பாம்புகள் வழிபட்ட கோயில்
தமிழகத்தில் உள்ள சிவத் தலங்களில் சங்கர நாராயண சுவாமி கோயிலும் ஒன்று. மதுரையை ஆண்ட உக்கிரமப் பாண்டிய மன்னரால் பதினொன்றாம் நூற்றாண்டில் எழுப்பப்பட்ட கோயில் இது. அரியும் சிவனும் ஒன்றென உலகிற்கு உணர்த்திய தலம் சங்கரன் கோயில் (சங்கர நைனார் கோயில்).
தனது ஒரு பாகத்தை உடன் பிறந்தவருக்கு விட்டுக்கொடுத்துப் பிறந்த வீட்டுப் பெருமையையும், புகுந்த வீட்டுத் தியாகத்தையும் நிலைநிறுத்தியவள் அன்னை பார்வதி. அரியும், சிவனும் ஒன்றே என்ற தத்துவத்தை உணர்த்தும் வகையில், சங்கரன் கோமதியம்மனுக்கு சங்கர நாராயணராகக் காட்சி தந்த ஆடித் தபசு விழா ஆகஸ்ட் 9-ம் தேதி நடக்கிறது.
தபசு என்றால் தவம். நாக அரசர்களான சங்கன் சிவன் மீதும், பதுமன் திருமால் மீதும் பக்தி கொண்டிருந்தனர். இருவருக்கும் சிவன் பெரியவரா, திருமால் பெரியவரா என்ற வாதம் எழுந்தது. தீர்ப்பு வேண்டிப் பார்வதியிடம் முறையிட்டனர்.
இருவரும் சம சக்தி கொண்டவர்களே என்பதை அவர்களுக்குத் தெரிவிக்க, இணைந்து காட்சி தரும்படி அம்பாள் தவமிருந்தாள். இதையடுத்து, இருவரும் சங்கரநாராயணராகக் காட்சி தந்தனர். அம்பாள், சிவ- விஷ்ணுவை சங்கரநாராயணராக வேண்டித் தவமிருந்து அவரது காட்சியைப் பெற்ற நாளே ஆடித் தபசுத் திருநாள்.
அன்று காலை கோயிலின் உட்பிராகார மேற்கு வீதியில் யாசக சாலை மண்டபத்தில் வைத்து சுவாமி, அம்பாளுக்கு சிறப்பு அபிஷேக, அலங்கார தீபாராதனையைத் தொடர்ந்து, கோமதி அம்பாள் தங்கச் சப்பரத்தில் தவக்கோலத்தில் எழுந்தருளுவார்.
தெற்கு ரத வீதியில் உள்ள தபசு மண்டபத்திற்குச் சென்று கையில் விபூதிப் பையுடன் ஒரு கால் ஊன்றித் தவமிருக்கும் நிகழ்ச்சியும் நடைபெறும். மாலையில் கோயிலில் இருந்து சுவாமி சங்கரநாராயணராக ரிஷப வாகனத்தில் எழுந்தருளி தெற்கு ரத வீதி தபசுப் பந்தலை அடைந்ததும், அங்கு அம்பாளுக்கு சுவாமி சங்கரநாராயணராகக் காட்சி கொடுக்கும் ஆடித் தபசு விழாவும் அப்போது நடக்கிறது.அப்போது, விவசாயிகள் விளைபொருட்களை அம்பாளுக்குக் காணிக்கையாக அளிப்பர்.
சூறைவிடுதல்
அம்பாளின் தபசுக் காட்சியின்போது பக்தர்கள் பருத்தி, மிளகாய் வத்தலையும், விவசாயிகள் நெல், சோளம், கம்பு, மிளகாய் வத்தல், பஞ்சு, பூ என வயலில் விளைந்த பொருட்களை ‘சூறை விடுதல்’ என்ற பெயரில் அம்பாள்மீது வீசியெறிந்து நேர்த்திக் கடனைச் செலுத்துகிறார்கள்.
தொடர்ந்து அம்பாள் மீண்டும் தபசு மண்டபத்தில் தவமிருக்கச் சென்றதும், இரவு 12 மணிக்கு கோயிலில் இருந்து சுவாமி சங்கரலிங்கராக வெள்ளி யானை வாகனத்தில் எழுந்தருளி அம்பாளுக்கு சங்கரலிங்க சுவாமியாகக் காட்சி கொடுக்கும் இரண்டாம் தபசு காட்சி நடக்கிறது.
ஆடித் தபசு கொடியேறிய பின் ‘ஆடிச் சுற்று’ என்ற பெயரில், பக்தர்கள் கோயிலை 101, 501, 1001 என்ற எண்ணிக்கையில் சுற்றி நேர்ச்சை செலுத்துவார்கள். ஆடிச் சுற்று சுற்றுவதால், ஒரு காலில் நின்று தவம் செய்யும் அம்பாளின் கால் வலியைத் தாம் ஏற்பதாக பக்தர்கள் நம்புகின்றனர்.
சங்கரன்கோவிலில் மூலவராக முதல் சந்நிதியில் சங்கரலிங்கமாகவும், இரண்டாம் சந்நிதியில் சங்கரநாராயணர் வடிவிலும், மூன்றாவதாக, தனிச் சந்நிதியில் பார்வதி தேவி கோமதி அம்மனாகவும் வீற்றுள்ளார். அம்பாள் முன் ஆக்ஞா சக்கரம் உள்ளது. மன நோய்கள் எல்லாம் நீங்கிட, அதில் உட்கார்ந்தும் தியானித்துக் கொள்ளலாம்.
கோமதி அம்மன் சந்நிதி முன் உள்ள ஸ்ரீசக்கரத்தில் பிணியாளர்கள், செய்வினைகளால் பாதிக்கப்பட்டோர் அமர்ந்து அம்மனை நோக்கித் தவம் செய்தால் அவையும் நீங்கும். சந்நிதியில் விபூதிப் பிரசாதம், துளசி தீர்த்தம் உண்டு, வில்வார்ச்சனை, துளசி அர்ச்சனை இரண்டுமே உண்டு, இரண்டையும் இணைக்கும் அம்பாளின் குங்குமார்ச்சனையும் இங்கு உண்டு.
புற்றுமண்தான் பிரசாதம்
சங்கரன்கோயில் பாம்புகள் (சங்கன், பதுமன்) வழிபட்ட கோயில் என்பதால் இங்கு புற்று இருக்கிறது. புற்று மண்தான் பிரதான பிரசாதம். நோயுள்ளவர்கள் இந்த மண்ணை நீரில் கரைத்துச் சாப்பிடுகின்றனர். மேலும் வீடுகளில் பூச்சி, பல்லி, வயல்களில் பாம்புத் தொல்லை இருந்தால் மூலவர் சங்கரலிங்கனாருக்கு வேண்டிக் கொண்டு, அந்தந்தப் பூச்சிகளின் உருவங்களை வாங்கி உண்டியலில் காணிக்கையாக அளித்தால் தொல்லை நீங்கும் என்ற நம்பிக்கை நிலவுகிறது.
