Last Updated : 15 Feb, 2018 10:31 AM

 

Published : 15 Feb 2018 10:31 AM
Last Updated : 15 Feb 2018 10:31 AM

கன்ஃபூசியஸ் கதை: அறிவு அறியாமை பாசாங்கு

ரு சமயம், கன்ஃபூசியஸ் கிழக்குச் சீனாவுக்குப் பயணம் மேற்கொண்டிருந்தார். வழியில் சத்தமாக விவாதித்துக்கொண்டிருந்த இரண்டு இளைஞர்களை எதிர்கொண்டார். அவர்கள் இருவரும் எதைப் பற்றி வாதித்துக்கொண்டிருக்கின்றனர் என்று கன்ஃபூசியஸ் கேட்டார். “நான் காலையில் உதிக்கும்போது கதிரவன் அருகில் இருப்பதாகவும், மதியத்தில் தொலைவில் இருப்பதாகவும் நம்புகிறேன்” என்று ஓர் இளைஞன் கூறினான்.

மற்றோர் இளைஞனும் நம்பிக்கையுடன், “நான் மதியம் கதிரவன் அருகில் இருப்பதாகவும், காலை கதிரவன் நம்மைவிடத் தூரத்தில் இருப்பதாகவும் நினைக்கிறேன்” என்றான்.

முதலாவது இளைஞன் தன்னுடைய கருத்தை மீண்டும் வலியுறுத்தினான். “காலையில் உதிக்கும் கதிரவன், வாகனத்தின் சக்கரம் அளவுக்குப் பெரிதாக இருக்கிறான். ஆனால், மதியத்துக் கதிரவனோ உணவுக் கவளத்தைப் போன்று சிறியதாக இருக்கிறான். ஒரு பொருள் பெரிதாக இருந்தால் அது அருகில் இருப்பதாகவும், சிறியதாக இருந்தால் அது தொலைவில் இருப்பதாகவும்தானே அர்த்தம்?” என்றான்.

இரண்டாவது இளைஞன், “காலையில் கதிரவன் உதிக்கும்போது, வானிலை குளிர்ந்திருக்கும். அதுவே மதியத்தில் அனலாக இருக்கும். எரிந்துகொண்டிருக்கும் ஒரு பொருள், அருகிலிருக்கும்போதுதானே நம்மைக் கதகதப்பாக வைத்திருக்கும்?” என்றான்.

தங்கள் கருத்துகளை முன்வைத்த பிறகு, இரண்டு இளைஞர்களும் கன்ஃபூசியஸின் கருத்தைக் கேட்டனர். அதற்கு கன்ஃபூசியஸ், “உண்மையிலேயே எனக்குத் தெரியாது!” என்று பதிலளித்தார்.

ஞானி கன்ஃபூசியஸ் தன் மாணவர்களிடம், “நான் உங்களுக்கு அறிவைப் பற்றிக் கற்பிக்கப் போகிறேன். உங்களுக்கு எது தெரியுமோ, அதைத் தெரியும் என்று சொல்லுங்கள். உங்களுக்கு எது தெரியாதோ அதைத் தெரியாது என்று சொல்லுங்கள். அப்போதுதான் நீங்கள் உண்மையிலேயே அறிவார்ந்தவர்களாக விளங்குவீர்கள்” என்று சொல்வார்.

ஞானியாக இருந்தும் அவர், “எனக்குத் தெரியாது” என்று சொல்லப் பயப்படவேயில்லை. அவர் பாசாங்கு செய்வதற்குப் பதிலாக, உண்மையை ஒப்புக்கொள்வதைத் தேர்ந்தெடுத்திருக்கிறார். ஏன் எல்லாவற்றையும் அறிந்துவைத்திருப்பதைப் போன்று பாசாங்கு செய்ய வேண்டும்? அப்படிச் சொல்லி எதற்காக அறியாமையின் உலகத்தில் வாழ வேண்டும்?

அதைவிட, தினமும் புதிய விஷயங்களைக் கற்றுகொள்வது சிறந்தது.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x