை நடத்தப்படுகிறது’’ என்றார்.