Last Updated : 08 Feb, 2018 11:32 AM

 

Published : 08 Feb 2018 11:32 AM
Last Updated : 08 Feb 2018 11:32 AM

சிருங்காரத்தின் எல்லை பக்தி!

ரமாத்மாவை ஜீவாத்மா தேடிக் கண்டடைந்து இரண்டறக் கலப்பதை விவரிக்கும் எல்லா முயற்சிகளுமே இப்பூவுலகில் காப்பியங்களாகி இருக்கின்றன; காவியங்களாகியிருக்கின்றன. ஆண்டாள், பக்த மீரா, ராதை என தெய்வீகக் காதலுக்குப் பெருமை சேர்ப்பவர்கள் ஏராளம். அப்படிப்பட்ட ஒன்றுதான் ராதா – கிருஷ்ணனின் லீலைகளை விவரிக்கும் ஜெயதேவரின் கீத கோவிந்தம். பன்னிரண்டாம் நூற்றாண்டில் வாழ்ந்த ஜெயதேவர், பூரி ஜகந்நாதர் ஆலயத்துக்கு அருகிலிருக்கும் கிந்து பில்பம் என்னும் ஊரில் பிறந்தார்.

மேற்கு வங்கத்தின் கடைசி இந்து மன்னன் லஷ்மண சேனா, ஜெயதேவருக்கு கவிராஜா பட்டம் அளித்துக் கௌரவித்திருக்கிறார். ஜெயதேவருடைய மனைவி பத்மாவதி நடனக் கலைஞர். ஜெயதேவரின் வரிகளுக்கு இசைவாக பத்மாவதி அபிநயம் பிடிக்க, சில நேரம் அபிநயங்களால் உந்தப்பட்டு, வார்த்தைகளை மெருகேற்ற, பாட்டும் பரதமுமாக உருப்பெற்றன கீத கோவிந்தத்தின் வரிகள். கீத கோவிந்தத்தின் ஒவ்வொரு பாடலிலும் எட்டுக் கண்ணிகள் இடம்பெற்றிருக்கும் அதனாலேயே இதை அஷ்டபதி என்று அழைத்தனர்.

பக்தியில் நிறையும் காதல்

அஷ்டபதியை இரண்டு விதமாக அணுகலாம். ஒன்று, ஜீவாத்மா பரமாத்மாவை கண்டடைதல். இன்னொரு விதம், ராதை எனும் பக்தை, தன் உடலாலும் மனதாலும் பக்தியாலும் இறைவனை அடையும் முயற்சியை வெளிப்படுத்தும் காவியமாக விளங்குகிறது. சர்வம் கிருஷ்ணார்ப்பணம் என்னும் கருத்துக்கு சிருங்காரம் எனும் கிளைப் பாதையை உண்டாக்குகிறது.

சிருங்காரத்தின் ஆதார ஸ்ருதியும் எல்லையும் பக்திதான். பாரம்பரிய கலைகளின் எல்லையே சிருங்காரம்தான். காதல் பக்தியில் நிறைவுறுகிறது என்பார்கள். இறைவனை அடையும் மார்க்கமாக சிருங்காரத்தை அஷ்டபதியில் ஜெயதேவர் படைத்திருப்பது இதன் சிறப்பு. அதனால்தான் இசை, நடனம், ஓவியம், சிற்பம் என எல்லாக் கலைகளிலும் வெளிப்படுகிறது கீத கோவிந்தத்தின் தத்துவம்.

பரீட்சித்து மகாராஜா சுகமுனிவரிடம் கேட்கிறார்: ராச லீலையால் என்ன பயன்?

அதற்கு சுகமுனிவர் சொல்லும் பதில்: ராசலீலை, பகவான் கிருஷ்ணனது பரிவின் வெளிப்பாடு. பக்தர்களுக்கொரு வரப்பிரசாதம். பக்தர் அல்லாதவர் அதன் வெளிப்படையான சிருங்காரத்தால் கவரப்பட்டு உள்ளே வருவார்கள். பிறகு, சிறிது சிறிதாகத் தெய்வீக நிலைக்கு உயர்வார்கள்.

வைணவ சித்தாந்தத்தின்படி மகாவிஷ்ணு ஒருவர்தான் புருஷோத்தமன். மற்றவர் அனைவரும் பெண்களே! ஒவ்வோர் ஆணிலும் பெண்மையும் ஒவ்வொரு பெண்ணிலும் ஆண்மையும் உண்டு என்பது அறிவியல் உணர்த்தும் நிதர்சனம். ஒவ்வொரு மனிதருக்குள்ளும் ஒரு கூடல் நிகழ்ந்துகொண்டிருக்கிறது.

தளைகளை அறுக்கும் அஷ்டபதி

கீத கோவிந்தத்தில் கண்ணனுடனான கூடலுக்கு ராதை தவிப்பாள். ராதையுடனான கூடலுக்குக் கண்ணனும் ஏங்குவான். எந்த அளவுக்கு ஏங்குகிறான் என்றால், கார்மேகக் கண்ணனின் உடல் ஏக்கத்தால் வெளிறிப்போகும் அளவுக்கு என்கிறார் ஜெயதேவர். ராதையுடன் சேருமாறு கண்ணனிடமும் ராதை இல்லாமல் கண்ணன் படும் வேதனைகளை ராதையிடமும் விடாமல் தூது செல்லும் தோழியின் மனநிலையில் அஷ்டபதியைப் படிக்கும்போது நாமும் தவித்துப் போகிறோம்.

வாத்சல்யத்துக்கு வசப்படாதவர் யார்?

கண்ணன் ஆற்றலுடையவன் ஆனால், அந்த ஆற்றல்தான் ராதா என்பதை அறிவுறுத்துகிறார் கீத கோவிந்தத்தைத் தமிழில் மொழிபெயர்த்திருக்கும் இலந்தை சு.இராமசாமி.

‘மம சிரஸி மண்டனம் தேஹி பத பல்லவமுதாரம்’

‘உன்னுடைய தளிர்ப்பாதங்களை என் தலையில் வை’ என்று இதற்கு அர்த்தம்.

ஒரு குழந்தையை நோக்கி நீங்கள் ஓரடி எடுத்துவைத்தால், குழந்தை உங்களை நோக்கி நான்கு அடிகள் எடுத்துவைக்கும். இறைவனும் அப்படித்தான். அதனால் குழந்தையும் தெய்வமும் ஒன்று என்று சொல்லலாம். பக்தனுக்காக இறைவன் எந்த அளவுக்கு இறங்கிவருகிறான் என்பதை கீத கோவிந்தம் காட்டியிருக்கிறது.

ராதையின் பரிசுத்தமான பக்தியால், வாத்சல்யத்தால் கண்ணன் வசப்பட்டு இந்த வரிகளைச் சொல்வதாக ஜெயதேவர் எழுதிவிடுகிறார். அதன் பிறகு, இதென்ன அபச்சாரமாக இருக்கிறதே என்று அதை அடித்துவிட்டு, ஆற்றில் நீராடச் செல்கிறார். ஜெயதேவரின் தோற்றத்தில் வரும் கண்ணனோ, அடித்த வரிகளை மீண்டும் எழுதிவைக்கிறார். ஜெயதேவருடைய மனைவி பத்மாவதி கொடுக்கும் பிரசாதத்தையும் உண்டுவிட்டுச் செல்கிறார்.

ஆற்றில் குளிக்கச் சென்ற ஜெயதேவர் திரும்பிவந்து பார்த்தால், ஓலையில் தான் அடித்த வரிகள் மீண்டும் எழுதப்பட்டிருப்பதைக் காண்கிறார். ‘நீ எழுதினாயா?’ என்கிறார் மனைவியிடம். ‘நீங்கள்தானே எழுதிக் கொண்டிருந்துவிட்டு, உணவருந்தினீர்களே’ என்கிறார். இது கண்ணனின் லீலைதான் என்பதை ஜெயதேவர் உணர்ந்துகொள்கிறார்.

08chsrs_radheeeஅஷ்டபதியைப் பின்தொடர்ந்த ஜகந்நாதர்

பூரி ஜகந்நாதர் கோயிலுக்குச் சென்ற அரசன், ஜகந்நாதரின் ஆடைகள் கிழிந்திருப்பதைப் பார்த்தாராம். ஏன் இப்படி என்று அர்ச்சகர்களிடம் கோபப்பட்டாராம் மன்னன்.

தினமும் புதிது புதிதாகத்தான் ஆடைகளைச் சூட்டுகிறோம். ஆனாலும், ஆடைகள் கிழிவதன் மர்மம் புரியவில்லை என்றார்களாம் அர்ச்சகர்கள். ஜகந்நாதரே இந்தக் குழப்பத்துக்கு என்ன காரணம் என்று சொன்னாராம். அது, கீத கோவிந்தம் பாடல்களை யார் பாடினாலும் அவர்களின் பின்னால் நான் போய்விடுவேன். ‘ஸ்ரித கமலா’ என்னும் பாடலை மாடு மேய்க்கும் ஒரு பெண் பாடிக்கொண்டே போவாள்.

அவளின் பின்னாலேயே காட்டுக்குள் செல்வதால், கல், முள்ளில் ஆடைகள் மாட்டி கிழிந்துவிடுகின்றன என்றாராம் ஜகந்நாதர். உடனே அரசன் இனி அஷ்டபதி பாட்டைக் கண்ட இடங்களில் பாடக் கூடாது. கோயிலில் ஜகந்நாதரின் முன்பாக மட்டுமே பாட வேண்டும் என்று ஆணை பிறப்பித்தாராம்.

ஊடலின் முற்றுப்புள்ளி இன்னொரு கூடலுக்கான தொடக்கப்புள்ளியாக, தொடர் புள்ளிகளாக சிற்றின்பமாகக் கருதப்படும் காட்சித் தொகுப்புகள், பரிபூரணமான பேரின்பத்தை நோக்கி இழுத்துச் செல்லும் கலைப் படைப்பாக பக்தர்களின் மனதில் சிம்மாசனமிட்டு அமர்ந்திருக்கிறது அஷ்டபதி.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x