விளம்பி வருடம் தமிழ் புத்தாண்டு பலன்கள்: மகரம்

விளம்பி வருடம் தமிழ் புத்தாண்டு பலன்கள்: மகரம்
Updated on
2 min read

மகர ராசி வாசகர்களே,

 உலகத்தைவிட உள்மனசு சொல்வதற்கு முக்கியத்துவம் தருபவர்களே! சுக்கிரன் சுகஸ்தானத்தில் வலுவடைந்திருக்கும் நேரத்தில் இந்த விளம்பி ஆண்டு பிறப்பதால் வருமானம் உயரும். வசதி கூடும். புதிய சிந்தனைகள் உதயமாகும். வருங்காலத் திட்டங்கள் நிறைவேறும். சாதுரியமான பேச்சாலும், சமயோஜிதப் புத்தியாலும் பழைய பிரச்சினைகளைத் தீர்ப்பீர்கள். குழந்தை பாக்கியம் கிடைக்கும். பிள்ளைகளால் உறவினர்கள் மத்தியில் அந்தஸ்து உயரும். கடன் பிரச்சினையில் ஒரு பகுதி தீரும். வீட்டுக்குத் தேவையான அடிப்படைத் தேவைகளைப் பூர்த்திசெய்யும் அளவுக்குப் பணவரவு உண்டு. உங்களைச் சுற்றியிருப்பவர்களின் சுயரூபம் தெரிந்து இனிச் செயல்படத் தொடங்குவீர்கள். வங்கிக் கடன் உதவி கிடைக்கும். சிலர் பழைய வீட்டை இடித்துக் கட்டுவீர்கள்.

இந்த ஆண்டு ஆரம்பம் முதல் 03.10.2018 வரை குரு பகவான் 10-ம் வீட்டில் தொடர்வதால் தங்க ஆபரணங்களை யாருக்கும் இரவல் தரவோ வாங்கவோ வேண்டாம். அடிக்கடி உங்களிடம் திறமை குறைந்துவிட்டதாக நினைத்துக்கொள்வீர்கள். பிள்ளைகளிடம் உங்களின் எண்ணங்களைத் திணிக்க வேண்டாம். ஆனால், 04.10.2018 முதல் 12.03.2019 வரை குரு உங்கள் ராசிக்கு லாப வீட்டில் அமர்வதால் அதிர்ஷ்டம் உண்டாகும். திருமணம், சீமந்தம், கிரகப் பிரவேசம் போன்ற சுப நிகழ்ச்சிகளை முன்னின்று நடத்துவீர்கள். அடுத்தடுத்த சுப நிகழ்ச்சிகளால் வீடு களை கட்டும். கணவன் மனைவிக்குள் மனம் விட்டுப் பேசுவீர்கள். இருவரும் கலந்தாலோசித்துச் செலவுகளைக் குறைக்கத் திட்டமிடுவீர்கள். பிள்ளைகளின் பிடிவாதம் தளரும். ஆனால், 13.03.2019 முதல் வருடம் முடியும்வரை குரு பகவான் அதிசார வக்கிரமாகி 12-ல் மறைவதால் ஆக்கபூர்வமான பணிகளுக்காக வெளியிலும் கொஞ்சம் கடன் வாங்க வேண்டியிருக்கும். சிலருக்கு அயல்நாட்டுப் பயணம் அமையும்.

14.04.2018 முதல் 12.02.2019 வரை ராசிக்குள் கேது நிற்பதால் ரத்த அழுத்தத்தால் மயக்கம், மனோ பயம், எதிலும் சந்தேகம் வந்து நீங்கும். ராகுவும் 7-ல் நிற்பதால் கணவன் மனைவிக்குள் கசப்புணர்வு ஏற்படும். சிலருக்குத் திருமணம் தள்ளிப்போகும். ஆனால், 13.02.2019 முதல் ராகு 6-லும் கேது ராசியை விட்டு விலகி 12-ல் அமர்வதால் மருந்து, மாத்திரைகளிலிருந்து விடுதலை கிடைக்கும். வீட்டுக்குத் தேவையான பொருட்களை வாங்குவீர்கள். மகளுக்குத் தடைபட்டுக் கொண்டிருந்த திருமணம் இப்போது கூடிவரும்.

இந்த ஆண்டு முழுவதும் சனி 12-ல் மறைந்து விரயச் சனியாகத் தொடர்வதால் தாய்வழி உறவினர்களுடன் பனிப்போர் வந்து நீங்கும். இளைய சகோதரர்கள் தவறாகப் புரிந்து கொள்வார்கள். சந்தேகப் புத்தியால் நல்லவர்களை இழக்க வேண்டி வரும். யாரை நம்புவது என்ற மனக் குழப்பத்துக்கு ஆளாவீர்கள்.

15.05.2018 முதல் 08.06.2018 வரை சுக்கிரன் 6-ல் மறைவதால் உங்களைப் பற்றிய வதந்திகள், பழி வந்து போகும். கணவன் மனைவிக்குள் அவ்வப்போது குழப்பங்களும் பிரச்சினைகளும் வரும்.

30.04.2018 முதல் 27.10.2018 வரை ராசிக்குள்ளேயே செவ்வாயும் கேதுவும் சேர்வதால் பெரிய நோய் இருப்பதைப் போல நீங்கள் உணருவீர்கள். ஆனால் ஒன்றும் இருக்க வாய்ப்பில்லை. என்றாலும் நல்ல மருத்துவரை ஆலோசித்து மருந்து, மாத்திரை உட்கொள்வது நல்லது.

வியாபாரத்தில் தேங்கிக் கிடந்த சரக்குகளை நவீன உத்தியால் விற்றுத் தீர்ப்பீர்கள். பழைய வாடிக்கையாளர்கள் மீண்டும் உங்கள் கடை தேடி வருமளவுக்குக் கடையை விரிவுபடுத்தி, அழகுபடுத்துவீர்கள். சித்திரை, மாசி, பங்குனி மாதங்களில் லாபம் அதிகரிக்கும். புதிய முதலீடுகளைப் போட்டு போட்டியாளர்களைத் திக்குமுக்காட வைப்பீர்கள். பங்குதாரர்களின் தொந்தரவு குறையும். உத்தியோகத்தில் சித்திரை, வைகாசி, பங்குனி மாதங்களில் புதிய பதவிகள் வரும். உயரதிகாரி உங்களை நம்பி முக்கியப் பொறுப்புகளை ஒப்படைப்பார். சக பணியாளர்களின் சொந்த விஷயங்களில் தலையிட்டு பிரச்சினையைத் தீர்த்துவைப்பீர்கள். கணினித் துறையினருக்கு வெளிநாட்டு நிறுவனத்திலிருந்து புதிய வாய்ப்புகள் தேடி வரும்.

இந்தத் தமிழ்ப் புத்தாண்டு சின்ன சின்ன முடக்கங்களையும் சங்கடங்களைத் தந்தாலும், எதிர்பாராத திடீர் முன்னேற்றங்களும் உயர்ந்த அந்தஸ்தும் தேடித்தருவதாக அமையும்.

பரிகாரம்: கடலூர் மாவட்டம், ஸ்ரீமுஷ்ணம் எனும் ஊரில் எழுந்தருளியிருக்கும் ஸ்ரீபூவராகரை பரணி நட்சத்திரத்தன்று நெய் தீபமேற்றி வணங்குங்கள்.

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in