

சென்னை: தி.நகர் திருமலை திருப்பதி தேவஸ்தானம் சார்பில் தி.நகர் வெங்கடேஸ்வர பெருமாள் கோயில் விரிவாக்கம் செய்யப்பட உள்ளது. புதிய கட்டுமானத்துக்காக ஜி.ஆர்.டி. குழுமம் சார்பில் ரூ.1 கோடி நன்கொடை வழங்கப்பட்டுள்ளது.
சென்னை தி.நகர் வெங்கட் நாராயணா சாலையில் திருமலை திருப்பதி தேவஸ்தானத்தின் வெங்கடேஸ்வர பெருமாள் கோயில் உள்ளது. 49 ஆண்டுகளாக திருமலை திருப்பதி தேவஸ்தானம் சார்பில் இக்கோயில் நிர்வகிக்கப்பட்டு வருகிறது. திருமலையில் நடப்பது போலவே இக்கோயிலில் பெருமாளுக்கும், பத்மாவதி தாயாருக்கும் தினசரி பூஜைகள் உள்ளிட்ட அனைத்து உற்சவங்களும் நடத்தப்பட்டு வருகின்றன.
இந்நிலையில், இடப்பற்றாக்குறை காரணமாக கோயில் அருகில் உள்ள இடங்களை விலைக்கு வாங்கி பக்தர்களுக்கான அனைத்து வசதிகளுடன் 3 ஆண்டுகளுக்குள் விரிவாக்கம் செய்ய தேவஸ்தானம் சார்பில் முடிவு செய்யப்பட்டது. அந்தவகையில், புதிய கட்டுமானத்துக்காக அருகில் உள்ள 3 கிரவுண்ட் இடம் ரூ.14 கோடிக்கு வாங்கப்பட்டு உள்ளது. இதுதவிர அருகில் உள்ள மற்ற ஒரு சில இடங்களும் விலைக்கு வாங்கப்பட்டு 11 கிரவுண்ட் இடத்தில், ரூ.50 கோடி மதிப்பில் வெங்கடேஸ்வர பெருமாள் கோயில் விரிவாக்கம் செய்யப்பட உள்ளது.
இதற்காக, பூதானம் என்ற பெயரில் திட்டம் ஒன்றை தொடங்கி, தேவஸ்தான நிர்வாகம் நன்கொடை வசூலித்து வருகிறது. இத்திட்டத்துக்கு பலர் நன்கொடை வழங்கி உள்ளனர்.
இந்நிலையில், சென்னை ஜி.ஆர்.டி. குழும தலைவர் ஜி.ஆர்.ராஜேந்திரன் ரூ.1 கோடிக்கான காசோலையை திருமலை திருப்பதி தேவஸ்தானம் தமிழ்நாடு மற்றும் புதுச்சேரி ஆலோசனை குழுத் தலைவர் ஏ.ஜே.சேகர் ரெட்டியிடம் வழங்கினார். அப்போது, ஜி.ஆர்.டி. குழுமத்தின் இயக்குநர்கள் ஜி.ஆர்.அனந்த பத்மநாபன், ஜி.ஆர்.ராதாகிருஷ்ணன், அவர்களது குடும்பத்தினரும் உடன் இருந்தனர்.