Last Updated : 05 Apr, 2018 10:51 AM

 

Published : 05 Apr 2018 10:51 AM
Last Updated : 05 Apr 2018 10:51 AM

அதிசய ஆலயம்: தண்ணீரில் மூழ்கியிருக்கும் குகைக் கோயில்

ந்தியாவில் விசித்திரமான கோயில்கள் ஏராளம் உள்ளன. மலைகள், குன்றுகள், காடுகளில் உள்ள கோயில்களுக்கு நீங்கள் சென்றும் வந்திருப்பீர்கள். 300 அடி நீளமுள்ள ஒரு மலைக் குகையில் உள்ள கோயிலைப் பற்றி நீங்கள் கேள்விப்பட்டிருக்கிறீர்களா? இப்படி ஒரு கோயில், கர்நாடகாவில் உள்ளது. அந்தக் கோயிலின் பெயர் ஜர்னி நரசிம்மர் குகைக் கோயில். இந்தக் கோயில் மார்பளவு தண்ணீரில் சூழ்ந்திருப்பது இன்னொரு சிறப்பு.

கர்நாடகாவின் வட கிழக்குப் பகுதியில் உள்ளது பிதர் (Bidar) நகரம். இந்த நகரிலிருந்து சுமார் 5 கிலோ மீட்டர் தொலைவில் உள்ளது இந்தக் கோயில். மனிசூல என்ற சிறிய மலைத்தொடரில் ஜர்னி நரசிம்மர் குகைக் கோயில் அமைந்திருக்கிறது. குன்றுகள், மலைகள் மீது அமைந்திருக்கும் மற்ற கோயில்களுக்குச் செல்வதைப் போல இந்தக் கோயிலுக்கு சென்றுவிட முடியாது.

300 அடி நீளமுள்ள குகையைத் தாண்டி சென்றால்தான் நரசிம்மரை வழிபட முடியும். இது வெறும் குகை மட்டுமல்ல, எப்பொதும் நீரால் சூழந்திருக்கும் குகை. கோடை காலத்தில்கூட 4 அடி முதல் 5 அடி வரை குகையில் நீர் நிறைந்திருக்கும். குகைக்குள் சென்றால், மார்பளவு முதல் கழுத்துவரை தண்ணீர் இருக்கும். தண்ணீரில் நடந்தபடியே சென்றால்தான், கோயிலுக்கு செல்ல முடியும்.

குகையின் இறுதியில் நரசிம்மரும் சிவலிங்கமும் பக்தர்களுக்குக் காட்சித் தருகிறார்கள். நரசிம்மரும் மார்பளவு தண்ணீரில் மூழ்கிதான் காட்சியளிக்கிறார். இங்கே நரசிம்மர் சுயம்புவாகத் தோன்றியதாக தல புராணம் கூறுகிறது. நரசிம்ம பெருமான் இரண்யகசிபுவை பிரகலாதனுக்காக வதம் செய்தபின்னர் ஜலாசுரன் என்ற அசுரனை இந்தக் குகையில் வதம் செய்தார் என்றும் இறுதியில் அசுரன் நீராக மாறி நரசிம்மரின் பாதத்தில் சரணடைந்ததாகவும் தல புராணத்தில் குறிப்பிடப்பட்டுள்ளன.

இந்தக் குகைக் கோயிலில் குறிப்பிடும்படியான இன்னொரு விஷயம் என்னவென்றால், குகையில் உள்ள நீர் எங்கிருந்து வருகிறது என்பதை இதுவரை கண்டுபிடிக்க முடியவில்லை. எனவே, இந்தத் தண்ணீரை அதிசய நீராகப் பார்க்கிறார்கள். குகையில் நிற்கும் தண்ணீரில் பல மூலிகைகள் கலந்திருப்பதால், இதில் நடத்து சென்று நரசிம்மரை வழிப்பட்டால் பலவிதமான நோய்கள் குணமாகும் என்றும் பக்தர்கள் நம்புகிறார்கள். அதனாலேயே இந்தக் குகைக் கோயிலுக்கு வருவோரின் எண்ணிக்கையும் அதிகரித்தவண்ணம் உள்ளது.

சற்று கடினமான பாதைதான் இது. ஆனால், கஷ்டப்பட்டு பாதையைக் கடந்து சென்றால், ஜர்னி நரசிம்மரின் அருள் பரிபூரணமாக கிடைக்கும் என்பது நம்பிக்கை. இந்தக் குகைக் கோயிலுக்கு சென்றுவர ஏதுவாக குகையின் மேற்பரப்பில் விளக்குகளைகளையும் கைப்பிடிகளையும் பொருத்தியுள்ளனர்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x