

மதுரை: மதுரை கள்ளழகர் திருவிழாவுக்கு போதிய பாதுகாப்பு, அடிப்படை வசதிகளை அரசு செய்ய வேண்டும் என உயர் நீதிமன்ற கிளை உத்தரவிட்டுள்ளது.
மதுரை மானகிரி பகுதியைச் சேர்ந்த வழக்கறிஞர் செல்வகுமார் தாக்கல் செய்த மனுவில் கூறியிருப்பதாவது: ஒவ்வொரு ஆண்டும் சித்திரை திருவிழா வெகு விமரிசையாக நடக்கிறது. சாதி, மதம், இனம்,மொழி என, அனைத்து வேறுபாடுகளை களைந்து பொது மக்களால் கொண்டாடப் படுகிறது. ஆனாலும், கட்டணம் பெற்றுக்கொண்டு சில சாதி அமைப்புக்குச் சொந்தமான தனியார் மண்டகப்படிகளுக்கும், தனியாருக்கு சொந்தமான இடங்களுக்கும் கள்ளழகரை கொண்டு செல்லும் நிலை உள்ளது. இதனால் மக்களிடையே வேறுபாடு ஏற்படும் நிலை உள்ளது.
இது தொடர்பாக அதிகாரிகளிடம் முறையிட்டும் எவ்வித நடவடிக்கையும் எடுக்கவில்லை. இவ்வாண்டு சித்திரை திருவிழாவில் சாதிரீதியான தனியார் மண்டகப்படிகள் மற்றும் தனி நபர்களுக்கு சொந்தமான இடங்களுக்கு கள்ளழகரை கொண்டு செல்ல தடை விதிக்க வேண்டும். மேலும் கள்ளழகரை பாரம்பரிய மண்டகப்படிகளுக்கு மட்டுமே கொண்டு செல்ல உத்தரவிட வேண்டும், என கூறியிருந்தார்.
இம்மனுவை நீதிபதிகள் சுரேஷ் குமார், அருள் முருகன் முன்பு விசாரணைக்கு வந்தது. மனுதாரர் தரப்பில், தனியார் மண்டகப்படிகளுக்கும் சாதி ரீதியான மண்டகப் படிகளுக்கும் கள்ளழகரை கொண்டு செல்வதால் பொருளாதார வேறுபாடு ஏற்படுவதோடு, தேவையற்ற பிரச்சினைகளும் உருவாகும் நிலை உள்ளது, என தெரிவிக்கப்பட்டது. அரசுத் தரப்பில், பல நூற்றாண்டுகளாக இந்த விழா கொண்டாடப்படுகிறது. கடந்த ஆண்டு வரை 483 மண்டகப்படிகளுக்கு அனுமதி வழங்கப் பட்டுள்ளது.
இவ்வாண்டும் அனுமதி கேட்டு விண்ணப்பங்கள் வந்துள்ளன. முறையான ஏற்பாடுகளுடன் அனுமதி கோரினால் மட்டுமே அனுமதி வழங்கப் படுகிறது. தற்போது வரை சாதிய பிரச்சினைகள் ஏற்பட்டதாக புகார் ஏதுமில்லை, என தெரிவிக்கப்பட்டது. இதையடுத்து நீதிபதிகள், சித்திரைத் திருவிழா தென் தமிழகத்தின் பாரம்பரிய கொண்டாட்டம்.
மண்டகப் படிகளை அதிகரிப்பது சாமியை தரிசிக்கும் வாய்ப்பை அதிகரிக்கும் விதமாகவே அமையும். பல லட்சம் பக்தர்கள் இந்த விழாவுக்கு வருவதால் போதிய வசதிகளையும் பாதுகாப்பையும் அரசு தரப்பு உறுதிப் படுத்த வேண்டும். மண்டகப்படி விவாகரத்தில் எந்த புகார்களும் இன்றி அதில் நீதிமன்றம் எந்த உத்தரவும் பிறப்பிக்க முடியாது எனக் கூறி வழக்கை முடித்து வைத்து உத்தரவிட்டனர்.