

மதுரை: மதுரை மீனாட்சியம்மன் கோயில் திருக்கல்யாண நாளில் இலவச, கட்டண தரிசனத்தில் 12 ஆயிரம் பக்தர்கள் தரிசனம் செய்ய அனுமதி அளிக்கப்படும் என உயர் நீதிமன்றத்தில் தகவல் தெரிவிக்கப்பட்டது.
சிவகங்கையைச் சேர்ந்த மணிகண்டன், மதுரையைச் சேர்ந்த ரமேஷ் ஆகியோர் உயர் நீதிமன்றக் கிளையில் தாக்கல் செய்த மனு: மதுரை சித்திரை திருவிழாவில் பாதுகாப்புப் பணிக்கு போதுமான எண்ணிக்கையில் போலீஸாரை நியமிக்கவும், பக்தர்களுக்குத் தேவையான மருத்துவ சேவைகளை வழங்கவும், குடிநீர், கழிவறை வசதிகளை ஏற்படுத்தவும் உத்தரவிட வேண்டும். இவ்வாறு மனுவில் கூறப்பட்டிருந்தது. இந்த மனு, நீதிபதிகள் சுரேஷ்குமார், அருள் முருகன் அமர்வில் விசாரணைக்கு வந்தது.
அப்போது மதுரை மாவட்ட ஆட்சியர், மாநகர் காவல் ஆணையர், மீனாட்சியம்மன் கோயில், கள்ளழகர் கோயில் தரப்பில் அறிக்கைகள் தாக்கல் செய்யப்பட்டன. அந்த அறிக்கைகளில், மீனாட்சி திருக்கல்யாண நாளில் இலவச தரிசனம் மற்றும் கட்டண தரிசனத்தில் தலா 6 ஆயிரம் பக்தர்கள் அனுமதிக்கப்படுவர். பக்தர்களின் வசதிக்காக ஏ.சி. வசதி ஏற்படுத்தப்படும். பக்தர்களுக்கு குடிநீர் பாட்டில் வழங்கப்படும். பக்தர்கள் திருக் கல்யாணத்தைப் பார்ப்பதற்கு வசதியாக பல்வேறு இடங்களில் எல்இடி திரைகள் அமைக்கப்பட்டு திருக்கல்யாணம் ஒளிபரப்பு செய்யப்படும், எனக் கூறப்பட்டிருந்தது.
மதுரை மாநகர் காவல் ஆணையர் தரப்பில், ஏப்ரல் 21-ல் நடைபெறும் திருக்கல்யாண நாளில் 4 உதவி ஆணையர்கள் தலைமையில் 3 ஆயிரம் போலீஸார் பாதுகாப்புப் பணிக்கு நியமிக்கப்படுவர். எதிர்சேவையின் போது 1,155 போலீஸாரும், கள்ளழகர் வைகை ஆற்றில் இறங்கும் நிகழ்வின்போது 3,500 போலீஸாரும் பணியில் இருப்பர் எனத் தெரிவிக்கப்பட்டது.
இவற்றைப் பதிவு செய்து கொண்ட நீதிபதிகள், மதுரை சித்திரை திருவிழாவின் முக்கிய நிகழ்வுகள் ஏப்ரல் 19-ல் தொடங் கவுள்ள நிலையில் அதற்கு முன்பாகவே ஏற்பாடுகள் தயார் நிலையில் இருக்க வேண்டும். கள்ளழகர் ஆற்றில் இறங்கும் திருவிழாவுக்கு பல லட்சம் பக்தர்கள் வருவதால் போதிய போலீஸ் பாதுகாப்பு வழங்க வேண்டும். நீதிமன்ற உத்தரவு செயல்படுத்தப்பட்டது குறித்து புகைப்படங்களுடன் அறிக்கை தாக்கல் செய்ய வேண்டும் என உத்தரவிட்டனர்.