Last Updated : 22 Feb, 2018 10:40 AM

 

Published : 22 Feb 2018 10:40 AM
Last Updated : 22 Feb 2018 10:40 AM

தைத்திரீய உபநிடதம்: ஆதியும் அந்தமும் ஆனந்தம்

பி

ருகு தன் தந்தையான வருண முனிவரை அணுகி “கடவுள் என்பவர் யார்?” என்று கேட்டான். அதற்கு வருணர் “ உணவு, பிராணன், கண், காது, மனம், பேச்சு ஆகியவையே கடவுள்” என்று கூறினார். அவன் குழம்பியதைக் கண்ட வருணர் மேலும் கூறினார்.

“யாரிடமிருந்து இந்த உயிரினங்கள் அனைத்தும் பிறக்கின்றனவோ, பிறந்தவை யாரால் வாழ்கின்றனவோ, மரணத்துக்குப் பிறகு யாரிடம் ஒடுங்குகின்றனவோ அவரே கடவுள். அவரை அறிய முயல வேண்டும்”

இந்த உபதேசத்தைக் கேட்டதும் பிருகு தவத்தில் ஈடுபட்டான். அனைத்துக்கும் ஆதாரமானவர் கடவுள் என்று கூறிவிட்டு, தன் முயற்சியால் உண்மையைக் கண்டறிய பிருகுவை அறிவுறுத்தினார் வருணர். எல்லா உண்மைகளுமே நமக்குள் உள்ளன. மனத்தையும் புலன்களையும் வசப்படுத்தி, நம்முள் ஆழ்ந்து பார்த்தால், நம்மைப் பற்றிய, பிரபஞ்சத்தைப் பற்றிய, இறைவனைப் பற்றிய அனைத்து உண்மைகளையும் அறியலாம். எனவே, பிருகு தவம் செய்தான்.

‘உணவே கடவுள். உணவில் இருந்தே உயிரினங்கள் தோன்றுகின்றன, வாழ்கின்றன, உணவிலேயே ஒடுங்குகின்றன’ என்று அறிந்தான் பிருகு. இது முதற்படி. பிறகு, “கடவுள் என்பவர் யார்” என்று கேட்டான். அதற்கு வருணர், “தவமே கடவுள்” என்றார்.

‘பிராணனே கடவுள். பிராணனில் இருந்தே உயிரினங்கள் தோன்றுகின்றன, அதனால் வாழ்கின்றன, பிராணனிலேயே ஒடுங்குகின்றன’என்று இரண்டாம் படியாக அறிந்தான். பிறகு வருணரிடம் சென்றான். அவர் திரும்பவும், “தவமே கடவுள். தவத்தால் அவரை அடைவாயாக” என்றார்.

‘மனமே கடவுள். மனத்தில் இருந்தே உயிர்கள் தோன்றுகின்றன. மனத்தாலேயே வாழ்கின்றன. மரணத்துக்குப் பின் மனதிலேயே ஒடுங்குகின்றன’ என்று மூன்றாம்படியாக அறிந்தான் பிருகு. அதை வருணரிடம் கூறினான். அவர் திரும்பவும். “தவமே கடவுள். தவத்தால் அவரை அடைவாயாக” என்றார்.

தவத்தால் அடைவாயாக

‘புத்தியே கடவுள். புத்தியில் இருந்தே உயிரினங்கள் தோன்றுகின்றன. புத்தியாலேயே வாழ்கின்றன. மரணத்துக்குப் பின் புத்தியிலேயே ஒடுங்குகின்றன’ என்று நான்காம் படியாக அறிந்தான் பிருகு. அதை வருணரிடம் கூறினான். “தவமே கடவுள். தவத்தால் அவரை அடைவாயாக” என்றார்.

‘ஆனந்தமே கடவுள். ஏனெனில், ஆனந்தத்தில் இருந்தே உயிரினங்கள் தோன்றுகின்றன. தோன்றியவை ஆனந்தத்திலேயே வாழ்கின்றன. மரணத்துக்குப் பின் ஆனந்தத்தில் ஒடுங்குகின்றன’ என்று அறிந்தான்.

ஐந்து படிகள் தாண்டிய பிறகு இதய வெளியில் ஒளிரும் உண்மையை உணர்கிறான் பிருகு. தன்னை உடம்பாக, பிறந்து இருக்கும் ஒருவனாக அறிந்திருந்த மனிதன் தன்னை மரணமற்ற ஓர் ஆன்மாவாக இப்புள்ளியில் உணர்கிறான். அவன் இறைவனை நாடி தன் பயணத்தைத் தொடரலாம். அல்லது உலக வாழ்க்கையில் ஈடுபடலாம். சிறப்பான வாழ்க்கை வாழ, இந்த ஆன்ம தரிசனம் ஒரு முக்கியப் படி.

கடவுளை அறிந்து உணர்ந்த பின் ஆனந்தமாய், பயனுள்ளதாய் வாழ்க்கையை எவ்வாறு வாழ்வது என்பதை மூன்றாம் பகுதியிலும் அறியலாம். தான் என்ற புள்ளியில் இருந்து உலகைப் பார்ப்பதை விடுத்து, இம்மாபெரும் பிரபஞ்சத்தில் தான் ஒரு சிறு புள்ளி என்பதை உணர்ந்துவிட்டால், வாழ்க்கை வாழ்வதற்கானதாக எத்தகைய சூழ்நிலையிலும் மாறிவிடுகிறது.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x