

சென்னை: இஸ்கான் அமைப்பின் சார்பில் வடசென்னையில் ஏப்.14-ம் தேதி ஸ்ரீ கிருஷ்ண ரத யாத்திரை விமரிசையாக நடைபெற உள்ளது. அகில உலக கிருஷ்ணா பக்தி இயக்கம் (இஸ்கான்) சார்பில் ஆண்டு தோறும் ஜகன்நாத் ரத யாத்திரை நடத்தப்பட்டு வருகிறது.
இதேபோல், வடசென்னை இஸ்கான் அமைப்பின் சார்பில் ஸ்ரீ கிருஷ்ணரின் மகிமைகளை எடுத்துரைக்கும் வகையில் கவுர நித்தாய் ரத யாத்திரை நடத்தப்படுகிறது. அந்த வகையில் ஏப்.14-ம் தேதி தமிழ் புத்தாண்டு தினத்தில் 10-ம் ஆண்டு ரத யாத்திரை நிகழ்ச்சி நடைபெற உள்ளது.
பிரம்மாண்டமாக நடைபெறும் இந்த ரத யாத்திரை விழாவை இஸ்கான் நெல்லூர் கோயில் தலைவர் சுகதேவ சுவாமி மகராஜ் மாலை 3 மணி அளவில் தொடங்கி வைக்கிறார். பின்னர் 4.30 மணிக்கு தேர் வடம் பிடிக்கப்படுகிறது.
பாரதிசாலையில் இருந்து ரத யாத்திரைபுறப்பட்டு, பெரம்பூர் நெடுஞ்சாலை,பேப்பர் மில்ஸ் சாலை, 70 அடி சாலை, ஜவகர் நகர் பிரதான சாலை, எஸ்.ஆர்.பி. கோயில் தெரு வழியாக மாலை 6.30 மணிக்கு துறையூர் நாடார் கல்யாண மண்டபத்தை சென்றடைகிறது.
ரதம் இழுத்தபடி பாடியும், கீர்த்தனைக்கு ஏற்றபடி ஆடியும் ரதயாத்திரையில் பக்தர்கள் பங்கேற்பர். ஊர்வலம் முழுவதும் பக்தர்களுக்கு பிரசாதம் விநியோகிக்கப்படும். யாத்திரை முடிவடைந்த பின்னர் துறையூர் நாடார் கல்யாண மண்டபத்தில் ஸ்ரீகிருஷ்ணருக்கு சிறப்பு ஆரத்தி காட்டப்படும்.
இதைத்தொடர்ந்து பக்தர்களுக்கான சிறப்பு சொற்பொழிவுக்கும் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. இந்த பிரம்மாண்ட விழாவில் கவுரவ விருந்தினராக நடிகை குட்டி பத்மினி கலந்து கொள்கிறார்.